பாலமேடு ஜல்லிக்கட்டு: சிறந்த காளை உரிமையாளருக்கு 1இலட்சம் பெறுமதியான பரிசு

169

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்றன. இதில் 676 காளைகளும் 936 வீரர்களும் கலந்து கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். அவற்றில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தை 1, 2, 3ஆம் திகதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.

அந்த வரிசையில், அவனியாபுரத்தில் தை முதலாம் நாளான நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று தை இரண்டாம் நாளன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

முறைப்படி உடற் பரிசோதனை, முன்பதிவு செய்து அனுமதி பெற்று வாடிவாசல் வரிசையில் நின்ற காளைகளுக்கு நடுவில் திடீரென அனுமதி பெறாத காளைகளை அனுப்ப முயன்றோர் மீது பொலிசார் தடியடி நடத்தியதால் போட்டி தொடங்குவதற்குத் தாமதமாகியது.

காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டுத் தொடங்கியது. அமைச்சர், ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட பின்னர் போட்டிக்கான காளைகள் களமிறக்கப்பட்டன. மொத்தம் 700 காளைகள், 936 வீரர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சுமார் 75பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டனர். ஆனால், நிறைய காளைகள் களமிறக்கப்படவேண்டியிருந்ததால், போட்டியின் கால நேரம் இரண்டு முறை நிடிக்கப்பட்டு மாலை 5மணிக்கு ஜல்லிக்கட்டு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு சில சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இன்றைய போட்டியில் அனைத்து சமூக பிரதிநிதிகள் சேர்ந்து அமரும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

16 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக மாருதி சுசுகி இக்னிஸ் கார் வழங்கப்பட்டது. 13 காளைகள் அடக்கிய ராஜா என்ற இளைஞருக்கு இரண்டாம் பரிசாக ரிவிஎஸ் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. 10 காளைகள் அடக்கிய கார்த்தி என்ற இளைஞர் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

இது தவிர போட்டியில் பங்கேற்ற விரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா தொடங்கி வெள்ளிக் காசு, தங்கக்காசு, அலுமாரி என ஏராளமான வரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையின் உரிமையாளருக்கு 1 இலட்சம் மதிப்புள்ள கன்றுடன் கூடிய நாட்டு பசு மாட்டை விழாக் குழுவினர் முதல் முறையாக வழங்கியது பார்வையாளரைக் கவர்ந்தது.