பெண் அரச உத்தியோகத்தரைத் தாக்கிய அதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

107
5 Views

அரச உத்தியோகத்தரான பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த பெண் உத்தியோகத்தரை தாக்கியதாகக் கூறப்படும் அரச உத்தியோகத்தர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர் .


நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளரான திருமதி தவப்பிரியா சுபராஜ் என்பவரை தாக்கிய சம்பவத்தில் 5 நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை புரியும் ஜ . எல் . ஏ . கார்லிக் என்பவர் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போது தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் அதன் பிரதிபலிப்பாக போராட்டங்கள் இடம்பெறுதல் பொதுச் சொத்துக்கள் சேதமடைதல் இப்பிரச்சினை காரணமாக இனநல்லுறவு சீர்குலைதல் என பொலிசார் தமது வாதங்களை முன்வைத்து சந்தேக நபரின் பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறு மன்றில் வேண்டினர்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான பல சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்து பிணை கோரிக்கையை முன்வைத்த போதிலும் நீதிவானினால் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை நடைபெற்ற வேளை நீதிமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெய சிறீல் உட்பட பொது அமைப்பின் பிரதிநிதிகள் பிரசன்னமாகி இருந்தனர்.

இந்நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அம்பாறை – நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் முகாமைத்துவ உத்தியோகத்தராக பணி புரிந்த பெண் பணியாளரான பி.தவப்பிரியா கடந்த முதலாம் திகதி நிலையத்தின் தலைமை கமநல உத்தியோகத்தரினால் கடமை நேரத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

புதுவருட பிறப்பான முதலாம் திகதி சத்திய பிரமாண நிகழ்வு ஆரம்பமாகிய வேளை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அனைத்து பணியாளர்கள் முன்னிலையிலும் தன்னை கன்னத்தில் அறைந்த தலைமை கமநல உத்தியோகத்தர் தொடர்பில் அன்றைய தினமே முகாமைத்துவ உத்தியோகத்தர் தவப்பிரியா சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய இந்த சம்பவம் இடம் பெற்று நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் தாக்குதல் மேற்கொண்ட அதிகாரி மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அரச பணியாளர் தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய கிளையில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகஸ்தர் மீண்டும் தனது பணியைத் தொடர விரும்பவில்லை எனவும் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தவப்பிரியா என்ற அரச உத்தியோகத்தரை தாக்கிய அவரதுதலைமை அதிகாரி தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சம்மாந்துறை நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

இதற்கமைய அம்பாறை – நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் தலைமை கமநல உத்தியோகத்தரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here