தாய்மொழி மனித உரிமைகளின் படிக்கல்-ஆய்வாளர் சூ.யோ.பற்றிமாகரன்

71

               < அனைத்துலகத் தாய்மொழித் தினம் பெப்ருவரி 21>
ஒருவரின் ‘தாய்மொழி’ அல்லது ‘நாவின் தாய்’ என்பதை ஐக்கிய நாடுகள் சபை அவர் தனது மிக இளமைக்காலத்தில் பேசத் தொடங்கிய மொழி என்று இரத்தினச் சுருக்கமாக விளக்குகிறது. தாய்மொழி என்பது ஒரு மொழியாகவே தொன்மை முதல் கருதப்பட்டு வந்தாலும் பன்மொழிகள் பேசும் பல்கலாச்சார குடும்பப் பின்னணியில் வளரும் குழந்தைகள் இரு மொழிகளைத் தம் இளமை மொழியாக அகப்படுத்திக் கொள்ளுதல் இயல்பு நிலையாக உள்ளது.

இதனால் இரண்டு மொழிகள் தாய்மொழிகளாக மாறிவிடும் நிலையில் எந்த மொழி அந்தக் குடும்பத்தால் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ அதில் குழந்தை பெருவளர்ச்சி பெற்று மற்றைய மொழி வழக்கிறந்து போய்விடும் அபாயம் இயல்பாகிறது.

ஒருமொழி அழியும் பொழுது வெறுமனே அம்மொழியின் சொற்களும் அச்சொற்களுக்கான பொருள்களும் மட்டும் அழியவில்லை அந்த மொழி பேசிய இனத்தின் அடையாளம்,தொன்மை மிகு வரலாறு,பெருமைமிகு மனிதக் கலாச்சாரம் அனைத்தும் அதனுடன் சேர்ந்து அழிகின்றன.

இதனாலேயே தேச இனங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் மேலாண்மைகள் தங்கள் நாடுகளில் ஒரு மொழிக் கொள்கையைக் கொண்டு வந்து அத்தேச இனத்தின் இருப்பினையே அழித்து அம்மக்களையும் அவர்களின் மண்ணையும் அடிமை கொள்கின்றன.

இதனால் தாய்மொழி என்பது ஒரு மனிதனின் மனித உரிமைகளின் படிக்கல்லாகிறது.

ஒரு குழந்தை வளரும் நாட்டில் ஒரு மொழிக் கொள்கையை அரசு முன்னெடுக்கும் போக்கு இருப்பின் அரசின் ஆட்சி மொழியே குழந்தையின் வழக்கு மொழியாகப் புறத்தேவைகளாலும் புறக்கவர்ச்சிகளாலும் மாற மாற குழந்தையின் தாய் வழி மொழி அந்தக் குழந்தைக்கு வழக்கிறந்த மொழியாகி விடும். இதனை ஒரு மொழியின் அழிவுக்கான புறக்காரணியாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்திற்கான அனைத்துலக அமைப்புச் சுட்டிக் காட்டியுள்ளது.

அதே வேளை இவ் அமைப்பு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தாய்மொழியினைப் பேசுவதில், எழுதுவதில், வாசிப்பதில் காட்டி வரும் எதிர்மறையான போக்கே ஒரு தாய் மொழியின் அழிவுக்கான உட்காரணியாகத் தொடர்கிறது எனவும் எச்சரிப்பு செய்துள்ளது.

உலகெங்கும் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில், குறிப்பாக ஆங்கில காலனித்துவ ஆட்சி நிலவிய நாடுகளில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக்கப்பட்டதின் விளைவாகவும் வர்த்தகமொழியாக, அறிவியல், தொழில்நுட்ப மொழியாக ஊக்குவிக்கப்பட்டதன் விளைவாகவும் ஒருமொழிக் கொள்கை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆசிய,ஆபிரிக்க,அமெரிக்க, அவுஸ்திரேலிய தாய் மொழிகள் பல்லாயிரக்கணக்கில் வழக்கிறந்த வரலாற்றை உலகு பதிவு செய்துள்ளது.

காலனித்துவ காலத்தின் பின்னரும் ஒருமொழிக்கொள்கையைப் புதிய காலனித்துவமாகத் தனது மக்கள் மேல் திணித்த இலங்கை போன்ற பல நாடுகளில் இன்றும் அந்த நாடுகளின் பெரும்பான்மையினர் அல்லாத தேசமக்களின் தாய்மொழிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று உலகில் 7000 முதல் 8000 வரையான மொழிகள் காணப்பட்டாலும் 200க்கு உட்பட்ட மொழிகளே நாடுகளில் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சில நூறு மொழிகளே மக்களால் நாளாந்த வாழ்வில் அவர்களால் விளங்கிப் பேசப்பட்டு வருகின்றன.

இதன் விளைவாகக் கடந்த முன்னூறு ஆண்டுகளில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் உலகில் இருந்து மறைந்து விட்ட வரலாற்றையும்,இன்றுள்ள மொழிகளிலும் அரைவாசி மொழிகள் அழிந்து கொண்டு போகின்ற சமகால வரலாற்றையும், 2010ம் ஆண்டின் உலகமொழிகளின் வரைபடத்தின் படி 1950 முதல் 2010க்கு இடையான 60 ஆண்டு காலத்தில் 2500 மொழிகள் இறந்து கொண்டும் 230 மொழிகள் இறந்து விட்டதுமான வரலாற்றையும், தற்பொழுது இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிவுறும் வேகத்தையும் யுனெஸ்கோ பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில் உலகில் தாய்மொழிகள் அழிந்து வரும் அபாயத்தை நீக்குவதற்கான அனைத்துலகக் கடப்பாட்டின் வெளிப்பாடாகவே உலகத் தாய்மொழித்தினத்தை ஐக்கிய நாடுகள் சபை 21ம் நூற்றாண்டின் தொடக்கமாக 2000ம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறது.

1952ம் ஆண்டு பெப்ருவரி 21ம் நாள் பாக்கிஸ்தானின் ஆட்சியில் இருந்த வங்களாப் பிரதேசத்தின் டாக்காப் பல்கலைக்கழகத்தில் வங்காள மொழிக்கான உரிமையினைக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பார்ட்டம் செய்த பொழுது 4 மாணவர்கள் கொன்றழிக்கப்பட்ட துயர வரலாற்றை மீள்நினைவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தை உலக தாய்மொழித் தினமாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தி கொண்டாடி வருகிறது.

16.05.2007 இல் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/61/266 இலக்கத் தீர்மானம் உலகில் உள்ள மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளை நிலைப்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டுமென உலக நாடுகளுக்கு அறிவித்தது.
இன்று உலகத்தாய்மொழி தினத்தை தமிழர்களாகிய நாமும் கொண்டாடும் இவ்வேளையில், இறந்து கொண்டிருக்கும் மொழிகளில், தமிழ்மொழியையும் உலகின் மொழிகளின் வரைப்படம் சுட்டிக்காட்டியுள்ளமையை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எவ்வளவுதான் மின்எண்ணியலில் தமிழ்மொழி சிறப்புற்றாலும், உலகெங்கும் ஈழத்தமிழர்கள் உலகின் முக்கிய நகரங்களில் எல்லாம் அரசியல் புகலிட வாழ்வின் வழி பரந்து வாழ்ந்து அந்த அந்த நாடுகளின் இனத்துவச் சிறுபான்மைக் குடிகளாகி இன்று தமிழ் உலகமொழியாகப் பரிணாமம் அடைந்து வந்தாலும்,

தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் மொழியைத் தங்கள் பிள்ளைகளின் மிகஇளமைக்காலப் பேச்சு மொழியாகவும் இளமைக்கால வழக்கு மொழியாகவும் ஈழத்திலும், தமிழகத்திலும்,தாங்கள் வாழும் நாடுகளிலும் வழக்கு மொழியாகத் தொடராது வாழும்வரை தமிழ்மொழி உலகில் அழிந்து விடக்கூடிய மொழிகளின் பட்டியலில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கும்.

மேலும் ஈழத்தமிழர்களுக்குத், தங்கள் தாய் மொழியின் அழிவுக்கு 1956 முதல் இன்று வரை ஈழத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கள் ஒருமொழிக் கொள்கை மூலம்; திட்டமிட்டுச் செய்து வரும் செயற்பாடுகளை உலகுக்கு எடுத்துரைக்கும் பெரும் பொறுப்பும் கடமையும் இன்றைய தினத்தில் உண்டு சிங்கள பௌத்த பேரினவாதம் 1956ம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டம் என்னும் ஒரு மொழிக்கொள்கையைப்பிரகடனம் செய்து ஈழத்தமிழர்களின் தாய்மொழி அழிப்புச் செயற்திட்டத்தை தொடங்கியது.

64 ஆண்டுகளாகத் தொடரும் அந்த ஈழத்தமிழர் தாய்மொழி அழிப்புத் திட்டத்தின் உச்சமாக இன்று கோட்டபாய இராஜபக்ச அரசு வெளிப்படையாகவே “ அபே ரட்ட (எங்களுடைய நாடு), அபே ஜாதிய (எங்களுடைய இனம்), அபே ஆகமய (எங்கள் மதம்) ” என்று சிங்கள பௌத்த நாடாக இலங்கையை அறிவித்துள்ளது.

அத்துடன் தமிழ் மக்களின் சனநாயகத்தினை மறுத்து சிங்கள பௌத்த பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா என்பதனால்,எந்த அரசியல் அதிகாரப் பரவலாக்கலையும் தமிழர்களுக்குச் செய்ய இயலாது என இந்திய மத்திய அரசுக்குத் தன் அரச அதிபர் மூலமும் தன் பிரதமர் மூலமும் உறுதியாக எடுத்துரைத்துள்ளது.

தொடர்ந்து அமெரிக்காவோ ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணையகமோ மனித உரிமைகளை மீளப் பேணுதல், யுத்தத்தின் பின்னரான மாற்று நீதியை உருவாக்கல் என்பனவற்றின் அடிப்படையில் சிறிலங்கா இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோருக்கான பொறுப்புக்கூறல், நீதி வழங்கல், அவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் புனர்வாழ்வு என்பனவற்றுக்கான வழிகாட்டல்களைச் செய்ய இயலாது எனவும் துணிகரமாகச் சிறிலங்காவுக்கான ஐக்கியநாடுகள் சபையின் பிரதிநிதி மூலம் எடுத்துச் சொல்லி, நீதியானதும் பாராபட்டசமற்றதுமான சட்டத்தின் ஆட்சியை சிறிலங்காவில் அனுமதிக்க முடியாதெனச் செயற்பட்டு வருகிறது.

இச் சூழலில், சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய செயல்களால் அரசற்ற தேசஇனமாகத் தவிக்கும் ஈழத்தமிழர்களின் தாய்மொழி சிறிலங்காவால் அழிக்கப்பட்டு வருவதைத் தடுத்து, காக்கும் பொறுப்பு உலக நாடுகளதும் உலக அமைப்புக்களதும் கடமை என்பதை இந்தத் தாய்மொழித் தினத்தில் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் மக்களுக்கும் அரசுக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

அதே நேரத்தில் 1956 முதல் இன்று வரை ஈழத்தில் தாய்மொழியைப் பாதுகாப்பதற்காக உயிரிழந்த நூற்றியெழுபத்தாறாயிரத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களையும், பல இலட்சக்கணக்கில் உடமைகளையும் வாழ்வையும் வாழ்ந்த இடத்தையும் இழந்து தவிக்கும் ஈழத்தமிழ் மக்களையும் நினைவு கூறுவதும் ஐக்கிய நாடுகள் சபையின் கடமையும் பொறுப்பும் என்பதை இந்நாளில் சுட்டிக் காட்டுவதும் அவசிமாகிறது.

மேலும் ஈழத்தமிழரின் தாய்மொழியை இறக்கவைக்கும் இந்தப் புறக்காரணிகளை மாற்றியமைக்கக் கூடிய வழியில் அகக்காரணிகளையும் முன்னெத்தல் அவசிமாகிறது. உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்மொழியில் அவர்களைச் சிந்திக்கப் பழக்குதல் இதன் முதல் தேவையாகிறது. ஒருவர் எந்த மொழியில் சிந்திக்கின்றாரோ அந்த மொழியே அவரால் தன் மொழி என முன்னெடுக்கப்படும்.

எனவே தமிழ் மொழியை நாளாந்த வாழ்வில் பேச எழுத வாசிக்க இயலாத சூழலில் வாழும் பிள்ளைகளுக்கு அவர்களின் சிந்தனை தமிழ் வழி அமைந்தாலே அவர்களிடை தாங்கள் தமிழர்கள் என்ற இனத்துவ அடையாளத் தனித்துவம் தொடரும். தமிழ் பேச எழுதத் தெரியாத தமிழ் இளையவர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட உலகத் தமிழர்களிடை தமிழ்த்தன்மை தொடர்கிறது எனவும் இதுவே அவர்களின் இனத்துவத்தினை மற்றவர்கள் தனித்துவமாகப் பார்க்க வைக்கின்றது எனவும் ஆய்வாளர்கள் ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுவே தமிழினம் உலகில் அழியாது தொடரும் என்பதற்கான அறிவார்ந்த விளக்கமாகவும் உள்ளது.மேலும் மொழி தொடர்பாடலுக்கான ஒன்று என்று அதனையும் வர்த்தகப்படுத்தும் நோக்கில் இலக்கிய இலக்கண அறிவில்லாத தமிழ் கற்பித்தலை அதுவும் வேற்று மொழிகள் வழி செய்தல் என்னும் புதிய போக்கு சிலரிடை வேகம் பெற்று வருகிறது.

பல நாடுகளுக்குச் சென்ற அனுபவத்தில் தனிநாயகம் அடிகள் தமிழ் இலக்கியத்தை தமிழ்மொழி வழியாக கற்கும் திறன் பிள்ளைக்கு ஊட்டப்பட வேண்டும் என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அத்துடன் அவரின் வேண்டுகோளாலும் பின்னர் தமிழக முதலமைச்சர்களின் நிதி அளிப்புகளுடனும் தொடங்கப் பெற்ற ஐரோப்பிய பல்கலைகழகத் தமிழ்ப்படிப்புக்கள் மாணவர்கள் இடை தமிழ் படிக்கும் ஆர்வமின்மையால் மூடப்பட்டமையும் வரலாறு. எனவே தமிழ்க்கல்வி தமிழ்மொழி தமிழ் இலக்கியத்துடன் இணைந்து தமிழ்த்துறையில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களால் முன்னெடுக்கப்படும் பொழுதே தமிழின் உயர்கல்வியும் வளர்ச்சி பெறும் என்பது அனுபவ உண்மையாக உள்ளது.

கல்வியியலில் டிலிட் என்னும் உலகின் அதிஉயர் பட்டம் பெற்றவரான தனிநாயக அடிகளின் வழிகாட்டலை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு ஈழத்துப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் இனத்துவ வரலாற்றை கலாச்சார வரலாற்றைஎடுத்துக் கூறி வளர்த்தல் முதல் நிலையாகிறது.

இரண்டாவது நிலையாகச் சாதிமதஇனநிற பேதமற்ற மனிதாயத்தைப் பேணவைக்கும் அவர்களின் தொன்மைப்பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அந்த வடிவில் அறிமுகம் செய்வதும்,இதற்கு எதிரான சாதி,தீட்டு, துடக்கு ஆசாரமுறைமைகள் வழியான வடமொழியே சிறந்தது என்ற சமக்கிருதவாக்க மனநிலையை மாற்றியமைத்தலும்,இந்த உயர்நிலையாக்கக் கனவின் தொடர்ச்சியாக அமையும் ஐரோப்பிய மொழிகளை பிறகலாச்சாரங்களை உயர்ந்தன என எண்ண வைக்கும் ஐரோப்பியவாக்கத்தில் இருந்து விடுபடுதலும்,இவற்றையே தமிழ்ப்பண்பாடு தமிழ்க்கலாச்சாரம் என வளர்க்கும் அறியாமையை மாற்றுவதும் ஆன தொடர்செயற்பாடுகளைச் செய்யத் தமிழ்ப்பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

இத்தகைய மாற்றங்கள் மூலம் உலகமெங்கும் சிறப்பாக ஈழத்தில் தமிழ் மொழியைக்காக்கவும் வளர்க்கவும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என உலகத் தாய்மொழித்தினமான இன்று உறுதி எடுப்போம்.

தாய்மொழி அழிதலுக்கான புறக்காரணி அரசின் ஒருமொழிக் கொள்கை
 அகக்காரணி பெற்றோர்களது தாய்மொழி மேலான அலட்சியம்
உறுதிமொழி : தமிழைக் காக்க வளர்க்க இயன்றதை நாம் செய்வோம்

-ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் –