தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும் -பரமபுத்திரன்

“ இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்று சொல்கின்றது திருக்குறள்.

ஒரு செயல் நடப்பதற்கு கருவி, கருத்தா இரண்டும் தேவை. மன்னர் காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர், இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே இது தொடர்பாக பேசியிருக்கின்றார். கருத்துக் கூறியிருக்கின்றார். திருக்குறள் எவ்வளவு காலத்துக்கு முன்பு சொல்லப்பட்ட ஒன்று. இப்பவும் அதை சொல்லிக்கொண்டு என்று சொல்லும் குரல்களும் கேட்கின்றது.

வாழும் காலத்தில், அனுபவ வாயிலாக, நிகழ்கால நிலையை சொன்னால், மக்கள் அல்லது படித்தவர்கள் என்று தம்மை சொல்பவர்கள் எத்தனை பேர் ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. இதனை எழுதும் நான் உட்பட எல்லோரும் பிறரை இழித்தும், பழித்தும் எம்மை நாமே உயர்த்தியும் பெருமைப்பட பழக்கப்பட்டு விட்டோம். சரிபிழை, நன்மைதீமை என்பன இங்கு அவசியமில்லை.

எமக்கு பயன் கிட்டுமானால் எதற்கும் துணைபோவோம். தவறின் எதிர்ப்போம். இதுதான் இன்றைய நிலை. நான் வாழவேண்டும், மற்றோரை ஆளவேண்டும், என்னை எல்லோரும் அறியவேண்டும, எனக்கு புகழ் வரவேண்டும் என்பதுதான் எமது கொள்கையே என்று சொல்ல முடியும். இந்த இடத்தில் இன்னுமொன்றையும் கூற விரும்புகின்றேன்.

ஆங்கிலேயன் வந்தான், அடிமை கொண்டான் என்று நாங்கள் சொன்னாலும், அவர்களின் வருகைதான் சாதாரண மக்களையும் தமிழ் படிக்கவைத்தது. தமிழை அறியவைத்தது. எங்களையும் சிந்திக்க தூண்டியது. ஆனால் அப்போதிருந்து சிக்கல் மறுவளமாக தொடங்கிவிட்டது. தமிழர்களில் ஒரு பகுதியினர் ஆங்கிலம் படித்தார்கள். தேர்ச்சி பெற்றார்கள். தாங்கள் உயர்ந்தவர்கள் என்று தமக்குத்தாமே முடி சூடிக்கொண்டார்கள். ஆங்கிலம் படித்தவர்களை அறிவாளிகள் என்று தமிழ் மக்கள் நம்பினார்கள்.

மீண்டும் தமிழ்மக்களுக்கு தெரியாதமொழித் தமிழ்மக்களிடம் தமிழர் சிக்கிக் கொண்டார்கள். பலர் ஆங்கில அரசின் தொழிலாளர்கள் ஆகினார். அவர்கள் வழங்கிய தொழிலினை மேன்மையாக கருதினர். தன் இனத்துக்கு துணை செய்யவேண்டியவர்கள், ஆங்கிலம் படிக்கவில்லை என்பதற்காக அந்த இனத்தையே இழிந்ததாக எண்ண ஆரம்பித்தனர். இதன் விளைவு என்ன என்பது யாபேரும் அறிந்த ஒன்று. இனி படித்தவர்களை சற்று பார்ப்போம்.

படித்தவர்கள் எப்படி இருப்பார்கள். படிக்கும்போதே பக்கத்தில் இருப்பவனை முந்தவேண்டும் என்று சிந்திப்பார்கள். மற்றவனுக்கு எதுவுமே சொல்லிக்கொடுக்க கூடாதென்று எண்ணுவார்கள். நான் முதலாவதாக வரவேண்டும் என்று யோசிப்பார்கள். எனக்கே நல்ல வேலை கிடைக்கவேண்டும் என்று முயற்சி செய்வார்கள்.

கல்வி என்பது சமூக நேசம் கொண்டவனை வளர்க்காமல் தன்னை மட்டும் எண்ணும் இயல்பையே வளர்க்கின்றது. தன்னைமட்டும் எண்ணும் இயல்பும், தமது மக்களையே குறைத்து மதிப்பீடும் போக்கும் முசுலீம்கள் அல்லது சிங்கள மக்களிடம் மிகவும் குறைவு. தமிழரின் இந்த இனத்துக்கு எதிரான பண்பை சிங்கள அரசியல்தலைவர்கள் சரியாகவே பயன்படுத்துவர். அதனால்தான் முக்கிய பதவிநிலைகளில் தமிழர்களை நியமிப்பர். காரணம் பதவிக்கும் தனக்கு பதவி தந்தவனுக்கும் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கக்கூடிய நல்ல மனிதன் தமிழன். அதற்காக தன் இனத்தையே காட்டிக்கொடுப்பான். இனி மக்களாட்சி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மக்களாட்சி என்று பெயர் இருந்தால் மட்டும் அது மக்களாட்சி அல்ல. அந்த ஆட்சி மக்களுக்காக நடந்தாலே அது மக்களாட்சி. இன்று எங்கெல்லாம் மக்களாட்சி நடக்கின்றது என்று எண்ணிப்பாருங்கள். அங்கெல்லாம் மக்களாட்சி நடக்கின்றதா என்று ஆய்வுசெய்து பாருங்கள்.

இன்றைய நாட்களில் பொதுவாக தேர்தல்கால பேச்சுக்களும், மக்கள் போடும் வாக்குகளும் மட்டும்தான் மக்களாட்சி என்ற பெயரை தம்வசம் தக்க வைத்திருக்கின்றன. தேர்தல்முடிவு வந்தபின்பு எதுவும் மக்கள் சார்ந்து நடப்பதாக தெரியவில்லை. நடப்பதுமில்லை.

மக்களாட்சி என்றால் ஒரு அரசு இருக்கவேண்டும். அந்த அரசினை நிர்வகிக்க ஒரு தலைவர், அந்த தலைவர் மட்டும் அனைத்து செயல்பாடுகளையும் செய்துமுடிக்க இயலாது எனவே மக்கள் தெரிவிலிருந்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், என்றும், இந்த ஆட்சியை இலகுபடுத்த, நடைமுறைப்படுத்த அரச ஊழியர்கள் செயல்படவேண்டும் என்றும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அன்றாட வாழ்நிலை சிக்கல்களையும் அவதானித்து தீர்க்கவேண்டும். அரச ஊழியர்கள் மக்களுக்கு தேவையான அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற உதவவேண்டும். இப்படியான கட்டமைப்பினூடாக பயணிக்க வேண்டிய ஆட்சி இன்று எப்படிப் பயணிக்கின்றது என்று எத்தனைபேர் சிந்திக்கின்றார்கள் என்பது கேள்விக்குரிய ஒன்று. இந்த பொதுவான கேள்வியுடன் ஈழத்து தமிழ் அரசியல் என்னவென்று பார்ப்போம்.

ஈழத்து தமிழ்அரசியல் என்பதை இன்றைய அரசியல் செயல்பாட்டு சூழலுடன் மட்டும் ஒப்பிட்டு நோக்கமுடியாது. இதனை கடந்தகால அரசியல் சூழலுடன் இணைத்தே சிந்திக்கவேண்டும். உலகத்திலுள்ள பல நாடுகள் குறுகிய காலத்துள் சனநாயக முறையில் அல்லது வேறு ஆட்சியமைப்பு வகையில் தம்மை வலுவான நாடுகளாக கட்டியெழுப்பியுள்ளன. இதனால் ஈழத்திலிருந்து தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர், முசுலீம்கள் கூட ஏனைய முன்னேறிய நாடுகளுக்கு படையெடுக்கின்றார்கள்.

இலங்கையில் அரசியல் செய்பவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு கடைசிகாலத்தில் தொடர்ந்து தங்களது அரசியலை செய்கின்றார்கள் என்று சொல்லலாம். இதற்கு காரணம் வெளிநாடுகளில் வசதியாக வாழலாம் என்பதால் என்று மட்டும் சொல்லமுடியாது.

நிம்மதியாக வாழலாம் என்ற கருத்தும் இருக்கலாம். இந்தநிலை இலங்கை அரசியல்வாதிகளுக்கு சாதகமான நிலையை தோற்றுவிக்கின்றது என்று உறுதியாக கூறலாம். அதாவது குறித்த தொகுதியினர் மட்டுமே இன்று அரசியல் செய்கின்றார்கள். அவர்களைமீறி புதியவர்கள் அரசியலுக்குள் புகுவது முடியாத காரியம் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.

அதற்கும் மேலாக அரசியல் என்பது குறிப்பிட்ட மக்களின் பிள்ளைகள், சொந்தக்காரர்கள் தவிர ஏனையோருக்கு ஆபத்தானாது என்றும் ஒருநிலை உண்டு. அத்துடன் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக எதனையும் துணிந்து சொல்லும் எண்ணமும் அரசியல்வாதிகளிடம் குடி கொண்டுவிட்டது. இதனை வைத்து பார்க்கும்போது தனிப்பட்ட நபரின் வெற்றியா அல்லது மக்களுக்கு வெற்றியா என்ற கேள்வி மக்களிடமும்/ அரசியல்வாதிகளிடமும் முன்னிறுத்தப்படவேண்டியது.

இன்றைய உலக அரசியல்சூழல் இன அடிப்படையில் கட்டமைப்பதாக சொல்லமுடியாது. தனித்த நாடுகள் மட்டத்திலும் சரி, உலகநாடுகள் மட்டத்திலும் சரி அரசியல் என்பது மத அடிப்படை சார்ந்ததாகவே முனைப்பு பெறுகின்றது என்று சொல்லமுடியும். இலங்கையில் பௌத்தம் வலுவாக இருப்பதால் அதுசார்ந்து அடக்குமுறை எழுகின்றது.

பௌத்த மதத்தின் இந்த வலுவான நிலை சைவத்தமிழர்களை மட்டுமே குறிவைப்பதாக தோன்றும். ஆனால் அந்த நிலை இன்று மாறிவருகின்றது. தமிழ்மக்கள் சிங்களவருடன் மோதுவது போல தெரியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது உண்மை அல்ல. ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து குழந்தைப்பிள்ளையை கடிக்கும் நிலைபோல சைவத்தமிழர்கள் தாக்கப்படும்போது அதனுடன் இணைந்த ஏனைய மதத்தினரான முசுலீம்கள், கிறித்தவர்கள் என்பவர்களும் தாக்கப்படுவர்.

உண்மையில் சைவத்தமிழர்கள் பரிதாபத்துக்குரிய மக்கள். காரணம் முசுலீம்கள், கிறித்தவர்கள் மதஅடிப்படையில் வலுவான பிணைப்புள்ளவர்கள். அவர்களுக்கென்று அமைப்புகள் கொண்டவர்கள். ஆனால் சைவர்கள் அவர்களுக்கென்று குரல் கொடுக்க வலுவான அமைப்புகள் அற்றவர்கள். காலம் முழுவதும் கோவில் கட்டுகின்றோம் என்று பணம் வசூலிப்பவர்களையும், சாமியார்கள் என்று தங்களை கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லுபவர்களையும், சாமியிடம் இவர்களின் செய்திகளை சொல்ல ஊதியமாக அருச்சனை செய்யப்பணம் வாங்குவபவர்களையும், அந்தப்பணத்தில் பங்குகேட்கும் கோயில் நிர்வாகங்களையும் நம்பி வாழ்பவர்கள்.

இறைவனை கும்பிட்டுவிட்டு உண்டியலில் காசுபோட்டு இறைவன் எங்களை வாழவைக்கிறான் என்று முழுமையாக நம்புபவர்கள். இவர்களை சுலபமாக ஏமாற்றலாம். எனவே உலகில் வலுவான மதங்கள் என்ற நிலையை கிறித்தவமும், இசுலாமுமே பிடித்துக்கொள்கின்றது. அவை இரண்டும் எதிர்த்து மோதும் வல்லமை கொண்டவை. அதேபோன்று பெளத்தம் உள்ள நாடுகளில் பெளத்த அடக்குமுறை நடந்தபடிதான் உள்ளது. எனவே தமிழ்மக்கள் ஒடுக்கப்பட்டதும் இலங்கையில் நடக்கக்கூடிய அடுத்த போர் இசுலாம், கிறித்தவம் சார்ந்ததாக இருக்கும் என்பது ஏற்கனவே காட்டப்பட்டுவிட்டது.

அதேவேளை பௌத்த சிங்களம் எந்தக் கவலையும் இல்லாது இதனை பார்த்துக்கொண்டிருக்கும் என்பதே சரியானது. காரணம் முசுலீம்கள் தமிழர்கள், அதேபோல் தமிழர்கள் வாழும் பகுதிகளை பாதிப்பு பகுதியாக தெரிவுசெய்தால் அப்போதும் தமிழர்களே பாதிக்கப்படுவர்.

தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து நோக்கினால் அரசியல் விழிப்புணர்வு குறைந்த அல்லது விழிப்புணர்வு அற்ற மக்களாகவே வாழ்கின்றனர் என்று சொல்லமுடியும். அரசியல் என்பது தனித்து அரசியல்வாதிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரித்தானது. தமிழர்களிடம் அது இல்லை. “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பது வெறும் பேச்சாய் எம்முன் சொல்லப்படுகின்றது.

படிக்கும் மாணவர்கள் கூட பண்பற்றவர்களாகவே உள்ளனர். கொலை, கொள்ளை, வீதிவிபத்து, போதை, சாதி என்பன மக்களை வருத்துகிறது. சமூதாயத்தை சீர்படுத்தவேண்டிய கல்விச்சமூகம் அந்த மக்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்கின்றது. யாரையும் நாங்கள் பகைக்க வேண்டாம் என்று இவற்றை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றது அரசியல் தலைமைகள். சிங்கள அரசுதான் மக்களை கட்டுப்படுத்துகின்றது.

அரசுதானே கட்டுப்படுத்தவேண்டுமென்பது சரி. ஆனால் சட்டம் ஒழுங்குகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாட்டில் நல்ல நிலையை ஏற்படுத்தவேண்டியது யார் பொறுப்பு? எமக்குள் ஒற்றுமை, புரிந்துணர்வு வேண்டாமா?. இதனை மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடாதா?. அரசியல் என்பது மக்களுக்கு உரிமை பெற்றுத்தருவோம் என்று சொல்வதுதானா?. என்ற கேள்விகளை நாம் கேட்கவேண்டும். இதுவும் அரசியலுடன் சேர்ந்ததுதான்.

நான் சிறுவயதாக இருக்கும் காலத்தில் நடந்த கோவில் திருவிழாக்கள் எனக்கு ஞாபகமிருக்கின்றது. திருவிழாக்காலங்களில் அங்குள்ள இடங்கள் கடைகளால் நிரம்பும். பல்வகை பொருட்களால் அந்தக் கடைகள் நிரம்பியிருக்கும். கடலை, கச்சான், சோழப்பொரி, இனிப்புபண்டங்கள், குளிர்களி இப்படி இன்னும் சொல்லலாம். அதுபோல கோவிலுக்கு தேவையான பொருட்கள் விற்கும் ஒரு சிலகடைகளும் இருக்கும். ஆனால் கோவிலுக்கான பொருட்கள் விற்கும் கடையிலும் ஏனைய கடைகளிலே கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேவைப்படும் காலத்தில் அவர்கள் சரியாக வியாபாரம் செய்ய தவறமாட்டார்கள். ஏனென்றால் இக்காலத்தை விட்டால் அவர்களுக்கு வருமானமும் இல்லை. வாழ்க்கையும் இல்லை. எனவே எதனை எப்போது செய்யவேண்டுமோ அதனை அப்போதே செய்யவேண்டும்.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” யாருக்கும் பழக்கம் மாறாது. இன்றைய அரசியல் தலைவர்கள் பலர் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார்கள். எங்களால் முடியாது என்றால் அடுத்தவர்களை அனுமதிக்கவேண்டும் அதுவும் நடப்பதாக தெரியவில்லை. இந்த அரசியல் தலைவர்கள் அன்றே தமிழர்களுக்கு தனிஉரிமை, தமிழருக்கு விடுதலை, தமிழருக்கு தனிநாடு என்று முழங்கியவர்கள். எனவே தலைவர்களின் வல்லமையை தமிழர்கள் அறிவார்கள். தமிழர்களின் இயல்பை அரசியல் தலைவர்கள் அறிவார்கள். இளைய சமுதாயம்கூட தமிழ்மக்களின் எதிர்காலத்தை சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே அரசியல் கூட்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா என்பது மக்களுக்கே தெரிந்த ஒன்று.