பிரித்தானியா பள்ளிவாசலில் துப்பாக்கி தாக்குதல்– வலுக்கின்றது மத மோதல்கள்

233

பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் செவன் கிங்ஸ் பகுதியில் அமைந்துள்ள செவன் கிங்ஸ் மஸ்ஜித் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் இரவு (09) துப்பாக்கி துப்பாக்கிப் பிரயோக சத்தங்கள் கேட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இஸ்லாமிய மக்களின் ரம்ழான் பண்டிகை தொழுகையின் போது இந்த துப்பாக்கித் தாக்குதல் இடம்பெற்றிருந்ததுடன், முகமூடி அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கியுடன் பள்ளிவாசலுக்குள் பிரவேசித்தததாக பிரித்தானியா காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு கைத்துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் யாரும் காயமடையவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொழுகை ஆரம்பமாகிய அரைமணி நேரத்தில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும் அதன்போது நாம் மேல் தளத்தில் இருந்தோம் என தொழுகையில் கலந்துகொண்ட இப்ராகீம் குசேன் (19) தெரிவித்துள்ளார்.

முகமூடி அணிந்த நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதனை முகாமையாளர்கள் கண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நியூஸ்லாந்தில் உள்ள பள்ளிவாசலில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 50 இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பெருமளவு தமிழ் மக்கள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் கலிபோனியாவில் உள்ள யூதர்களின் தேவாலயத்தில் துப்பாக்கிதாரி மேற்கொண்ட தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்திருந்தனர்.

மதங்களுக்கும் இனங்களுக்குமிடையிலான மோதல்களை தவிர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் பாரபட்சம் காண்பிக்காது நடவடிக்கை எடுக்க தவறி வருவதே இந்த மோதல்களுக்கான காரணம் என அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பட உதவி: பி.பி.சி