போரில்லா நிலை,பொருளாதார நெருக்கடி; படைத்துறைக்கு கூடுதல் நிதி ஏன்? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

64

பொருளாதார பலவீனம் சிறீலங்காவின் படை ஆக்கிரமிப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இன் தாக்கம் சீனாவின் பொருளாதாரத்திற்கு பலத்த பின்னடைவைக் கொடுக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார வல்லரசான சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு சிறீலங்காவை கடுமையாக பாதிக்கும்.

ஏனெனில் சிறீலங்காவின் பிராதான அபிவிருத்தி நடவடிக்கைகள் சீனாவின் முதலீடுகளிலும், சீனா சுற்றுலாப் பயணிகளிலும் தான் தங்கியுள்ளது.சீனாவின் சரிவு பல நாடுகளை பாதித்து வருகின்ற போதும், சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுக ஏற்றுமதி வலையத்தின் செயற்பாட்டிலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடத்திற்கான பொருளாதார வளர்ச்சியாக 4 விகித வளர்ச்சியை அடைவதை குறிக்கோளாக கொண்டு செயற்பட்டு வருகின்றது புதிய சிறீலங்கா அரசு. அதற்கு ஏதுவாக வரிச்சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த 20 வருடங்களாக நிமிர்த்த முடியாத பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் தான் தற்போதைய அரசின் ஆயுட்காலம் தங்கியுள்ளது.

அதேசமயம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்காக பல சலுகைகளை பொது மக்களுக்கு அறிவித்து வருகின்றது சிறீலங்கா அரசு. தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை எதிர்வரும் மார்ச் மாதத்தில் இருந்து 1000 ரூபாய்களாக அதிகரிக்கவுள்ளதாக சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய கடன் மீள் செலுத்தும் தொகை மற்றும் முன்னைய அரசு விட்டுச் சென்ற கடன்களின் கொடுப்பனவுகள் என 2167 பில்லியன் ரூபாய்கள் தேவையெனவும் அவர் தெரிவிக்கத் தவறவில்லை.

2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் 340 சபைகளில் 230 சபைகளை கைப்பற்றியதும், பின்னர் அரச தலைவர் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைக் கைப்பற்றியதும், கோத்தபாயா அரசுக்கு சாதகமாக நிலையே தென்னிலங்கையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையை தக்கவைத்து பலமாற்றங்களை கொண்டு வந்து குடும்ப அரசியலை தக்கவைக்க போராடுகின்றது தற்போதைய அரசு.

புதிய அரசு பதவிக்கு வந்ததும் புலம்பெயர் தமிழ் மக்கள் குறிப்பாக கனடாவில் வசிக்கும் தமிழ் மக்கள் சிறீலங்காவில் முதலீடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்திருந்தது.ஆனால் சிங்கள தேசத்தின் பொருளாதாரத்தை தக்கவைத்து அதன் இனஅழிப்புக்கு துணைபோக தமிழ் மக்கள் விரும்பப் போவதில்லை. என்பது ஒருபுறமிருக்க சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தலாம் என்ற அச்சங்களும் புதிய அரசுக்கு உண்டு.

ஆனால் தாம் அதனை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரையிலும் நிறுத்தப் போவதில்லை எனவும் எனினும் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும் எனவும் சிறீலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் 2023 ஆம் ஆண்டு வரையில் தனது சலுகையை வழங்கினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது இந்த வரிச்சலுகை மூலம் சிறீலங்கா பெறும் நன்மைகளை குறைக்கும் என நம்பப்படுகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளும் திட்டங்களை அல்லது ஆலோசனைகளை பல தரப்பினரிடம் இருந்தும் அரசு எதிர்பார்த்து வரும் இந்த நிலையில், சிறீலங்கா அரசு தனது படையினரின் செலவீனங்களை குறைக்க வேண்டும் என்ற ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், சிறீலங்கா அரசு தனது பாதுகாப்புச் செலவீனத்தை குறைக்கவில்லை என்ற தகவல்களை முன்வைத்துள்ளர் சிறீலங்கா அரசின் பொருளாதார ஆலோசகர் டானியல் அல்போன்ஸ்.

2017 ஆம் ஆண்டின் செலவீனத்தில் 11 விகிதம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசு தனது பாதுகாப்பு செலவீனம் தொடர்பில் மீளாய்வு செய்யவில்லை, படையினரின் தொழில் நுட்பம் விரிவாக்கம் பெறவில்லை, மாறாக தரைப்படையும், ஆட்லறிப்படையினரும், கவசப் படையினரும் அதிக நிதிகளை உள்வாங்கி வருகின்றனர்.அது மட்டுமல்லாது, சிறீலங்கா அரசு தனது படையினரை உட்கட்டுமானப் பணிகளில் அதாவது வர்த்தக நடவடிக்கைகள், கட்டிடங்களைக் கட்டுதல், நாட்டை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுத்தி வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

போர் இடம்பெற்ற 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1987 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் செலவீனம் சாராசரியாக 421 மில்லியன் டொலர்கள். ஆனால் இந்த தொகை 2007 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரையில் 1716 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த காலப் பகுதியில் போர் நிறைவடைந்த பின்னரான 8 வருடங்களும் அடக்கம்.

அதாவது போர் நிறைவடைந்த பின்னரே அதிகளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. சிறீலங்காவின் படைத்துறைச் செலவீனம் 50 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட மியான்மார், 100 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் செலவீனங்களை ஒத்தது. அதாவது படையினரின் எண்ணிக்கையே அதிகளவு நிதியை உள்வாங்குகின்றது. இதன் தொகை 40 விகிதமாகும்.

தற்போது சிறீலங்கா படையினரின் எண்ணிக்கை 254,000 ஆகவும் பின்னிருக்கை படையினரின் எண்ணிக்கை 33,000 ஆகவும் உள்ளது. இந்த படையினரின் எண்ணிக்கை 30,000 ஆகவும், பின்னிருக்கை படையினரின் எண்ணிக்கை 170,000 ஆகவும் குறைக்கப்பட வேண்டும் என அறிக்கை கூறுகின்றது.ஆனால் சிறீலங்கா அரசு ஏன் தனது படையினரின் எண்ணிக்கையை அதிகமாக வைத்துள்ளது? ஏன் பாதுகாப்புக்கு அதிகளவு நிதியை செலவிடுகின்றது என்பதன் உள்நோக்கங்களை இந்த ஆய்வு தவறவிட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் உண்மையான நோக்கம் அதிகளவான படையினர் மூலம் நில ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு, காலாச்சார ஆக்கிரமிப்பு என்ற நடவடிக்கைகளின் ஊடாக தமிழ் மக்களின் தாயகத்தை சிதைத்து அவர்களின் தாயகக் கோட்பாட்டை அழிப்பதேயாகும்.

அதாவது 2009 ஆண்டுக்கு முன்னர் நேரிடையாக படையினர் மூலம் மேற்கொள்ளப் பட்ட இனப்படுகொலை என்ற இன அழிப்பு தற்போது அதே படையினர் மூலம் மறைமுகமாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது சிறீலங்கா அரசின் நோக்கமும், செயலும் ஒன்று என்பதுடன், அது போரின் போதும், போரின் பின்னரும் மாறவில்லை.

எனவே தான் பாதுகாப்புச் செலவீனமும் மாறவில்லை.ஆனால் சிறீலங்கா அரசின் இந்த நோக்கத்திற்கு தற்போது தடையாக உள்ளது பொருளாதார சிக்கல் தான். அதில் இருந்து சிறீலங்கா மீண்டு விட்டால், தமிழினம் மிகப்பெரும் அழிவை சந்திக்கும் என்பதுடன், தமிழர்களின் தாயகமும் முற்றாக பறிபோகும் நிலையேற்படும், அதற்கு சிறந்த அண்மைய உதாரணமாக பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும், அதற்கான அமெரிக்காவின் அங்கீகாரத்தையும் கூறலாம்.