தொல்பொருள் திணைக்களத்தின் காணி சுவீகரிப்புத் திட்டம்

184

வடக்கு கிழக்கில் 337 இடங்களை தொல்பொருள் திணைக்களம் சுவீகரிப்பதற்கு அடையாளப்படுத்தி வைத்திருப்பதாகவும்,  வடக்கு கிழக்கில் உள்ள பகுதி நிலங்களை சிறிலங்கா அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் சுவீகரிக்க திட்டம் தீட்டியுள்ளதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் வன ஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா உட்பட சிறிலங்கா அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளும் இது போன்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் குற்றஞ்சாட்டுவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களையும் தொல்பொருள் திணைக்களம் சுவீகரிக்கும் நடவடிக்கையில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் உரையாற்றும் போது, இப்போதிருக்கும் ஆட்சியிலுள்ளவர்களின் இறுதிக் கட்டத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்றும், போர்க் குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு உதவி தேவை இல்லை என்று சொன்ன அரசாங்கம், ஐஎஸ் பிரச்சினைக்கு உலகநாடுகளில் ஏராளமான புலனாய்வாளர்களை விசாரணையில் இணைத்தது. இதை எதிர்க்கட்சியினரும் மௌனம் காத்து வந்தனர். என்று கூறினார்.

இதே போன்று தமிழர் பிரச்சினைக்கும் வெளிநாட்டு உதவியைப் பெற்று தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.