தேவையோ 30,000 இருப்பதோ 3,000 நாம் என்னசெய்வோம்-ஆதங்கப்படும் ஆளுநர்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் வேளையில்,நியூயோக் பிராந்தியம் பாரிய அச்சுறுத்தலை எதிர் நோக்கிவருகிறது.

இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நியூயோக் ஆளுநர் அண்ட்ரூ கியூமோ தமது பிராந்தியத்திலேயே அதிக நோய்த் தொற்று காணப்படுவதாகவும் ஆனால் அதனை எதிர்கொள்ள தம்மிடம் வளங்கள் மிக பற்றாக்குறையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமக்கு 30,000 சுவாசக்கருவிகள் தேவைப்படுகின்ற வேளையில்
3,000 மட்டுமே கைவசம் இருப்பதாகவும் மேலும் 7000 தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலைமைகள் தொடர்பில் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டிய அவர் உரிய கருவிகளை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எதிர்வரும் 14 முதல் 21 நாட்களுக்குள் சிகிச்சையளிக்க நியுயோக்கில் 140,000 மருத்துவமனை படுக்கைகள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் இங்கு வெறும் 53,000 மருத்துவமனை படுக்கைகளே உள்ளன.

முன்னராக 110,000 படுக்கைகள் தேவை என நாம் மதிப்பிட்டிருந்த போதும் தற்போதைய நிலைமையை உற்றுநோக்கும் போது அவை போதாது என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.

இந்த வளப்பற்றாக்குறைகளை மத்திய அரசு சிரத்தை எடுத்து உடனடியாக நிறைவுசெய்யாவிடின் நியூயோக் மாநிலம் பாரிய விளைவுகளை சந்திக்கும் என்கிறார் அண்ட்ரூ கியூமோ