Tamil News
Home உலகச் செய்திகள் பாகிஸ்தானில் விமானப்படை விமானம் விபத்திற்குள்ளானது

பாகிஸ்தானில் விமானப்படை விமானம் விபத்திற்குள்ளானது

பாகிஸ்தானில் விமானப்படை விமானமான PAF விமானம் வழமையான பயிற்சியின் போது விபத்திற்குள்ளானதாக அறிவிக்கப்படுகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை வழமையான பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான PAF விமானம் விபத்திற்குள்ளானதாக விமானப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானி விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும், தரையில் விழுந்த விமானத்தினால் எந்த ஒரு உயிர்ச் சேதங்களோ அல்லது சொத்து இழப்புகளோ ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து இந்த விபத்து 5ஆவது விபத்து எனவும், இது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி ஒரு PAF  விமானம் பயிற்சியின் போது விபத்திற்குள்ளாகியது. அதே மாதத்தில் மற்றும் ஒரு PAF மிராஜ் விமானம் பயிற்சியின் போது விபத்திற்குள்ளானது. இந்த விபத்துக்களின் போது விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த PAF விமானம் ஒன்று இஸ்லாமபாத்தில் விபத்திற்குள்ளானது. இதில் விமானியான அக்ரம் என்னும் கமாண்டர் உயிரிழந்தார்.

மேலும் ஜனவரி மாதம் மியான் வாலி என்னுமிடத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த PAF  T-77 என்னும் விமானம் விபத்திற்குள்ளாகியதில் அதற்குள் இருந்த படைத் தலைவர் ஹரிஸ் பின் காலித் மற்றும் விமானப்படை அதிகாரி ரஹ்மான் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

வழக்கமான பயிற்சியின் போது விமானம் விபத்திற்குள்ளானது இது ஐந்தாவது தடவையாகும் எனவும். இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version