திலீபன் நினைவேந்தல் தடை; அடுத்த நடவடிக்கை குறித்து ஆராய தமிழக் கட்சிகளுக்கு மாவை அழைப்பு

85
66 Views

தியாகி திலீபனின் நினைவேந்தலைத் தடுக்கும் அரசின் நடவடிக்கையை குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ்க் கட்சிகள் கூடி ஆராயவுள்ளன. இதற்கான ஏற்பாட்டை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே மேற்கொண்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நகர்வை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அவரே நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தியாகி திலீபனின் நினைவேந்தலை தாயகமெங்கும் மக்கள் வழக்கமாக அனுஷ்டித்து வருகிறார்கள். இம்முறை தடை உத்தரவு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவா அல்லது வடக்கு பாதுகாப்பு தரப்பு எடுத்து நடவடிக்கையா என்பது தெரியவில்லை. அதையும் ஆராயவேண்டும்.

அரசின் கொள்கை முடிவென்றா லும், பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கை யென்றாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை, தமிழ்ச் சட்டத்தரணிகள் நீதிப்பொறிமுறையின் ஊடாகவே பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுப்பது பற்றியும் நாம்ஆராயவுள்ளோம்.

அது தவிர, யாழ். மாநகரசபை எல்லைக்குள் நினைவேந்தலை தடை செய்து நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளார்கள். இது தொடர்பாக இன்று மதியத்தின் பின் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஆராயவுள்ளோம். தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அநேகமான கட்சிகள் இன்று சந்திப்பில் கலந்து கொள்வார்கள்” என்றார்.

இன்றைய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உள்ளிட்ட தரப்புக்கள் கலந்து கொள்ளவுள்ளன எனத் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here