முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள்

107

சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை நினைவு நாளான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்களை நாம் இங்கு தருகின்றோம்.

இந்த கருத்துக்களில் சிலர் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மிகவும் துயரமான இனஅழிப்பு நாள் – நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மான்

சிறீலங்கா அரசின் இனஅழிப்பில் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாளை இலங்கை தமிழ் மக்கள் உலகம் எங்கும் நினைவுகூர்ந்து வருகின்றனர். கடந்த 11 வருடங்களாக அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த தீர்மானத்தில் இருந்தும் சிறீலங்கா விலகியுள்ளது. எனவே தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக நாம் எம்போதும் அவர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும்.

சிறீலங்காவில் இடம்பெற்றது இன அழிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் கல்போன்

போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்டவர்களை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அங்கு ஒரு இனஅழிப்பு நிகழ்ந்துள்ளது. தமிழ் மக்கள் சுயாட்சி அதிகாரம் மற்றும் நீதிக்கு உரித்துடையவர்கள். அது அவர்களுக்கு கிடைக்க வேண்டும். கடந்த 10 வருடங்களாக போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இனத்திற்கு நீதியை பெற்றுக்கொடுக்க நாம் முன்வரவேண்டும் – திரேசா விலியர்ஸ்

போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களை சிறீலங்கா அரசு திட்டமிட்டு குண்டுகளை வீசி படுகொலை செய்துள்ளது. அங்கு 10 தொடக்கம் 100 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அவர்களுக்கான நீதி கிடைப்பதற்கு நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.