பூர்வீகக்குடிகளை இனவழிப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறது கனேடிய அரசு – பகுதி 2

69
26 Views

இனவழிப்பு ஒரு பாலினக் குற்றம்

பாதுகாக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் குறிக்கோளுடன் தடைசெய்யப்பட்டுள்ள சில செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் அல்லது செய்யவேண்டிய செயற்பாடுகளை செய்யாமல் விடுதலே “இனவழிப்பு” ஆகும் என்று பன்னாட்டுச் சட்டம் வரையறை செய்கிறது.

தடைசெய்யப்பட்ட நடத்தை என்று ஐந்து வகையான விடயங்கள் சொல்லப்படுகின்றன. படிப்படியாகச் சாவை வருவிக்கக்கூடிய செயற்பாடுகள் உட்பட சாவை வருவிக்கக்கூடியவை மற்றும் சாவை வருவிக்காதவை என்ற இரண்டு விதமான செயற்பாடுகளையும் உள்ளடக்குகின்ற விடயங்கள் இவற்றில் அடங்குகின்றன.

பாலியல் வன்முறை போன்ற உளரீதியிலான அல்லது உடல் ரீதியிலான தீங்கை விளைவித்தல், போதிய உணவு, நீர், மருத்துவ வசதி போன்றவற்றை வழங்காது உடல் ரீதியிலான அழிவை ஏற்படுத்துதல், கட்டாயக் கருத்தடை மூலம் பிறப்பைத் தவிர்க்கும் விளைவுகளை இலக்காகக் கொண்ட சூழலை நிர்ப்பந்தித்தல், கனடாவின் வதிவிடப் பாடசாலை ஒழுங்கமைப்பு போன்று குழுவிலிருந்து பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தல் போன்ற செயற்பாடுகளை இனவழிப்பு உள்ளடக்குகின்றது.

மேலும் இனவழிப்பு அதிகளவில் ஒரு பாலினக் குற்றமாகும். இங்கே உள்ளடக்கப்படும் செயற்பாடுகள் எல்லாம் பெண்களையும் பெண்பிள்ளைகளையும் பாதிக்கக்கூடியவை. இனவழிப்பை ஒரு கூட்டுப்படுகொலைக்குள் மட்டும் உள்ளடக்குவது, இனவழிப்பு வன்முறையின் பாலினப் பாதிப்புகளை மறைத்துவிடுவதுடன் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் முழுச் சமூகத்தையுமே அழித்தொழிக்கும் தன்மையை பன்மடங்கு அதிகரிக்கின்றது என்ற உண்மையையும் கவனத்திற்கொள்ளத் தவறுகின்றது.

உதாரணமாக, பெண்களுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்முறைகள், சமூக ரீதியிலான களங்கத்தை கொண்டிருப்பதுடன் “சமூகத்துக்கு இடையேயான ஒத்திசைவைக் குறைத்து, பாலியல் இனப்பெருக்கத்தின் மூலம் தன்னைப் புதுப்பிக்கும் பாதுகாக்கப்பட்ட குழுவின் ஆற்றலையும் குறைப்பதுடன், குறிக்கப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்களுக்கிடையே இருக்கின்ற பிணைப்புகளை நிர்மூலமாக்கும் தன்மையைக்கொண்ட ஆழமான உளவியற் பாதிப்புகளைகளையும் ஏற்படுத்திவிடுகிறது” என்று பூகோள நீதி மையம் குறிப்பிடுகின்றது.

இப்படிப்பட்ட விளைவுகள் குறிப்பிட்ட சமூகத்தை படிப்படியான சாவுக்கும் அழிவுக்கும் இட்டுச்செல்வதுடன் உடனடியாக மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவையல்ல என்ற உண்மையும் உணரப்பட வேண்டும். அடக்கியாள்தல், அதிகாரம், ஆண்மை போன்ற ஆழமான பாலின பார்வையை வெளிப்படுத்துகின்ற இனவழிப்புக்குள் உள்ளடக்கப்படும் இச்செயற்பாடுகள் அனைத்துமே இந்தப் பாலினக் கண்ணாடியூடாகப் நோக்கப்படலாம்.

மனிற்றோபாவின் ஆதிக்குடிகளுக்கான நீதி தொடர்பாக 1991ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை, ஆதிக்குடிகள் தொடர்பாக 1996ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரச குடும்பத்தின் அறிக்கை, 2001ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆதிக்குடிகளுக்கான நீதியை அமுல்நடத்தும் ஆணையத்தின் அறிக்கை, 2015ம் ஆண்டு வெளியிப்பட்ட உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணையத்தின் அறிக்கை போன்ற அறிக்கைகளுடன் நாடு தழுவிய விசாரணையின் அறிக்கையை இணைத்து வாசிக்கின்ற போது, இனவழிப்பு நடத்தையை உள்ளடக்கும் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்களையும் பெண்பிள்ளைகளையும் பாதிக்கின்ற ஏராளமான கனேடியக் கொள்கைகளை இனங்காணக்கூடியதாக இருக்கிறது

ஒரு அரசின் குறிக்கோளை நிறுவுதல்

பாதுகாக்கப்பட்ட ஒரு சமூகத்தை முழுமையாகவோ அன்றேல் பகுதியாகவோ அழிக்கும் விசேட எண்ணத்தைக் கொண்டிருத்தல் இனவழிப்பின் இரண்டாவது சட்டபூர்வ அம்சமாகும். ஒரு அரசுக்குரிய பொறுப்பை ஆய்வுசெய்யும் போது இந்த “விசேட நோக்கம்” என்பது ஒருவகையில் கற்பனையான விடயமாகும். ஏனென்றால் ஒரு தனிநபரைப் போலன்றி ஒரு அரசுக்கு சிந்திக்கும் தன்மை இல்லை.

இதன் விளைவாக ஒரு அரசின் நோக்கம் என்பது அதன் கொள்கைகள் மூலமாகவும் இன்னும் விசேடமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அழிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு நீண்ட கால நடத்தை வடிவத்தின் மூலமாகவுமே நிரூபிக்கப்படலாம். பன்னாட்டு நீதித்துறையைப் பொறுத்த வரையில், அழித்தல் என்று இங்கு குறிப்பிடப்படும் விடயம் உடல் ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவுமே புரிந்கொள்ளப்படுகிறது.

அதே வேளையில் நாடளாவிய விசாரணையைப் பொறுத்தவரையில் சமூக அலகாக இருக்கும் ஒரு குழுமத்தை அழிப்பதை இது குறிக்கும். சில பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றுகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அழித்தொழித்தலுக்கு நாடளாவிய விசாரணை கொடுக்கும் அர்த்தம் மிகவும் முன்னேற்றகரமானதாகும். ஒப்பந்தச் சட்டங்கள் தொடர்பான வியன்னா சாசனத்தையும் வெவ்வேறு நீதித்துறை தொடர்பான கொள்கைத் திரட்டுக்களின் ஆய்வுக்கட்டுரைகளையும் அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான விளக்கம் நாடளாவிய விசாரணையால் முன்வைக்கப்பட்டது.

“சமூக அலகாக இருக்கின்ற சமூகங்களை அழித்தல்” என்னும் விடயத்தை இனவழிப்பை இலக்காகக் கொண்ட அழித்தொழிப்பு நடவடிக்கைக்குள் உள்ளடக்குவது, நாடளாவிய விசாரணையில் இனவழிப்பின் நோக்கத்தில் பயன்படுத்தப்படும் பாலின அணுகுமுறையுடன் இசைந்து செல்கிறது.

கூட்டுப் படுகொலைகளில் மட்டும் கவனத்தை குவிமையப்படுத்துவது என்பது
பெண்களையும் பெண்பிள்ளைகளையும் அதிகமாகப் பாதிக்கின்றதும், ஒரு சமூக அலகு என்ற அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தின் அடிப்படையையே அழித்து, குறிப்பிட்ட குழுமத்தின் அழிவுக்கே இட்டுச்செல்லக்கூடிய நீண்ட காலக் காயத்தழும்புகளை குறிப்பிட்ட குழுமத்தின் சமூகக் கட்டமைப்புக்குள் தோற்றுவிக்கும் இயல்பைக் கொண்ட வரைவிலக்கணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய இனவழிப்பு செயற்பாடுகளை முற்றுமுழுதாக கவனத்தில் கொள்ளத் தவறுகிறது என்பது சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.

“இந்தியர்களின் சட்டத்தில்” இருந்து ஆரம்பித்து ~வதிவிடப் பாடசாலைகள், “அறுபதுகளில் அள்ளப்பட்டது” என்னும் விடயங்களைக் கடந்து பூர்வீகக்குடிகளைச் சேர்ந்த பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டாயக் கருத்தடை வரை கனடாவில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக் கொள்கைகளின் வடிவத்தை நாடளாவிய விசாரணை கோடிட்டுக் காட்டியது.

இந்தக் கொள்கைகளின் மூலமாக உடல்ரீதியாகவும் உயிரியல் ரீதியாகவும் சமூக அலகாகவும் பூர்வீகக் குடிகளை அழிக்கும் நோக்கத்தை கனடா வெளிப்படுத்தியிருக்கிறது. இன்று வரை இந்தக் கொள்கைகள் தொடர்ந்து வந்திருக்கின்றன என்பதுடன், பூர்வீகக் குடிகள் மட்டில் மிகவும் குறிப்பாக பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் மட்டில் மிகவும் மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் தெளிவாகிறது.

காலனீய விடுவிப்பு செயற்பாட்டை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்தல்
சட்டத்துக்கும் சட்டபூர்வமான பொறுப்புக்குமான தேடலுக்கும் அப்பால், இனவழிப்பு என்பது ஒரு தொடர்செயன்முறை என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும். “அன்ட்ரூ வூள்போட்” (Andrew Woolford) எழுதியதைப் போன்று இனவழிப்பு என்பது “பழக்கவழக்கங்கள், கோட்பாடுகள், நோக்கங்கள் என்பவற்றை உள்ளடக்கிய மிகச் சிக்கலான கூட்டாகும்.”

கனடாவின் காலனீய சூழலைப் பொறுத்தவரையில் பூர்வீகக் குடிகளை இல்லாதொழிப்பதையே இவை கூட்டு இலக்காகக் கொண்டவை.
இனவழிப்பு விளைவு தொடர்பானதோ எண்ணிக்கை தொடர்பானதோ அல்ல
இனவழிப்பு என்பது விளைவு தொடர்பானதோ எண்ணிக்கை தொடர்பானதோ அல்ல. கனடாவில் உள்ள பூர்வீகக் குடிகள், அழிவுக்கு இட்டுச்செல்லக்கூடிய கொள்கைகளை தொடர்ச்சியாக எதிர்த்தும், திசைதிருப்பியும் உயிர்பிழைத்திருக்கின்றன. ஆனால் இதனால் இக்கொள்கைகள் எந்தவிதத்திலும் தமது இனவழிப்புக் கொள்கையை இழந்துவிடுவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பூர்வீகக் குடிகளின் துன்பங்களைக் கண்டு சளைத்துவிடாத இயல்புக்கும் அவர்களது பலத்துக்கும் இது சான்றாகும்.

பூர்வீகக் குடிகளை கனேடிய நாடு நடத்திய முறையை, இனவழிப்பாக அழைப்பது, கடந்த காலத்தையோ, நிகழ்காலத் துன்பங்களையோ அல்லது ஏனைய சமூகங்களையோ எந்தவிதத்திலும் மறுப்பதற்குச் சமனாகாது என்பது மட்டுமல்லாமல் “இனவழிப்பு” என்னும் பதத்தை அது எந்தவிதத்திலும் பலவீனப்படுத்துவதில்லை. அத்துடன் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் மட்டில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கான தீர்வைக் கொடுக்கும் தேவையிலிருந்து எந்தவிதத்திலும் கவனத்தை அது திசைதிருப்பாது.

மாறாக, இழைக்கப்படும் கொடுமைகளுக்குப் பெயரிடுவதே ஒருவகை நீதி வடிவமாகும் என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களதும் உயிர்பிழைத்தவர்களதும் அனுபவங்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு முக்கிய செயற்பாடாகும். கடந்த காலம் தொடர்பாக ஒரு பொதுவான புரிதலின் அடிப்படையில் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் ஒரு முக்கிய செயற்பாடு இது என்பதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மிக முக்கிய செயற்பாடும் ஆகும்.

வரலாற்றில் முதற்தடவையாக பதவி வகிக்கும் ஒரு பிரதம மந்திரி தனது நாட்டில் இனவழிப்பு நடந்ததை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

மிகவும் துணிகரமான முறையில் இந்த விசாரணையின் முடிவையும் அதனுடன் இணைந்துள்ள இனவழிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய சட்டபூர்வமான கடப்பாட்டையும் கனேடிய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டாவது தடவையாக குடியேறிகளின் நாடொன்றில் ஒரு உத்தியோகபூர்வ அறிக்கை, இனவழிப்பு நடைபெற்றிருக்கிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறது. அத்துடன் வரலாற்றில் முதற்தடவையாக பதவி வகிக்கும் ஒரு பிரதம மந்திரி தனது நாட்டில் இனவழிப்பு நடந்ததை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இது வரலாற்றை நிச்சயம் மாற்றும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

பூர்வீகக் குடிமக்கள் தொடர்பாக, காலனீய அரசுகள் குறிப்பாக தமது வரலாற்றைப் பொறுத்த மட்டில் பாரம்பரியமாக தாம் எந்தவித குற்றமும் இழைக்கவில்லை என்று தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் அணுகுமுறையே கைக்கொண்டிருக்கிறார்கள். கனடா தான் உருவாகிய காலத்திலிருந்து இன்று வரை மேற்கொண்ட பாதகமான செயற்பாடுகளை ஏற்றுக்கொண்ட விடயம் எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான அத்திவாரமாகும். நாடளாவிய விசாரணை தனது இறுதி அறிக்கையில் “நீதிக்கான 231 அழைப்புக்களை” குறிப்பிட்டிருக்கிறது.

இது சட்டபூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் பூர்வீகக் குடிகளுக்கு எதிராகக் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கும் சமனாகும். இந்த அழைப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஒரு நேர்மையான முறையிலும் மிகுந்த ஈடுபாட்டுடனும் கனேடியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் காலனீய விடுவிப்பை மேற்கொள்வது அவசியமானதாகும். இச்செயற்பாடு இக்கணத்திலிருந்தே ஆரம்பமாக வேண்டும்.

தமிழில் ஜெயந்திரன்

முதலாவது பகுதியை பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

பூர்வீகக் குடிகளை இனவழிப்பு செய்ததை ஏற்றுக்கொள்கிறது கனேடிய அரசு – தமிழில் ஜெயந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here