பூர்வீகக் குடிகளை இனவழிப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறது கனேடிய அரசு – தமிழில் ஜெயந்திரன்

74
12 Views

ஒழுங்கு முறையான, கட்டமைப்பு ரீதியிலான வன்முறை தொடர்பாக, ஆயிரக்கணக்கான கதைகளை மூன்று ஆண்டுகளாகக் கேட்டபின்னா், கனடாவில் காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீக குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் தொடர்பாக, கனடா ஒரு அரசு என்ற வகையில் பூர்வீகக் குடிகளின் இனவழிப்புக்கு பொறுப்பை ஏற்க வேண்டும் என்று காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான நாடளாவிய விசாரணை மிகவும் உறுதியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து கனேடியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காலனீய விடுவிப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விசாரணைக்குப் பங்களித்த மூன்று சட்டத்தரணிகளும் குறிப்பிடுகிறார்கள்.

பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை இனவழிப்பு செய்யும் செயற்பாடே அவர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைக்கான மூலகாரணம் என்று மேற்படி காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கான தேசிய விசாரணை அமைப்பு கண்டறிந்துள்ளது. இனவழிப்பே நாடளாவிய இந்த விசாரணை அமைப்பின் குவிமையமாக திகழ்வதுடன், காலனீய வன்முறை என்பது வெறுமனே கடந்த காலத்தில் நடந்து முடித்துவிட்ட ஒரு செயற்பாடு அல்ல, அது இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒரு விடயம் என்று இந்த விசாரணை வாதிடுகின்றது. கொள்கை மற்றும் செயன்முறைகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களினுடாக இனவழிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டபூர்வ கடப்பாட்டை நீதிக்கான அதன் 231 அழைப்புகள் பிரதிபலிக்கின்றன.

பூர்வீகக் குடிகள் அல்லாதவருடன் ஒப்பிடும் போது, பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்கள் ஆறு தடவைகள் அதிகமாக கொல்லப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், எண்ணிக்கையைக் கணக்கெடுப்பது மிகக் கடினமானதாகும். இருப்பினும் இரண்டு தசாப்தங்களாகத் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அறிக்கைகளும் கொல்லப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாக அறியப்படுகின்ற 1200 பூர்வீகக்குடிப் பெண்களின் பெயர்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றன. பூர்வீகக் குடிகள் அல்லாதவருடன் ஒப்பிடும் போது, பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்கள், ஆறு தடவைகள் அதிகமாக கொல்லப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.

இவ்விடயம் தொடர்பாக பல ஆண்டுகள் எந்தவிதமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், நான்கு வருடங்களுக்கு முன், 2016 செப்டெம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வின் அடிப்படையில் ஏனைய மாகாண மற்றும் பிரதேசவாரியிலான 13 அரசாங்கங்களுடன் இணைந்து, காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வீகக்குடிகளைச் சார்ந்த பெண்கள், பெண்பிள்ளைகள் தொடர்பான ஒரு நாடளாவிய விசாரணைக்கு கனேடிய அரசு உத்தரவிட்டது. பாலியல் வன்முறை உட்பட எல்லாவிதமான அமைப்பு ரீதியிலான வன்முறைகளையும் தொடர்ச்சியாக இக்குழுவின் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணங்களாக விளங்குகின்ற சமூக, பொருண்மிய, கலாச்சார, நிறுவன ரீதியிலான அனைத்துக் காரணங்களையும் கண்டறிந்து அறிக்கையிடும்படி இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விவாதங்கள் எதிர்வு கூறப்படக் கூடியவையாகவே இருந்தன. விவாதங்கள் இரண்டு விதமாக முன்னெடுக்கப்படுகின்றன. பூர்வீகக் குடிகளுக்குச் சார்பாக வாதிடுகின்ற ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் பல வருடங்களாக முன்வைக்கின்ற வாதத்தை கனேடியப் பொதுமக்கள் தற்போது எதிர்நோக்குகிறார்கள் எனத் திருப்திப்படுகின்றவர்கள் இதில் ஒரு சாரார்.

அதே வேளையில், தனது பூர்வீகக்குடிகளுடன் கனடா கொண்டிருக்கும் உறவை ‘இனவழிப்பு’ என்ற பதத்தின் மூலம் குறிப்பிடுவதன் காரணமாக இப்பதத்தின் முக்கியத்துவமும் செயற்றிறனும் நீர்த்துப் போகும் நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றது என்று இன்னொரு சாராரும் வாதிடுகின்றனர். மிகப்பெரும் குற்றமான இனவழிப்பு குற்றத்தை கனடாவுடன் தொடர்புபடுத்துவதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது என்றும் ஹைடி மத்தியூஸ் (Heidi Matthews) என்பவர் குறிப்பிடுகின்றார்.

சட்டம் தொடர்பான ஆர்வலர்கள் நடுவிலும் காணப்படும் இந்த பிளவை உற்றுநோக்கும் போது, காலனீயக் கடந்த காலம் தொடர்பாகவும், அது விட்டுச் சென்ற விடயங்கள் தொடர்பாகவும் மக்களின் அறிவும், அனுபவமும் எவ்வளவு தூரம் வெவ்வேறாகப் பிளவுபட்டிருக்கிறது என்பதையே இனங்காணக்கூடியதாக இருக்கிறது. கனேடிய மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அவர்களது வரலாறு, துல்லியமானதொன்றல்ல என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒரு பொருட்டாகக் கருதப்படாத இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டுச் சட்டத்தில் காணப்படும் வரையறைக்குட்பட்ட புரிதலும் இந்தப் பிளவிற்கான காரணமாகும்.

காலனீய இனவழிப்பு என்றால் என்ன?

‘இனவழிப்பு’ என்ற பதத்தை பயன்படுத்துவதில் உள்ள சட்டபூர்வமான அடிப்படை தொடர்பாக, நாடளாவிய விசாரணை ஒரு மேலதிக அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பூர்வீகக் குடிகளுக்கான தொடர்பாளர் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வரைவிலக்கணத்தை வரவேற்றிருந்த அதே நேரத்தில் இது தொடர்பான நடவடிக்கைகளும் மேலதிக ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரும் ‘அமெரிக்க மாநிலங்களின் அமைப்பும்’ கேட்டிருந்தன.

இனவழிப்பின் உண்மையான இயல்பைக் கண்டறிவதற்கு இப்பதம் தொடர்பான பொதுவான எண்ணத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். காலனீய இனவழிப்பு என்பது மிகவும் மெதுவாக, படிப்படியாக நடைபெறுகின்ற ஒரு செயன்முறை ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு, றுவாண்டாவில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு போன்ற குறிப்பிட்ட காலவரையறைக்குள் வகைதொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு முன்னுதாரணங்களையும் பார்க்கும் போது, பூர்வீகக் குடிகளை அழித்தொழிக்கும் காலனீய குறிக்கோள், வெளியே தெரியாத முறையில் மிகவும் மறைவாக பல நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விடயமாகும். இது கட்டமைப்பு ரீதியிலானதும் ஒழுங்கமைப்பு ரீதியிலானதும் பல வேறுபாடான உத்திகளைக் கொண்டதும், பல நிர்வாகங்களையும் அரசியல் தலைமைகளையும் உள்ளடக்கியதுமாகும்.

இனவழிப்புக் குற்றத்துக்கான தனிப்பட்ட பொறுப்புக்கூறலை பன்னாட்டுக் குற்றவியல் சட்டத்தின் விருத்தி தன்னகத்தே கொண்டிருக்கும் அதே வேளையில், இனவழிப்பு தொடர்பாக ஒரு அரசுக்கு இருக்கின்ற பொறுப்பையும் அது சுட்டிக்காட்டுகிறது. தனிநபர்களுக்கு இருக்கும் குற்றப்பொறுப்பு பற்றி மேற்குறிப்பிட்ட நாடு தழுவிய விசாரணை ஆய்வை மேற்கொள்ளவில்லை. கனடா ஒரு அரசு என்ற வகையில் இனவழிப்பு தொடர்பாக அதற்கிருக்கும் பொறுப்பையே காலனீய இனவழிப்பு கருத்திலெடுக்கிறது. தொடர்ந்து வந்த அரசியல் நிர்வாக அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டு, பல தசாப்தங்களாக பேணப்பட்ட கனேடிய காலனீய கட்டமைப்புகளும் கொள்கைகளும் இனவழிப்பு தொடர்பான எண்ணற்ற செயல்களையும் செய்யாமல் தவறவிட்ட விடயங்களையும் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் கூட்டாக இனவழிப்பை தவிர்க்கின்ற பன்னாட்டுச் சட்டத்தை மீறுகின்றன.

தொடரும்…….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here