தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் கொழும்பில் இருந்து வேட்பாளர்களை நிறுத்துவதாக குற்றச்சாட்டு

14

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தினை மாத்திரமே அடிப்படையாக கொண்டு செயற்படுவதுடன் வன்னி தொகுதியை புறந்தள்ளி கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதியில் நிறுத்தியுள்ளதாக அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வன்னி தேர்தல் தொகுதியில் வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு எனக்கு மத்தியகுழுவால் வழங்கப்பட்டது. அருந்தவபாலனும் அதற்கு உடன்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் பலருடன் கதைத்தபோதும் யாரும் கட்சியில் இணைந்து போட்டியிட முன்வரவில்லை.

எனினும் நான் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்திருந்தேன். அதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்திலும் சந்திரகுமார் கண்ணனை வேட்பாளராக தெரிவு செய்த போது வன்னியின் முதன்மை வேட்பாளர் மற்றும் எமது கூட்டின் செயலாளர் என்ற வகையில் சிவசக்தி ஆனந்தனுடனும் உரையாடியிருந்தேன்.

அவர் சிறந்த ஒருவரை தெரிவு செய்துள்ளீர்கள் அழைத்து வாருங்கள் என தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் நான் அவருக்கு வேட்பாளராக போட்டியிடுவதற்கு உத்தரவாதம் வழங்கியிருந்தேன்.

எனினும் இன்று வெளியில் நடமாட முடியாத வகையில் தமிழ் மக்கள் கூட்டணியினர் செய்துவிட்டனர். கண்ணன் என்பவரை தெருவில் நான் விட்டுவிட்டதாக மற்றவர் கூறும் அளவிற்கு நடந்து விட்டனர். எனினும் நான் விக்னேஸ்வரனை மதிக்கின்றேன்.

எனினும் அவருடன் கூட இருப்பவர்கள் சிலர் தாங்கள் தான் விக்னேஸ்வரனின் கட்சிக்கு அடுத்த தலைவர் என்ற நிலையில் கனவு கண்டு செயற்பட்டு வருகின்றனர்.

அக்கட்சியில் மத்தியகுழு என்பது போலியாக உள்ளதே தவிர அங்கு எதுவும் தீர்மானிக்கப்படுவதில்லை. இந்நிலையில் நான் தொடர்ந்தும் தமிழ் மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்க விரும்பவில்லை.

இதன் காரணமாக வவுனியா மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்தும் உறுப்புறுமையில் இருந்தும் விலகிக்கொள்கின்றேன்.

அதுமாத்திரமின்றி எமது அரசியல் நிலைப்பாடுகள் இவ்வாறுதான் செல்கின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிகராக மாற்றுத்தலைமையாக உருவாக எண்ணியவர்களும் அந்த சிந்தனையுடன் சென்றவர்களும் இவ்வாறான நிலையில் காணப்படுகின்றமையை எண்ணி வெட்கப்படுகின்றேன்.

எமது அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரே விதமானவர்களாகவே இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்து தலைமையை எண்ணி நாம் செல்வது மடமைத்தனம். கிழக்கு மாகாணம் போல் வன்னியிலும் ஒரு தலைமை உருவாகுமாக இருந்தால் அதில் இணைந்து பயணிப்பேன்.

விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் நிகழ்வு நடந்தபோது வவுனியாவில் இருந்து 13 பேரூந்துகளில் மக்களை கொண்டு சென்றிருந்தோம். அன்று நாம் அவர்களை கொண்டு சென்றிருக்காவிட்டால் சொற்பமானவர்களே இருந்திருப்பார்கள். நாம் மக்களை கொண்டு சென்றமையினாலேயே அங்கு மக்கள் திரளாக காணப்பட்டது.

எழுக தமிழ் நிகழ்வு நடந்ததன் பின்னர் இடம்பெற்ற விருந்துபசாரத்திற்கு சென்றபோது அங்கு யாழ்ப்பாணத்தை தவிர வேறு ஒரு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அந்த பேரவையில் இருக்கவில்லை.

அப்போதே நான் அவர்களிடம் கேட்டேன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவை சேர்ந்த ஒருவரும் இல்லாத நிலை காணப்படுகின்றது ஏன் அங்கு தமிழர்கள் இல்லையா என கேட்டேன். இவ்வாறான நிலைதான் அந்த கட்சிக்குள் காணப்படுகின்றது.

விக்னேஸ்வரனும் ஏனைய நான்கு மாவட்டங்கள் தொடர்பில் சிந்திப்பதற்கு தயாராக இல்லை. வன்னியில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றக்கூடிய நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ள போதிலும் கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட வைத்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியானது இன்று ஒரு ஆசனத்தினைகூட பெற முடியாத அளவிற்கு உள்ளாகியுள்ளது என தெரிவித்தார்.<