நியூயோர்க்கை விட்டு வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்த ஊரான நியூயோர்க் நகரத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இனி இவர் புளோரிடாவில் வாழப் போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் அதிகளவில் வரி சலுகைகளை அனுபவிக்கும் நபர் ஆவார். அவருடைய ட்ரம்ப் டவர் தொடங்கி கசினோ கிளப் வரை பலவற்றிற்கு அவர் ஆரம்பத்திலிருந்தே வரிச் சலுகைகளை அனுபவித்திருக்கின்றார். இப்போதும் பலவற்றிற்கான சலுகைகளை அனுபவித்து வருகின்றார்.

ஆனாலும் அவர் தொடர்ந்து அமெரிக்கா அதிக வரியை விதிக்கின்றது என்று புகார் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றார். முக்கியமாக நியூயோர்க்கில் அதிக வரி விதிக்கப்படுவதாகவும் கூறி வருகின்றார்.

தன்னுடைய நிறுவனங்கள் அதிகமாக வரி செலுத்துகின்றது. அமெரிக்காவில் பணக்காரர்கள் வாழ முடியவில்லை. சிலருக்கு நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக என்னைப் போன்ற பணக்காரர்களிடம் கொள்ளையடிக்கின்றார்கள் என்று ட்ரம்ப் பலமுறை கூறியிருக்கின்றார். அதன் வெளிப்பாடாகவே அவர் நியூயோர்க்கை விட்டு வெளியேறுவதாக அறித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ளார். அதில் 1600 பென்சில்வேனியா அவெனியூ, வெள்ளை மாளிகை இந்த இடத்தில் இருப்பது எனக்குப் பிடித்துள்ளது. இன்னும் 5 வருடங்கள் கூடுதலாக இங்கே இருப்பேன் என்று நம்புகின்றேன். இதன் மூலம் அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்றுவேன்.

ஆனால் என்னுடைய குடும்பமும் நானும் புளோரிடாவில் உள்ள பால்ம் பீச்சை சொந்த, நிரந்தர இருப்பிடமாக மாற்றிக் கொள்ளப் போகின்றோம். நான் நியூயோர்க் மற்றும் நியூயோர்க் மக்களை எப்போதும் மனதில் வைத்திருப்பேன். ஆனால் இங்கிருந்து வெளியேறுகின்றேன்.

நான் இந்த நகரத்திற்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பல மில்லியன் டொலர்களை வரியாக செலுத்துகின்றேன். ஆனாலும் என்னை மோசமாக நடத்துகின்றார்கள். அரசியல் தலைவர்கள் என்னை மிக மோசமாக நடத்துகின்றார்கள். சிலர் என்னை மிக மிக மோசமாக நடத்தியிருக்கின்றார்கள்.

இந்த முடிவை எடுக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் இதுவே கடைசியில் சரியான முடிவாக இருக்கும். ஒரு பிரதமராக நியூயோர்க் மக்களுக்கு நான் எப்போதும் உதவியாக இருப்பேன். நியூயோர்க் நகரத்திற்கும் எப்போதும் என் மனதில் தனி இடம் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.