பிரித்தானியா தொழிற்கட்சித் தலைவருக்கு எதிராக கொதித்து எழுந்த சிறீலங்கா ஊடகம்

120

தானம் செய்வது என்பது தனது வீட்டில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த தகுதி பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பைன் மற்றும் நிழல் நிதி அமைச்சர் ஜோன் மக்டோனெல் ஆகியோருக்கு இல்லை என சிறீலங்காவின் பிரதான வார ஏடு தனது சினத்தை வெளியிட்டுள்ளது.

மாவீரர் தினமாக இருந்தாலும், வேறு எந்த நிகழ்வாக இருந்தாலும், தொழிற்கட்சித் தலைவர்கள் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான வாதத்தை தொடர்ந்து முன்வைக்கின்றனர்.

சிறீலங்கா படையினர் போர்க்குற்றங்களை மேற்கொண்டனர், அவர்கள் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர், சிறீலங்கா அரசு இனப்படுகொலையை மேற்கொண்டிருந்தது என வாதங்களை கோர்பையினும் ஏனையவர்களும் முன்வைக்கின்றனர்.

ஆனால் அவர்கள் உண்மையாகவே மனித உரிமைகளை மதிப்பவர்களாக இருந்தால் பிரித்தானியா படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

புpரித்தானியா படையினர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்குரிய ஆதராங்கள் தங்களிடம் உள்ளதாக 11 விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளதாக பிரித்தானியாவின் பி.பி.சி ஊடகம் அண்மையில் தெரிவித்திருந்தது எனவே சிறீலங்கா படையினர் தொடர்பில் குற்றம் சுமத்துவதற்கு கோபையினுக்கு தகுதியில்லை என சிறீலங்கா ஊடகம் கடுமையாக தொழிற்கட்சித் தலைவரை விமர்சித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசும் அதன் படையினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் தொழிற்கட்சி அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக கொழும்பு ஊடகம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது என்பது மாகவம்ச சிந்தனைகளில் இருந்து சிங்கள தேசமோ அதன் ஊடகங்களோ மாறவில்லை என்பதையே காட்டுவதாக தமிழ் ஆய்வாளர் ஒருவர் இலக்கு மின்னிதழுக்கு தெரிவித்துள்ளார்.