Home ஆய்வுகள் புராதன சின்னங்களை பேணி பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமை – மட்டுநகர் திவா

புராதன சின்னங்களை பேணி பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமை – மட்டுநகர் திவா

மட்டக்களப்பில் எத்தனை வெளிச்சவீடுகள் உள்ளன என கேட்டால் அனைவரும் பாலமீன்மடுவில் உள்ள பிரதான வெளிச்ச வீட்டை மட்டுமே உள்ளதாக நினைத்து, ஒன்று என பதில் சொல்வார்கள். அதிகமாகத் தேவை இல்லை அவ்வூர் மக்களை கேட்டாலே ஒரே ஒரு வெளிச்ச வீடுதான் உள்ளதாகச் சொல்வார்கள். அண்மையில் ஜெகன் எனும் நண்பர். மட்டக்களப்பிலுள்ள வெளிச்சவீடு பற்றி ஆய்வு கட்டுரை ஒன்று எழுதித்தர கூறினார்.

வெளிச்ச வீட்டை பற்றி தகவல் அறிய களத்துக்கு சென்றபோது, பழமையான பிரித்தானியர் கட்டிய, தற்போது மக்களால் சுற்றுலாத்தலமாக பாவிக்கப்படும் பாலமீன்மடு வெளிச்சவீடு பற்றிய தகவல்களுக்கு மேலதிகமாக இன்னும் ஓர் பழமையான வெளிச்ச வீடு பற்றிய சில சில துப்புகள் கிடைத்தன. அவற்றை மூலமாகக் கொண்டு தேடியபோது அங்கே உள்ள மக்கள் மொட்டை கோரி என அழைக்கும் இடம் தான் அந்த பழமையான வெளிச்ச வீடு என அறியக் கிடைத்தது. இது தற்பொழுது பாவிக்கப்படும் வெளிச்ச வீட்டுக்கு வடமேற்கு திசையாக அண்ணளவாக 1 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் போது இந்த மொட்டை கோரி எனும் இடத்தை அடைய முடியும். இந்த மொட்டை கோரி, கடலிலிருந்து அண்ணளவாக 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமையப்பெற்றுள்ளது. இந்த வெளிச்சவீடு தற்போது அழிவடைந்த நிலையில் காணப்படுகிறது.

தற்போது என நான் கூற வருவது கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு மேலாக இந்த மொட்டை கோரி அரைகுறையான கட்டடமாக தான் இருந்ததாக அவ்வூர் மக்கள் அவர்களின் மூதாதையர்கள் கூறியதாக குறிப்பிடுகின்றனர். புதிய வெளிச்சவீடு 1913ஆம் ஆண்டு கட்டிய வேளையிலும் அதற்கு முன்னைய காலங்களிலும் இந்த மொட்டைகோரி இருந்ததாக உள்ளூர்வாசியான கமலேஸ்வரன் (வயது 67) அவரது பாட்டனார் தனக்கு கூறியதாக சொன்னார். இந்த அழிவடைந்த நிலையில் உள்ள மொட்டை கோரியினை பார்க்கும்போது, கட்டடத்தின் உறுதித்தன்மையை பலப்படுத்துவதற்காக அதன் நடுவே நீளமான தண்டவாளம் ஒன்றினை வைத்து கட்டியுள்ளனர். எனவே இது இலங்கைக்கு புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு (1858) பிரித்தானியர் கட்டிய கட்டடம் ஆக இருக்கலாம் என்பது எனது அனுமானம்.

இது சதுர வடிவமாக செங்கற்களால் கட்டப்பட்டிருப்பதுடன், அவை இவ்வளவு காலமும் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களையும் தாண்டி, சாந்து பூசாத நிலையிலும் உறுதியான நிலையில் இருப்பது அக்கால கட்டடக் கலையின் சிறப்பையும் மூலப்பொருட்களின் கலப்படம் இல்லாத தன்மையையும் வெளிப்படுத்துகிறது. இந்த வெளிச்சவீடு கட்டிய காலங்களில் கடலானது தற்போது நிலப்பகுதியாக உள்ள இடத்தை நோக்கி சற்று விரிவடைந்ததாக இருந்திருக்க வேண்டும்.

Batt Light house 3 2 புராதன சின்னங்களை பேணி பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமை – மட்டுநகர் திவாஇதற்கான ஆதாரங்களாக அவ்விடத்தில் குழிகள் தோண்டும் போது கீழே முருகைக் கற்பாறைகள் அதிகமாக காணப்படுவதும், இயற்கையான உவர்நீர் குளங்கள் அல்லது மடுக்கள் காணப்பட்டதையும் குறிப்பிடலாம். அக்காலத்தில் மீனவர்கள் ஒன்பது மாதங்கள் தான் கடலுக்கு செல்வார்களாம். மற்றைய மூன்று மாதங்களும் கடலுக்கு மரியாதை கொடுத்து மீன்பிடிக்க செல்லாமல் இருப்பார்களாம் அந்த காலத்தில் தான் கடலில் காற்று பலமாக வீசும் எனவும் குறிப்பிடுகிறார்கள் அதனை அவர்களது பேச்சுத் தமிழில் ‘மாடக் காற்று’, ‘பட்டினி காற்று’ எனவும் கூறுகிறார்கள்.

இந்த பட்டினி காற்று வீசும் காலங்களில் கடலுக்கு வெளியே உள்ள மடுக்களில் இயற்கையாகவே சேகரிக்கப்பட்டிருந்த கடல்நீரில் கடலுக்கு மீன் பிடிக்கப் போகும் காலங்களில் வளர்த்த மீன்களை பிடித்துதும், காத்தான்குடியில் உள்ள முஸ்லீம் வியாபாரி ஒருவர் 25 சதத்துக்கு 2 கிலோ மரவள்ளிக்கிழங்கு என்ற விலையில் கொண்டு வந்து அவ்விடத்தில் விற்பாராம். அந்த மரவள்ளிக்கிழங்கையும், மடுவில் பிடித்த மீன்களையுமே அவ்வேளையில் உண்பதாகவும் அந்த நேரத்தில் நிகழும் நிகழ்வுகளை சுவாரசியங்கள் மிக்க கதைகளுடன் கூறி முடித்தார் அவ்வூரிலுள்ள முதிர்ந்த மீனவர் ஒருவர்.

கடலில் வரும் கப்பல்களுக்கு அதாவது அனேகமாக பாய்க்கப்பல்கள் தான் இங்கு வருமாம். அவ்வாறு வரும் கப்பல்களுக்கு லாம்பு மூலமாக இந்த வெளிச்சவீட்டில் இருந்து தான் சைகைகள் கொடுப்பார்களாம். இங்கு லாம்பு எனக் குறிப்பிடப்படுவது தற்போது மீனவர்கள் பயன்படுத்தும் கடல்லாம்பை ஒத்த பண்புகளை கொண்டதாக இருந்திருக்க வேண்டும். அதாவது நீண்ட நேரத்துக்கு கடல் காற்றுக்கும் தாக்குப் பிடித்து எரியக்கூடிய தீப்பந்தம் போன்ற அமைப்பாகும். இதை எரிக்க மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

கடல் மிக அருகில் இருந்ததாலும் தற்போது வளர்க்கப்பட்டுள்ள சவுக்கு மரங்கள் உள்ள அமைப்பு அந்தக் காலத்தில் காணப்படாமையாலும் இந்த வெளிச்சவீட்டின் உயரம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகத்தான் காணப்பட்டுள்ளது. தற்காலத்தில் வீதி ஓரங்களில் காணப்படும் மின்சாரக் கம்பிகளை தாங்கி நிற்கும் தூண்களின் அளவு உயரம்தான் இருந்ததாக அறியக்கிடைக்கிறது. மச்சுவா, வத்தை என இரு வகை மரங்களால் கடையப்பட்ட வள்ளங்கள் அக்காலத்தில் இருந்ததாகவும், அவைகள் மூலம் இந்தியாவில் இருந்து மட்டக்களப்பு கோட்டைக்கு பொருட்கள் கொண்டு வரும் பெரிய பாய் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கி மட்டக்களப்பு வாவி வழியாக கோட்டை வரை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பார்களாம்.

மீன் பிடிக்கும் மேலாக இவ்வாறான சரக்கு பொருட்களை காவி இறக்கும் வேலை மூலம் அவர்கள் சற்று அதிக வருமானத்தை பெறுவதாகவும் அவ்வாறு ஓடுகள், கற்கள் இந்தியாவில் இருந்து இங்கே கொண்டு வந்த கதைகளை மீனவர்களின் உரையாடல் மூலம் அறிய முடிந்தது. புதியவை வந்தவுடன் பழையதை மறப்பது இயல்புதான் எனினும் புராதன சின்னங்களை பேணி பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும்.

 

Exit mobile version