போர்க் குற்றவாளியை ஒப்படைக்க தயாராகின்றது சூடான்

இனப்படுகொலையில் ஈடுபட்ட சூடானின் முன்னாள் அரச தலைவர் ஓமார் அல் புசீரை அனைத்துலக நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கு சூடான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டில் டார்பூரில் 3 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் புசீர் மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதில் தொடர்புடைய அனைவரையும் நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

சூடான் அரசுக்கும் டார்பூர் பிரதேச போராளிகள் குழுக்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னாள் அரச தலைவரையும், ஏனைய மூன்று நபர்களையும் ஒப்படைப்போம் என சூடான் அரசின் பேச்சாளர் முகமது அல்டேஸ் பி.பி.சி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.