புறுண்டியில் மனிதப் புதைகுழி – 6,000 சடலங்கள் மீட்பு

47

புறுண்டியின் கருசி மாகாணத்தில் கண்டறியப்பட்ட ஆறு மனிதப் புதைகுழிகளில் இருந்து 6,032 சடலங்களின் எலும்புக் கூடுகளும், உடைகளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட துப்பாக்கிச் சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் உள்ள மனிதப் புதைகுழிகளை கண்டறியும் அரசின் நடவடிக்கை கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமாகியதில் இருந்து தற்போது வரையிலும் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இதுவே மிகவும் பெரியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடைகள், எலும்புக்கூடுகள் மற்றும் சன்னங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் உண்மை மற்றும் இனநல்லிணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழுவின் அதிகாரி பிரெ கிளவெர் டைகரியே தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழு 1885 ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சி நடைபெற்ற காலத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் நிறைவடைந்த காலப்பகுதி வரையிலான காலப்பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றது.

இதுவரையில் 4000 புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன், படுகொலை செய்யப்பட்ட 142,000 மக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புறுண்டி நாட்டின் சனத்தொகை குடு மற்றும் ருற்சி ஆகிய இரு இனங்களைக் கொண்டது. இரு இனங்களுக்குமிடையில் இடம்பெற்ற போரில் 3 இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, எதிர்வரும் மே மாதம் அங்கு தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், வன்முறைகள் இடம்பெறலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.