பகிடிவதை செய்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் வீட்டில் ஆவா குழுவினர் தாக்குதல்

பல்கலைக்கழக பகிடிவதை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலிற்கு ஆவா குழு முகநூல் ஊடாக உரிமை கோரியுள்ளது.

யாழ். மானிப்பாய், நவாலி வீதியிலுள்ள வீட்டில் முகங்களை மறைத்து சென்ற அடையாளம் தெரியாதோரால் நேற்று இரவு (12) பத்து மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது வீட்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன், சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்கள் தேடப்பட்டு வரப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று ஆவாக்குழு என தம்மை அடையாளப்படுத்தி முகநூல் இல் செயற்பட்டு வரும் இளைஞர்கள் தங்கள் முகநூலில் “தமிழர்களின் அடையாளமாகக் காணப்படும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடத்தப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிராக எமது செயற்பாடுகள் இடம்பெறும்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.