Tamil News
Home செய்திகள் தேசிய பாதுகாப்புக்கு தமிழர் காணிகள் அச்சுறுத்தல்…;அவ்வாறில்லாத காணிகள் விடுவிக்கப்படும் – வடமாகாண ஆளுநர்

தேசிய பாதுகாப்புக்கு தமிழர் காணிகள் அச்சுறுத்தல்…;அவ்வாறில்லாத காணிகள் விடுவிக்கப்படும் – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்தில் படையினர் அடாத்தாக அபகரித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான மாவட்ட ரீதியான மீளய்வு கூட்டங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல்  இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.மாவட்டத்தில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் பற்றி மீளாய்வுக் கூட்டம் யாழ்.ஆளுநர் அலுவலகத்திலும், வன்னிமாவட்டத்திற்கான கூட்டம் கிளிநொச்சியிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் சம்பந்தமாக, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வடமாகாணத்தில் படையினரிடத்தில் உள்ள பொதுமக்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினோம். இதன்போது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமில்லாத அனைத்துக்காணிகளையும் அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் விடுவிக்குமாறு கூறியிருந்தார்.

அதற்கமைவாக, வடமாகாணத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இவ்விடயம் சம்பந்தமான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதன் பிரகாரம், எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்ட ரீதியாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் பற்றி விபரங்களை எனக்கு அனுப்பி வைக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதன் பின்னர் மாவட்ட ரீதியாக உரிய தரப்பினரையும், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில்,

போரின் பின்னர் படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இறுதியாக ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுக்களின் பிரகாரமும் அடுத்த ஒருமாத காலத்திற்குள் எஞ்சிய காணிகளை விடுவிப்பேன் என்ற வாக்குறுதிக்கும் அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகள் மற்றும் மாவட்டங்கள் ரீதியாக முழுமையான தகவல்களை ஆளுநரிடத்தில் முன்வைத்து அவற்றை விடுவிப்பது தொடர்பில் உரிய தரப்பினைரையும் அளைத்து ஆராயவுள்ளோம்.

வலி.வடக்கில், தெற்கில் விடுவிக்கப்படாதிருக்கும் காணிகள் மற்றும் பலாலி விமான நிலையத்திற்கு அவசியமாகவிருக்கும் காணிகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தவுள்ளோம என்றார்.

இதேவேளை, கீரிமலையில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை நட்சத்திர சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு அதனை மத்திய, மாகாண கூட்டு நிருவாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த நிர்மாணம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதோடு அம்மாளிகையின் பின்னால் அமைந்துள்ள கோவில் மற்றும் சமாதிக்குச் சொந்மான தனி நபரையும் குறித்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version