முருகனை நளினி சந்திக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  

82
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினிக்கு அனுமதி வழங்கும்படி தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் சிறையில் கடந்த மாதம் நடைபெற்ற சோதனையின் போது, முருகனின் அறையில் இருந்து கைத்தொலைபேசியும், சிம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி, அவரை தனிச்சிறையில் அடைத்ததுடன், அவரை அவரது மனைவி நளினி உட்பட அவரது உறவினர்கள் சந்திப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முருகன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தார். அவரிற்கு ஆதரவாக அவரின் மனைவி நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்.

சிறைத்துறை அதிகாரிகளின் கோரிக்கையின்படி நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டார். பின்னர் முருகனும் 17 நாட்களின் பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். ஆனால் ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து முருகன் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அவரின் உண்ணாவிரதம் 3 நாட்களாக தொடர்ந்து வருகின்றது. இதேவேளை முருகனை சந்திக்க அனுமதிக்குமாறு நளினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், முருகனை சந்திக்க நளினி மற்றும் அவரின் உறவினர்களுக்கு அனுமதி வழக்குமாறு சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முருகனுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.