பொருளாதாரத் தடையை நீக்கினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் – ஈரான்

48

பொருளாதாரத் தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-ஈரான் இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான மோதல் வலுத்து வரும் நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் இதற்குத் தீர்வு காண உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அமெிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும் போது, “எங்கள் மீதான சட்டவிரோதமான தடைகளை அமெரிக்கா ஒருவேளை நீக்கினால், அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக உள்ளது” என்றார்.

அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015இல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவிற்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருவது குறிப்பிடத்தக்கது.