பிராந்திய விவகாரங்களில் இலங்கை நடுநிலையாகவே செயற்படும்: புதிய வெளிவிவகாரச் செயலாளர்

பிராந்திய விவகாரங்களில் இலங்கை அரசு நடுநிலையாகச் செயற்படவே விரும்புகின்றதென புதிய வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ரைம்ஸ் ஓவ் இந்தியாவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இலங்கை, இந்தியாவின் மூலோபாயப் பாதுகாப்பு தொடர்பான கரிசனைக்குரிய நாடாக இருக்க முடியாது. ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் தேசிய பாதுகாப்பே முதலாவதாக உள்ளது. பிராந்திய பாதுகாப்பு இல்லாமல் தேசிய பாதுகாப்பு காணப்படாது.

ஆனால் பொருளாதார விவகாரத்தில் இலங்கைக்கு புதிய முதலீடுகளைக் கொண்டுவரும் எவரையும் வரவேற்பதற்கு ஜனாதிபதி தயாராக இருக்கின்றார். அத்துடன் கடன்களுக்கு இடமில்லை எனவும் இலங்கை நடுநிலைமையோடு இருக்க விரும்புகின்றது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற தேசிய மூலோபாயச் சொத்துக்களின் முழுமையான கட்டுப்பாட்டை எந்த வெளிநாட்டுக்கும் வழங்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்” என்றார்.