தமிழ் பண்பாட்டு நிகழ்வாக இடம்பெற்ற வேல்ஸ் கல்விக் கூடத்தின் 10 ஆம் ஆண்டு நிகழ்வு

42

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் மாநிலத்தில் உள்ள தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் (TACS Wales) தனது 10 ஆவது ஆண்டு விழாவை தமிழ் மக்களின் கலை பண்பாட்டு நிகழ்வாக நிகழ்த்தியது அங்கு வாழும் மக்களை மகிழ்ச்சியில் ஆழத்தியுள்ளது.

வேல்ஸ் மாநிலத்தில் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ் கலாச்சாரங்களையும், மொழியையும் கற்பித்து வருகின்றனர். அதற்கு உறுதுணையான தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் என்ற அமைப்பும் செயற்பட்டு வந்தது.

தமிழ் மக்களின் மொழி மற்றும் கலைபண்பாட்டுக் கலாச்சாரங்களை பேணிப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயற்பட்டுவந்த இந்த அமைப்பு தனது 10 ஆவது ஆண்டு நிகழ்வை கடந்த 14 ஆம் நாள் சிறப்பாக கொண்டாடியுள்ளது.

ஏறத்தாள 300 பேர் கலந்துகொண்ட நிகழ்வில் மக்கள் இறுதிவரை அமர்ந்திருந்து நிகழ்வுக்களைக் கண்டு களித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்களின் பாரம்பரிய கலை வடிவங்களான கரகம், தாயலயம் பரதநாட்டியம், இசைப்பாடல்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாரதியார் கவிதைகள் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற நாடகங்களும் மிக அழகாக மேடையேற்றப்பட்டு சிறுவர்கள் நாவில் அமுதத் தமிழ் விளையாடியது பார்த்தவர்களை அதிசயத்தில் ஆழ்த்தியது.

தமிழடி தேடி என்னும் தமிழ் வளர்க்கும் சிறுமிகள் அனனியா சகோதரிகளின் நிகழ்ச்சி இதற்கு மகுடமாய் அமைந்திருந்தது.

தமிழ் கலை பண்பாட்டுக் கல்விக்கூடம் வேல்ஸ்

கார்டிஃப் தமிழ் மன்றம்

தமிழ்த் தேசியக் கல்விக்கூடம் வேல்ஸ்

சுவான்ஸ் நடனக்குழு

SwaRiGaMa இசைக் குழு

என ஈழத்தமிழரும் தமிழக தமிழ் மக்களும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்வை நடத்தியிருந்தனர். புலம்பெயர் தேசங்களில் பரந்துவாழும் தமிழ் மக்கள் தமது பிள்ளைகள் தமிழை கற்கவேண்டும், தமிழ் பண்பாட்டை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சிகளை ஒற்றுமையாக மேற்கொண்டு வருகின்றனர்.

உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர் தமது மொழி பண்பாடு பாரம்பரிய உணவு முறை மற்றும் உடைகள் என்பவற்றை பேணுவதும், தமிழின் உயர்வுக்கான தமிழ்ச் சங்கம் வளர்க்கும் மேடையை மேலும் உயிரோட்டமாக்குவதும் முக்கியமானதாகும்.

தமிழ் இனத்தின் இருப்பையும் அடையாளங்களையும் பேணவும் உலக மக்களிற்கு அதனை பகிரவும் இது ஒரு முன்னோட்டமான எடுத்துக்காட்டாகும்.