பத்து வருடங்களின் பின்னரும் நீதி வழங்கப்படவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

224

பேரழிவுகளை ஏற்படுத்திய போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை சிறீலங்கா அரசு இன்றுவரை வழங்கவில்லை என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கணகாணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பத்தாவது நினைவேந்தலை தமிழ் மக்கள் உலகம் எங்கும் நினைவுகூர்ந்து வருகையில் மனித உரிமைகள் காண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் (18) வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனால் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதும் போரில் பாதிக்கப்பட்ட எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை.

இனங்களுக்கு இடையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் ஒன்று போரின் பின்னர் சிறீலங்கா அரசுக்கு கிட்டியிருந்தது. ஆனால் சிறீலங்கா அரசுகள் அதனை பயன்படுத்தவில்லை, போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை, யாரும் தண்டிக்கப்படவில்லை என மனித உரிமைகள் கணகாணிப்பகத்தின் தென்னாசியாப் பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

தீர்மானம் 30/1 இன் படி சிறீலங்கா அரசு 25 சரத்துக்களை நிறைவேற்ற சம்மதம் தெரிவித்திருந்தது. அனைத்துலக நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டநிபுணர்கள் ஆகியோர் உள்ளடங்கிய விசாரணைக்குழுவை அமைப்பதும் அதில் ஒன்று.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அது முழுமையாக செயற்படவில்லை.

அனைத்துலக நீதிபதிகள் விசாரணைகளில் ஈடுபடுவதை சிறீலங்கா அரசியல்வாதிகள் மீண்டும் மீண்டும் எதிர்க்கின்றனர். போர் வெற்றி வீரர்களை தண்டிக்க முடியாது என அவர்கள் வாதிடுகின்றனர். அனைத்துலக நீதியாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டால் அவர்கள் மீதான அரசியல் அழுத்தங்கள் குறைவாகவே ஏற்படலாம்.

மிகவும் சிறிய அளவே முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. இது இனங்களுக்கு இடையில் முரன்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்கலாம், நாட்டின் உறுதித்தன்மையையும் பாதிக்கும் அதனை தடுக்க வேண்டும் என்றால் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் அதன் தலைவர் மிசேல் பச்சிலற் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது என்ற உறுதிமொழியையும் சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை. அதற்கான மாற்று தடைச்சட்டத்தை சிறீலங்கா முன்வைத்துள்ளது. அது மட்டுமல்லாது அந்த சட்டத்தை பயன்படுத்தி தற்போதும் படையினர் மக்களை கைது செய்து தடுத்துவைத்து வருகின்றனர்.

கைது செய்தவுடன் துன்புறுத்தல்களும், பாலியல் வன்கொடுமைகளும் தற்போதும் இடம்பெறுவதாக 2016 ஆம் ஆண்டு சிறீலங்காவக்கு பயணம் மேற்கொண்ட ஐ.நாவின் சிறப்பு தூதுவர் தெரிவித்திருந்தார். படையினர் நிலைகொண்டுள்ள நிலங்களை மீளக் ஒப்படைப்பதும் மெதுவாகவே நடைபெறுகின்றது.

போர்க் குற்றங்கள் மேற்கொண்டவர்களை தண்டிக்காது, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்லா இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். 58 ஆவது படையணியை வழிநடத்திய அவர் பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரி பிரபாத் பலுத்வற்ற மீண்டும் பணியில் கடந்த 11 ஆம் நாள் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

புனித ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தையும் தடுக்கின்றது. தற்கொலைத் தாக்குதலுக்கு பின்னர் இடம்பெற்ற காடையர்களின் தாக்குதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் சிறீலங்கா காவல்துறை மெதுவாகச் செயற்படுகின்றது.

போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ள நிலையிலும் சிறீலங்காவில் வாழும் ஒவ்வொரு மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்க சிறீலங்கா அரசு முன்வரவேண்டும். அது நடைபெறவேண்டுமெனில் நீதி வழங்கப்படுவதுடன், இழப்பீடுகளும் வழங்கப்பட வேண்டும். மனித உரிமைகளை மேம்படுத்தும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.