பிரித்தானியாவில் பிறக்சிற் குழு வெற்றி – ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தண்டனை

261

கடந்த வாரம் பிரித்தானியாவில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடன் புதிதாக நைஞல் பெராச் தலைமையில் உருவாக்கப்பட்ட பிரக்கிச் குழு பெரும் வெற்றியீட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கடும்போக்கு கொண்ட பெராச் இன் கட்சியின் இந்த வெற்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று (26) இரவு வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் படி பிரக்சிற் கட்சி 28 ஆசனங்களையும், லிபரல் டெமோக்கிரட்டிவ் கட்சி 15 ஆசனங்களையும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 ஆசனங்களையும், பசுமைக் கட்சி 7 ஆசனங்களையும், ஆளும் கொன்சவேட்டிவ் கட்சி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறி;த்த விவாதங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து கடந்த வாரம் பிரித்தானியாப் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போதைய தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு பலத்த பின்னடைவைக் கொடுத்துள்ளது.

பிரித்தானியாவின் வரலாற்றில் கொன்சவேட்டிவ் கட்சி சந்தித்த மிகப்பெரும் தோல்வி இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனது கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து பேச்சுக்களில் ஈடுபடும் குழுவில் தனது கட்சிக்கும் இடம் வேண்டும் என பெராச் தெரிவித்துள்ளார்.

10 தொகுதிகளில் 9 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பெராச் இன் கட்சி 32 விகித வாக்குக்களைப் பெற்றுள்ளது.

இது ஒரு பெரிய வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் நாள் வெளியேறுவதற்கான கால எல்லையை நாம் கொண்டுள்ளோம். அந்த நாள் தான் நாம் வெளியேறும் நாளாக இருக்கும் என தேர்தல் முடிவுகளின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெராச் தெரிவித்துள்ளார்.

எமக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர், நாமும் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறவேண்டும், எதிர்வரும் ஐந்து மாதங்களில் நாம் ஒரு தீர்மானத்தை எட்டுவோம். அதன் மூலம் எந்த நிலை வந்தாலும் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திரேசா மேயின் பிரக்சிற் பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள பிரதம உறுப்பினரான ஒலி றொபின்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா சேர்ந்து இருப்பதற்குரிய பணிகளை இரகசியமாக செய்வதாக பிரக்சிற் குழுவின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.