பிரிட்டன் விடுவித்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவில் என்கிறது அமெரிக்கா

222
52 Views

பிரிட்டன் விடுவித்த ஈரானிய எண்ணெய் கப்பல் சிரியாவில் என்கிறது அமெரிக்கா

பிரிட்டனின் ஜிப்ரால்டா மாகாண அரசால் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் சிரியாவின் டார்டஸ் துறைமுகம் அருகே இருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

சிரியாவுக்கு சட்டவிரோதமாக எண்ணெய் ஏற்றிச் சென்றதாக பிரிட்டனால் சிறைப்பிடிக்கப்பட்ட ஈரானின் “ஏட்ரியன் தர்யா 1” எண்ணெய்க் கப்பல், சிரியாவின் டார்டஸ் துறைமுகம் அருகே இருக்கும் செயற்கைக்கோள் படத்தை ‘மேக்ஸார் டெக்னோலஜிஸ்’ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதற்கு முன்னதாக, அந்தக் கப்பலின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா வெளியிட்ட கறுப்பு வெள்ளைப் படத்துடன் இந்த செயற்கைக்கோள் படம் பொருந்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஈரானின் ஏட்ரியன் தர்யா 1 எண்ணெய்க் கப்பல் சிரியாவுக்குச் செல்லவில்லை என்று யார் கூறினாலும், அவர்கள் உண்மையை மறைக்கப் பார்ப்பதாக அர்த்தம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு மசகு எண்ணெய் ஏற்றிச் சென்றதாக, ஈரானின் ‘கிரேஸ் 1’ எண்ணெய்க் கப்பலை ஜிப்ரால்டா ஜலசந்தியில் பிரிட்டன் கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி சிறைப்பிடித்தது.

எனினும், பிரிட்டனுக்கும், ஈரானுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அந்தக் கப்பல் இரு வாரங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டது.

தற்போது ‘ஏட்ரியன் தர்யா 1’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அந்தக் கப்பல் எங்கு செல்கிறது என்ற விபரத்தை ஈரான் வெளியிடவில்லை.

இந்த நிலையில், அந்தக் கப்பல் சிரியா துறைமுகம் அருகே இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்வதற்கு வசதியான இடத்துக்கு ஓட்டிவந்தால் பல மில்லியன் டொலர் தருவதாக அந்த கப்பலின் கெப்டனுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மின்னஞ்சல் செய்தது அண்மையில் தெரியவந்தது. இந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையே ஒப்புக்கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here