பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வன்னி மாவட்ட புளொட் வேட்பாளர்கள்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) சார்பாக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி முன்னாள் அதிபர் கந்தையா சிவலிங்கமும் இந்த தேர்தலில் புளொட் சார்பாக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பாக அண்மையில் வவுனியாவில் கருத்துத் தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரமான த.சித்தார்த்தன், வன்னி மாவட்டத்தில் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தங்கள் கட்சி சார்பாக இரு வேட்பாளரை நிறுத்தவுள்ளதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் அந்தந்த மாவட்டக்குழு தீர்மானித்து அந்தந்த வேட்பாளர்கள் யார் என்பதை உறுதி செய்து அறிவிப்போம் எனவும் தெரிவித்தார்.

இதற்கமைவாக முன்னாள் வவுனியா நகரபிதாவம், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், மற்றும் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி முன்னாள் அதிபரும் வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர். க.சிவனேசனின் சகோதரருமான க.சிவலிங்கம் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்துவதாக கட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதுடன், விரைவில் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.