Home செய்திகள் மட்டக்களப்பில் பெரும்போக நெற்செய்கை தொடர்பில் ஆய்வு

மட்டக்களப்பில் பெரும்போக நெற்செய்கை தொடர்பில் ஆய்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை பெரும்போக நெற்செய்கை 18,399 ஏக்கரில் செய்கை பண்ணப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கான விவசாய மீளாய்வுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம்,விவசாய, நீர்பாசன திணைக்களங்களின் பணிப்பாளர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நவகிரி மற்றும் தும்பங்கேணி நீர்பாய்ச்சல் குளங்களின் நீர் வழங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனடிப்படையில் நவகிரி நீர்ப்பாய்ச்சல் குளத்தினை நீரைக்கொண்டு 17729 ஏக்கரும் தும்பங்கேணிகுளத்தின் நீரை அடிப்படையாகக்கொண்டு 670 ஏக்கரும் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Batti paddy2 மட்டக்களப்பில் பெரும்போக நெற்செய்கை தொடர்பில் ஆய்வுஇந்த கூட்டத்தில் நெற்செய்கையின்போது விவசாயிகள் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகள் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதன் காரணமாக விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்நோக்கும் ஆபத்துகள் குறித்து விவசாயிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டதுடன் கடந்த காலத்தில் போரதீவுப்பற்றில் யானை வேலி அமைக்குமாறு கோரிக்கை விடுத்தபோதிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லையென விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டது.

விரைவில் விவசாயிகளின் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியளித்தார்.

Exit mobile version