பரவத் துடிக்கும் பார்த்தீனியம் – சுடரவன்

1353

தமிழீழ தேச விடுதலைப் போராட்டம்   என்பது சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது தேசத்தின் இறைமையை மீட்டெடுத்தல் என்ற ஒரு குறுகிய கோட்பாட்டை இலக்காகக் கொண்டு மட்டுமே முன்னெடுக்கப்படவில்லை. அது சமுதாயத்தில் காணப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து ஒரு உன்னத தேசத்தை கட்டியெழுப்பும் ஒரு உயரிய  நோக்கையும் கொண்டே பயணித்தது. இந்த உன்னத குறிக்கோளுக்காகவே ஆயிரம் ஆயிரம் உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டன.

இத்தகைய ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் முன்னோடிச் செயற்பாடாக அன்று  தமிழீழ நடைமுறை அரசொன்று கட்டியமைக்கப்பட்டு செயற்பட்டு வந்தது. அங்கு தேச விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை சமுதாய ஒடுக்குமுறைகளை இல்லாதொழிப்பதற்கான உறுதியான செயற்பாடுகளும் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதனை வேறெந்த தேசவிடுதலைப் போராட்டத்திலும் காணமுடியாத ஒரு சிறப்பியல்பென்றே கூறவேண்டும்.

சாதிய ஒடுக்குமுறை தமிழர் தாயகத்தில் பரவலாக காணப்பட்ட ஒரு கொடிய ஒடுக்குமுறை வடிவமாகும்.  குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் அது மிகவும் இறுக்கமானதொன்றாக காணப்பட்டது.  ‘மேல்சாதியினர்’ என்றுதம்மைத் தாமே அழைத்துக் கொள்பவர்களால் அங்கு மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளும் இழைக்கப்பட்ட கொடுமைகளும் எண்ணிப்பார்க்க முடியாதவை. தற்போதைய இளையதலைமுறை அறியாதவை. இத்தகைய செயற்பாடுகள் பலருக்கு நம்ப முடியாதவையாய் கூட இருக்கலாம்.

பொதுக் கிணறுகளில் தண்ணீர் பாவணையத் தடுத்தல், தேநீர் கடைகளில் தனியான குவளைகளைப் பயன்படுத்தல், அவர்களின் கல்விகற்கும் உரிமையைத் தடுத்தல், ஆடை அணிவதில் கட்டுப்பாடுகளை விதித்தல், ஆலயங்களுக்குச் செல்வத்தைத் தடுத்தல் போன்றவை அங்கு சாதாரணமாக காணப்பட்டன.

ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைக்கான குரல்களை எழுப்பமுயன்ற போதெல்லாம் அவை மிக கொடுமையாக ஒடுக்கப்பட்டன. குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டனர். குடிநீர் கிணற்றில் நஞ்சு கலந்து கூட மக்கள் கொல்லப்பட்ட கேவலமான கொடூரங்களும் நடந்தேறின. சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மக்களும் செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டனர். முற்போக்கு சக்திகளால் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டபோதும் அவை பெரியளவில் பயன்விளைவுகளைத் தரவில்லை.

1980களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் வரஆரம்பித்த போது இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டன. தமிழீழ விடுதலைப்புலிககள்   தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங் களில் இத்தகைய சாதிய ஒடுக்குமுறைகளை தடைசெய்தனர். தமிழீழ நடைமுறை அரசு தாக்கமாகச் செயற்பட ஆரம்பித்த நாட்களில் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்டம் தமிழீழ சட்டக்கோவையில் ஒரு அங்கமாகியது. (The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code 1994 ) இதன் மூலம் சாதி ஒடுக்குமுறை சட்டரீதியாக குற்றமாக்கப்பட்டது.

தமிழீழ நடைமுறை அரசில் சாதியத்தால் சமூகத்தில் எந்த வித செல்வாக்கையும் செலுத்தமுடியவில்லை. இங்கு சாதியம் முற்றாக ஒழிக்கப்பட்டது என்று கூறிவிட முடியாவிடினும் சாதியம் அங்கு நாளுக்குநாள் வலுவிழந்து சென்றுகொண்டிருந்தது. சமதத்துவ சமூதாயம் நோக்கி எமது சமூகம் நடைபோட்டுக்கொண்டிருந்தது.

சட்டத்தால் மட்டுமன்றி, சிந்தனை ரீதியிலும் மாற்றங்களுக்கான நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்பட்டன.  இளந்தலைமுறையில் குறிப்பாக போராளிகள் மட்டத்தில் குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு ஏற்பட்டது. இது பின்னர் அவர்கள் சார்ந்த குடும்பங்கிளிலும் பரவலானது.  தேசத்திற்காக உழைப்பவர்கள் அதற்காக தம்முயிரை ஈகம் செய்தவர்கள் உயர்வானவர்களாக மதிக்கப்படும் உன்னத மாற்றம் நிகழத் தொடங்கியது. குறுகிய சிந்தனைகள் புறந்தள்ளப்பட்டு நாம் அனைவரும் தமிழர்கள் என்ற தமிழ் தேசிய உணர்வு வலுப்பெற்றது.

இப்படித்தான் எங்கள் தேசம் அன்று இருந்தது. அப்படி இருந்த எமது தியாக பூமியில் இன்று நச்சுவிதைகள் மீண்டும் வேர்விட முனைந்து நிற்கும் காட்சிகள் எம்மைக் கவலை கொள்ளச் செய்கின்றன. இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆலயங்களில் ஆலய பிரவேசத்தடை நிலவுவதாக புள்ளிவிபரங்களுடன் செய்திகள் வெளிவருகின்றன.

கடந்த வருடம்  யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் அமைந்துள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில்  கடந்த வருடம் திருவிழா இடம் பெற்றிருந்தது. அங்கு தேர் திருவிழாவின்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எனக் குறிப்பிட்டு பக்தர்களை,  வடம் பிடிக்க அனுமதிக்காது ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தேர் இழுத்த வெட்கக்கேடான சம்பவம் நிகழ்ந்தேறியது. இந்தப் பின்னணியில் இவ்வருட திருவிழா நடத்தப்படாமல்   ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.   சேடமிழுத்துக் கிடந்த சாதியப்பேய் இன்று எமது தேசத்தில் மீண்டும் எழுந்து தாண்டவமாடத் துடிக்கிறது.

சாதியம் மட்டுமன்றி மதவாதமும் அந்நிய தேசத்தில் இருந்து இங்கு ஆரவாரத்துடன் கால் பதிக்கிறது. தமிழீழ தேசிய அரசு என்றும் மதச் சார்பற்ற கொள்கையைப் கடைப்பிடிக்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. தமிழ் தேசிய இனம் எந்த வகையிலும் பிளவுபட்டு நிற்கலாகாது என்ற விடையத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு மிக அவதானத்துடன் செயட்பட்டு வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மதசார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் அதேவேளை சகல மதங்களையும் சார்ந்த மக்களினதும் அடிப்படை உரிமையான வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு, எமது இயக்கம் உத்தரவாதமளிக்கும். சகல மதத்தவர்களும் தமது ஆன்மீக அபிலைசைகளைப் பூர்த்தி செய்யவும், மத-கலாசாரப் பண்புகளைப் பேணி வளர்க்கவும் எமது இயக்கம் ஊக்கமளிக்கும்.

தமிழ் இன ஒருமைப்பாட்டையும், தேசிய சுதந்திரத்தையும் இலட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம், மதசார்பான கொள்கையை கடைபிடிப்பது தவறானதாகும். இந்த குறுகிய மதவாதப்போக்கு தமிழ் இன ஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும்.   – (விடுதலைப் புலிகள் ஆடி – ஆவணி 1992 இதழ்)

தமிழீழ நடைமுறையரசு சமய சார்பின்மைக்கு எடுத்துக்கு காட்டாய் விளங்கியது. மதங்கள் சமமாக மதிக்கப்பட்டன. எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. மக்களின் மனங்களிலும் மதநல்லிணக்கம் ஆழப் பதிந்திருந்தது. அங்கு புதுக்குடியிருப்பு சிவன் கோவிலுக்குச் செல்லும் கிறிஸ்தவர்களையும், குழந்தை யேசுவில் குவியும் இந்துக்களையும் காணமுடியும்.

ஆனால் இன்று அந்த நிலைமையை கெடுக்க, தமிழீழ தேசியத்தைச் சிதைக்க இந்தியாவின் இந்துத்துவா ஆசியுடன் களமிறங்குகிறது ஒரு கயவர் கூட்டம். மறவன்புலவு சச்சிதானந்தம் , மட்டக்களப்பு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் போன்றோர் இன்று இந்து மதவாதம் பேசி தமிழர்களை பிரிக்கும் செயல்களில் ஈடுபாட்டு வருகின்றனர்.

இதன் அண்மைய நிகழ்வுதான் இந்திய  இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது குழுவினரின் ஈழவருகை. தமிழீழத்தில் இனவழிப்பு இடம்பெற்றபோது வாய்திறவாது இருந்தவர்கள், இந்துக் கோவில்களில் தஞ்சமடைந்த  மக்களை சிறிலங்கா படைகள் கொன்று குவித்தபோது ஏனென்று கேட்காதவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் எந்த முகத்தோடு நிற்கிறார்கள். மதவாதத்தை கக்கும் தமிழ் தேசியத்திற்கு என்றும் எதிராக செயற்படும் இந்த கும்பல், இங்கு காலூன்ற முயல்வது பெருத்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.

வீரமும், ஈகமும் விதைக்கப்பட்டிருக்கும் எமது ஈழமண்ணில் இத்தகைய சாதித்துவ, மதவாத செயற்பாடுகள் இடம்பெறுவதை அனுமதிப்பது வெட்கக்கேடானது. இத்தகைய செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது தேசத்தை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும். குறிப்பாக எமது இளைய தலைமுறை காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.

ஒப்பற்ற உயிர் விலைகொடுத்து நாம் இன்று உயர்த்திப் பிடித்திருக்கும்  தமிழீழ தேசியம், இந்த அறிவியலுக்கு அப்பாற்பட்ட சாதியத்தாலோ அல்லது மனநிலை பிறழ்வு மதவாதத்தினாலோ சிதைந்து போவதற்கு அனுமதிக்கமாட்டோம்  என உறுதிகொள்வோம்.