முகங்கள் வேறாகலாம் முனைப்பு ஒன்றுதான் – கல்யாணி

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல்
நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போதுள்ள ஜனாதிபதியான
மைத்திரிபால சிறிசேன, 08.01.2015இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று,
தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். இவரின் பதவிக் காலம்2020 ஜனவரி
முடிவடையவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தபயா
ராஜபக்ஸவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணசிங்க பிரேமதாசாவின்
மகனான சஜித் பிரேமதாசாவும் போட்டியிடவுள்ளனர். இவர்கள் உட்பட 35பேர்
இத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழரான
எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடுகின்றார்.

இலங்கை சுதந்திரம் அடைந்த போது, ஜனாதிபதி என்ற பதவியில் எவரும்
இருக்கவில்லை. நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமரிடமும் ஆளுநரிடமும்
காணப்பட்டது. 1972இல் இலங்கை ஜனநாயகக் குடியரசு ஆகியதும் நடைமுறைக்கு
வந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கமைவாக அதிகாரம் கொண்ட ஆளுநர்
ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார். இருந்தாலும் இந்த ஜனாதிபதி பதவி
அதிகாரமற்றதாகவே காணப்பட்டது. அப்போதைய ஜனாதிபதியாக வில்லியம்
கோபல்லாவ பதவி வகித்தார்.

இவரைத் தொடர்ந்து J.R.ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாசா, D.B.விஜேதுங்க,
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஜனாதிபதிகளாகபதவி வகித்துள்ளனர்.

1978இல் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு தனித்
தேர்தல் மூலம் ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் முறை அமுலிற்கு வந்தது. இது
பாராளுமன்றத்தை சாராத நீண்ட ஆட்சிக் காலத்தைக் கொண்ட, அதிகாரம் உள்ள
ஜனாதிபதி முறையாக அமைந்தது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்
தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும்,
பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
மேலும், ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது என்ற சட்டமும்
அமுலாகியது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் ஜனாதிபதி பதவி இழக்க நேரிடும். நாட்டில் அவசரகாலசட்டத்தைபிறப்பிக்க முடியும். இதன் போது ஜனாதிபதி பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள்:

இலங்கையின் ஜனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும்
ஈடுபடக்கூடியதாக உள்ளார். இதற்கமைவாக முதலாவது சர்வாதிகாரம் கொண்ட
ஜனாதிபதியாக J.R.ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டார். 23 ஜுலை 1977 தொடக்கம் 01
ஜனவரி 1989 வரை இவர் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.இவரின் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. இன அழிப்பில் கொக்கட்டிச்சோலைப் படுகொலை, 1981 யாழ். நூலக
எரிப்பு, 1983இல் இடம்பெற்ற பாரிய ஜுலை இனப்படுகொலை, வெலிக்கடைச்
சிறைப் படுகொலை போன்றவற்றை குறிப்பிட்டுக் கூறலாம்.image 0223dc7bc7 முகங்கள் வேறாகலாம் முனைப்பு ஒன்றுதான் - கல்யாணி

இவ்வளவு இனப்படுகொலையும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நேரடிக்
கண்காணிப்பிலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும்.

இவரைத் தொடர்ந்து ரணசிங்க பிரேமதாசா ஆட்சிக்கு வந்தார். இவர் 02 ஜனவரி
1989 தொடக்கம் 01 மே 1993 வரை பதவியில் இருந்தார். ஜே.ஆர். ஜெயவர்த்தன
பாதியில் விட்டுச் சென்ற இனப்படுகொலைகளை பிரேமதாசா தொடர்ந்துமேற்கொண்டார். இவரின் அரசிற்கு எதிர்ப்புத் தெரிவித்த பலர் கடத்தப்பட்டுகாணாமல் ஆக்கப்பட்டனர். கடத்தப்பட்ட பலர் களனி ஆற்றில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் ஏராளமான தமிழினப்
படுகொலைகள் இடம்பெற்றிருக்கிறது.

பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளின்
பட்டியலைப் பார்க்கின்றபோது, சத்துருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலை
படுகொலை, ஒட்டுசுட்டான் படுகொலை, புல்லுமலை படுகொலை, புதுக்குடியிருப்பு
சந்தி விமானக் குண்டுத்தாக்குதல், உருத்திரபுரப் படுகொலை, வங்காலை
படுகொலை, வட்டக்கச்சி படுகொலை என அனைத்தும் இவரது காலத்தில் தான்
நடந்தது. கிண்ணியடி படுகொலை, வற்றாப்பளை அம்மன் கோவில் எறிகணை
வீச்சு, தெல்லிப்பளை கோவில் மீதான தாக்குதல் என படுகொலைகள் பட்டியல்
தொடர்ந்து கொண்டே போகும்.

இந்தக் கொடூர படுகொலைகள் யாவும் ரணசிங்க பிரேமதாசாவின் அரசினால்
நிகழ்த்தப்பட்டது. இந்தப் படுகொலைகள் அனைத்திற்கும் இவரே
பொறுப்பாளியாவார்.

இவ்வாறான படுகொலைகளை மேற்கொண்ட சஜித் பிரேமதாசாவின் தந்தையார்,
தமிழ் மக்களுக்கு எதிராக தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன்
காரணமாகவே ரணசிங்க பிரேமதாசா தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில்
கொல்லப்பட்டார். இது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
ஆகவே சஜித் பிரேமதாசா எதிர்காலங்களில் ஜனாதிபதியாக வந்தால், இவரது
தந்தையைப் படுகொலை செய்த விடயத்தை வைத்து தமிழினத்தை பழிவாங்கும் ஒரு
தலைவராகவே செயற்படுவார் என்பதே தமிழ் மக்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் தான் தற்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்கபிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசா அவர்களை ஜனாதிபதியாக ஆக்குவதற்கான முயற்சிகளை பல அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதில் தமிழ்க் கட்சிகள் சிலவும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன என்பது வருந்தத் தக்க விடயமாக உள்ளது.

1993 மே 01ஆம் திகதி மே தின ஊர்வலத்தின் போது  பிரேமதாசா கொலை செய்யப்பட்டார்.

இவரை அடுத்து 01 மே 1993 இலிருந்து 12 நவம்பர் 1994 வரை சிறிது காலம்
D.B.விஜேதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். பின்னர் நவம்பர் 1994
நடைபெற்ற தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றி பெற்று
ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.220px Navaly Church Memorial முகங்கள் வேறாகலாம் முனைப்பு ஒன்றுதான் - கல்யாணி

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 நவம்பரில் இருந்து 2005 நவம்பர19 வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். 1999இல் தேர்தல் காலத்திற்கு முன்னரேஜனாதிபதி தேர்தலை நடத்தினார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தற்கொலைக்குண்டுதாரியின் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார். இந்த அனுதாப அலைகளே இவரை இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக்கியது.

தான் ஒரு சமாதானப் புறா என்று தன்னை இனங்காட்டிக் கொள்ள முற்பட்டார். தனது சமாதானத்தின் மூலம்விடுதலைப் புலிகளை பலவீனமடைய செய்வதற்கு முயற்சி செய்தார்.பல்வேறு நாடுகளில் சமாதானப் பேச்சுக்களை மேற்கொண்டார். ஆனால்
இறுதியில் ஏதோ ஒரு காரணம் காட்டி அந்தப் பேச்சுவார்த்தைகள் எல்லாம்
தோல்வியில் முடியும்படி செய்து கொண்டார்.

தனது சமாதான நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததால், மீண்டும் யுத்தம்
மூலம் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு முயல்வதாகக் கூறி, வெளிநாடுகளின்
உதவியுடன் விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு முற்பட்டார்.
சமாதானம் மூலம் விடுதலைப் புலிகளை வெற்றி கொள்ள நினைத்த அவரது
முயற்சியில் அவர் ஓரளவு வெற்றி கொண்டதாகவே கருதப்படுகின்றது.

1995 நாகர்கோவில் பாடசாலை படுகொலை,1995 நவாலி தேவாலயப்படுகொலை
1997 களுத்துறை சிறைச்சாலைப் படுகொலை,2000 பிந்துணுவேவா படுகொலை சந்திரிக்கா ஆட்சியில் என ஏராளமான தமிழர் படுகொலைகள் இடம்பெற்றன.

இவரின் ஆட்சிக்குப் பின்னர் மகிந்த ராஜபக்ஸ பதவிக்கு வந்தார். 2005 நவம்பர்
19 திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பின்னர் 2010 ஜனவரி 27இல் நடைபெற்ற
ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றார். 2015 வரை
ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். இவர் சந்திரிகா மேற்கொண்ட யுத்தத்தை
தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

இவர் தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என
பல சர்வதேச அமைப்புகள் குற்றஞ்சாட்டின. இவரின் எதிர்க்கட்சியிலிருக்கும் ரணில்
விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதுகூட
மகிந்த ராஜபக்ஸ, பல மனித உரிமை மீறல்களை மேற்கொண்டே யுத்தத்தில் வெற்றி
பெற்றார் என்று கூறியிருந்தார்.

2006 ஏப்ரல் மாதம் திருகோணமலையில் தமிழர்களுக்கு எதிரான
வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டார். இவரது ஆட்சிக் காலத்தின் போதே
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலை செய்யப்பட்டார்.
இவர் பதவியில் இருந்த போது மேற்கொண்ட இனப்படுகொலை, மற்றும் போர்க்
குற்றங்களுக்காக அமெரிக்காவில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக
களமிறங்கியிருப்பவர், மகிந்த ராஜபக்ஸவின் சகோதரரான கோத்தபயா
ராஜபக்ஸவேயாவார். இவர் இராணுவத்தில் லெப்.கேணலாகப் பதவி வகித்தவர்.
பின்னர் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பாதுகாப்பு
அமைச்சின் செயலாளராக பதவி வகித்தவர்.3 முகங்கள் வேறாகலாம் முனைப்பு ஒன்றுதான் - கல்யாணி

மகிந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்றமனித உரிமை மீறல்களுக்கும், தமிழ் மக்களின் இழப்புகளுக்கும் இவரின் முழுப்பங்களிப்பு இருந்து வந்தது. 2009 இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை கொல்ல உத்தரவிட்டார் என இவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு இனவாதியான சர்வாதிகாரியாகவே இதுவரை செயற்பட்டு வந்தார். எதிர்காலத்தில் ஜனாதிபதியாக பதவியேற்றால், நாட்டில் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கும் என தமிழ் மக்கள் அச்சப்படுகின்றனர்.

இவரைத் தொடர்ந்து தற்போது பதவியில் இருக்கும் மைத்திரிபால சிறிசேன
ஜனவரி 08 2015இல் பதவிக்கு வந்தார். இவர் தமிழ் மக்களுக்கு அபிவிருத்திப்
பணிகளை மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு, தமிழர்களின் பூர்வீக நிலங்களை
ஆக்கிரமித்து சிங்களவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை தீவிரமாக
மேற்கொண்டார்.

1994இல் இவர் மகாவலி அமைச்சராகப் இவர் பதவி வகித்தார். அதன்போது
மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற ஓர் நடவடிக்கை மூலம் தமிழர்களின் நிலங்களைஆக்கிரமிக்கும் திட்டம் தீட்டியிருந்தார். தற்போது ஜனாதிபதி பதவி கிடைத்ததும்அத்திட்டத்தை மீண்டும் புதுப்பித்ததுடன், தமிழர் நிலங்கள் பலவற்றிற்றின் மீதுசிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டார்.image ab32ccf91b முகங்கள் வேறாகலாம் முனைப்பு ஒன்றுதான் - கல்யாணி

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோரக் கிராமங்களுக்கு சிங்களப்
பெயர் சூட்டியதுடன், அங்குள்ள குளங்களுக்கும் சிங்களப் பெயர்களை
சூட்டியிருந்தார். இவரின் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாகவே தற்போது நடைபெற்ற
நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பிரச்சினை தோன்றியிந்தது என்றுகூட
சொல்லலாம்.

இவ்வாறாக கடந்த காலங்களில் பதவிவகித்த அனைத்து சிறிலங்கா அரசத்தலைவர்களும் இனவாதக் கொள்கையை இறுகக் கடைப்பிடித்து இலங்கைத்தீவிலிருந்து தமிழினத்தை கருவறுக்க கருமமாற்றியவர்கள் என்பது வெளிப்படை.

இப்படிப்பட்ட சிங்கள அரசியல் வரலாற்றில் தமிழருக்கு உரிமைகள் கிட்டும் அல்லது நீதி வழங்கப்படும் என இன்னமும் நம்புவது நாமே நம்மை முட்டாளாக்கிக்கொள்வதற்கு ஒப்பானது.