மட்டக்களப்பில் காட்டு யானைத் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் தரவை காட்டுப் பகுதியில் யானையின் தாக்குதலில் உயிரிழந்த நபரின் சடலம் இரண்டு நாட்களுக்கு  மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறை வீதி செங்கலடியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சவேந்திரன் (வயது 39) என்ற நபரே யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த 9ம் திகதி வயல் காவலுக்காக தரவை பகுதிக்கு மூன்று மோட்டார் வண்டியில் ஐந்து நபர்கள் சென்று கொண்டிருந்த வேளையில் தரவை காட்டுப் பகுதியில் இருந்து வந்த யானை குறித்த நபர்களை துரத்திய போது ஐந்து பேரும் திசை மாறி ஓடிய நிலையில் ஒருவரை தாக்கி காட்டுப் பகுதிக்கும் தூக்கி எறிந்துள்ளது. இதனால் இவரோடு சென்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான நபரினை மீட்பதற்கு பொதுமக்களால் தரவை யானை காட்டுப் பகுதிகளுக்கு செல்ல முடியாது இருந்த நிலையில் நேற்று இரவு பலரது உதவிகள் மூலம் உடல் கண்டெடுக்கப்பட்டு இன்று காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.