Tamil News
Home செய்திகள் தமிழ் கட்சிகளிடம் நிதானமும் செயற்திறனும் இருக்க வேண்டும் (நேர்காணல்)– மனோ கணேசன்

தமிழ் கட்சிகளிடம் நிதானமும் செயற்திறனும் இருக்க வேண்டும் (நேர்காணல்)– மனோ கணேசன்

மேலோட்டமாக பார்த்து தமிழர் ஐக்கியப்படவில்லை என்று கூற முடியாது. ஐக்கியம் என்ற ஒரே காரணத்துக்காக எல்லோரையும் ஒன்றாக சேர்த்து விடவும் முடியாது. அரசியலில் நிதானம் இருக்க வேண்டும், தூரப் பார்வை இருக்க வேண்டும், நேர்மை இருக்க வேண்டும். செயற்திறன் இருக்க வேண்டும்.

அரசாங்கத்தில் இருந்து கொண்டோ, எதிர்க் கட்சியில். இருந்து கொண்டோ வெறும் வெட்டிப் பேச்சுக்களை மட்டும் பேசிக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வாக்குகளை வாங்கிக்கொண்டு பாராளுமன்றம் சென்று வெறுமனே தூங்கிக் கொண்டிருக்க முடியாது என முன்னாள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் எமக்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலினை இங்கு தருகின்றோம்:

கேள்வி -தற்போதைய கொரோனா சூழ்நிலையில் வடக்கு கிழக்கு, மலையக பிரதேசங்களில் உள்ள பாமர மக்கள் எவ்வாறான கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்?

வடக்கு கிழக்கு மலையகம் என்பதை விட அதிகமாக மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பகா, களுத்துறை  மற்றும் புத்தளம் மாவட்டங்களிலேயே தான் கொரோனாவால்  பிரச்சினையும், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரப் பிரச்சினையும்  அதிகமாக உள்ளது. வடக்கு கிழக்கு, மலையத்தில் இதன் தாக்கம் இல்லையென்பதல்ல. கண்டி மாவட்டத்தில் ஒரு கொரோனா நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். அதேபோல யாழ்ப்பாணத்திலும் போதகர் ஒருவர் வந்து சென்றதன் பின்னர் தாவடிப் பிரதேசம் அடைத்து வைக்கப்பட்டு தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இது ஆங்காங்கே நடந்த சம்பவங்கள் மட்டும் தான். நான் மேற்கூறிய மாவட்டங்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கேள்வி-மிருசுவில் பகுதியில் 5வயதுக் குழந்தை உட்பட எட்டு அப்பாவித் தமிழர்களைக் கொன்ற இராணுவக் குற்றவாளி தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் விடுதலை நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

ரத்நாயக்க என்ற நபர்  ஒரு கொலைக் குற்றவாளியென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர். அவர்  முன்னாள் இராணுவ வீரராக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு இராணுவ வீரர் என்ற காரணத்திற்காக அவரை  விடுதலை செய்து விடலாம் என நாங்கள் முடிவு செய்து விட முடியாது. இராணுவத்தைச் சார்ந்த பலருக்கு பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

இந்த நபரைப் பொறுத்தமட்டில் இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு  வழக்கு வாதாடப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளால் அவருக்கு எதிராக வழக்கு விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர் கொலைக் குற்றவாளி. அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் சிறு குழந்தை ஒருவரும் இருந்ததாக குறிப்பிடப்பட்டது.

சிறு குழந்தையைக் கொன்றவர் விடுதலை பெற்ற பின்னர் தனது குழந்தையை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கும் படம் சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டது. அது தமிழ் மக்களால் மட்டுமல்ல, முற்போக்கான சிங்கள மக்களாலும் கூட கடுமையான விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது.

இது தற்போதைய அரசாங்கத்தின் மனப்பான்மையை, கொள்கையை பறைசாற்றுகின்றது. மறுபுறத்தில்அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்பார்த்தளவிற்கு நடைபெறவில்லை. ஆனாலும் கூட 2015இல் எங்களது ஆட்சி ஆரம்பித்த பொழுது சுமார் 200 அளவிலே அரசியல் கைதிகள் இருந்தார்கள்.

எமது அரசாங்கம் விடைபெற்று சென்ற போது அது 100ஆக குறைந்திருந்தது. பலர் சிறையிலும், புனர்வாழ்விற்காகவும், வழக்கை தொடர முடியாத காரணத்திற்காக விடுவிக்கப்பட்டும் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக அழுத்தமான கொடூரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாமென்று சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்து.

சாட்சிகள் இல்லா விட்டால் வழக்கு தொடரப்பட வேண்டாம் என்பதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். எங்களது ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டவர்கள் பற்றி எவரும் பேசுவதில்லை. விடுவிக்கப்படாதவர்கள் பற்றித் தான் பேசுகின்றார்கள்.

இதேபோல் எங்களது அரசாங்கத்தில் கணிசமான காணிகளும் விடுவிக்கப்பட்டது. இன்னமும் விடுவிக்கப்படாமலும் இருக்கின்றது. விடுவிக்கப்படாதவை போற்றிப் பேசுபவர்கள் விடுவிக்கப்பட்டவை பற்றியும் பேச வேண்டும். இதே போலத்தான் 2015இல் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் பலர் சட்டவிரோதமாக சட்டத்துக்கு புறம்பாக கடத்தப்பட்டார்கள். கைது செய்யப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் . 2015 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிற்பாடு எவரும் கொல்லப்படவில்லை. சட்டவிரோதமாக காணாமல்போகவில்லை. கைது செய்யப்படவில்லை.

கேள்வி -கடந்தகால அரசாங்கத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக நீங்கள் செயற்பட்டிருந்தீர்கள். அந்த காலகட்டப் பகுதியில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்ற சிங்கள மயமாக்கல் , பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக உங்களது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பாக உங்கள் ஆட்சிக் காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தீர்கள்?

முதலில் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றால் பிரச்சினை பேசப்பட வேண்டும். பேசுபொருள் ஆக்கப்பட வேண்டும். அது தான் பிரச்சினைத் தீர்விற்கு முதற்கட்ட அடிப்படை. சிந்திப்பவர்களுக்கு அறிவுள்ளவர்களுக்கு அது விளங்கும். நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னாலே இருந்து வடக்கு கிழக்கிலே சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கல் எல்லாம் நடந்து கொண்டு தான் இருந்தது.

ஆனால் நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்ற பிற்பாடு பல விடயங்களை பேசுபொருளாக்கினேன். உதாரணமாக திருகோணமலையிலே கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்திலே உள்ள பிள்ளையார் கோவில் பிரச்சினையில் நான் தலையிட்டிருந்தேன். அது சம்பந்தமாக அமைச்சரவையில் பேசியிருந்தேன் ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். பலமுறை இதற்குப் பொறுப்பான திணைக்களத்துடன் நான் பொருதி இருக்கின்றேன். அதைப்போல முல்லைத்தீவு நீராவியடிப் பிரச்சனையில் கூட இரண்டு முறை அங்கு சென்றிருக்கின்றேன்.

உரியவர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தி இருக்கின்றேன். அதற்கு முன்னால் எந்தவொரு அரசாங்க அமைச்சர்களும் அந்தளவிற்கு நேரடியாகச் சென்று தலையிட்டு விடயங்களை செய்ததில்லை. அதற்கு தீர்வு வழங்கப்படா விட்டாலும்கூட அதனைப் பேசுபொருளாக்கி சிங்கள பௌத்த மயமாக்கல் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதோ காரணமாக இதற்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்கு செய்துவிட்டு அழைத்த பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. எல்லாத்தரப்பும் இணைந்து கரகோசம் செய்தால் தான் சத்தம் வரும். என்னால் இயன்றதை நான் செய்திருக்கின்றேன் அவ்வளவு தான்.

கேள்வி -இலங்கையில் தமிழ் மக்களின் கூட்டு பல வகைகளில் சிதைந்திருக்கின்றது. சில முக்கியமான விடயங்களிலாவது தமிழ் மக்கள் கூட்டிணைவதற்குரிய சந்தர்ப்பம் இருக்கிறதா?  அல்லது அதற்கு என்ன வகையான செயற்பாடுகளை செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

கூட்டு சிதைந்து விட்டது என்று சொல்ல முடியாது. வடக்கு கிழக்கில் மூன்று பிரதான கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூட்டிணைவை நடாத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கிற்கு வெளியே பிரதான மூன்று கட்சிகள் தமிழர் முற்போக்கு கூட்டணி  என்ற கூட்டணியை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் நான்  தலைவராக இருக்கின்றேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் அவர்கள் இருக்கின்றார்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கில் ஒரு கூட்டணி இருக்கின்றது. வடகிழக்கிற்கு வெளியே ஒரு கூட்டணி இருக்கின்றது. வடக்கில் கூட்டமைப்பிற்கு வெளியே இன்னும் சில கட்சிகள்   இருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருக்கின்றது. தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணி இருக்கின்றது. ஈ.பி.டி.பி இருக்கின்றது.தமிழ் மக்கள் கூட்டணியில் கூட மூன்று அல்லது நான்கு கட்சிகள் கூட்டிணைந்திருக்கின்றது.

தென்னிலங்கையிலே எங்கள் கூட்டணியை விட இன்னொரு கட்சி இருக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கின்றது. ஆகவே மேலோட்டமாக பார்த்து தமிழர் ஐக்கியப்படவில்லை என்று கூற முடியாது. ஐக்கியம் என்ற ஒரே காரணத்துக்காக எல்லோரையும் ஒன்றாக சேர்த்து விடவும் முடியாது.

அரசியலில் நிதானம் இருக்க வேண்டும், தூரப் பார்வை இருக்க வேண்டும், நேர்மை இருக்க வேண்டும். செயற்திறன் இருக்க வேண்டும். அரசாங்கத்தில் இருந்து கொண்டோ, எதிர்க் கட்சியில். இருந்து கொண்டோ வெறும் வெட்டிப் பேச்சுக்களை மட்டும் பேசிக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வாக்குகளை வாங்கிக்கொண்டு பாராளுமன்றம் சென்று வெறுமனே தூங்கிக் கொண்டிருக்க முடியாது.

கேள்வி-மலையக தோட்டத் தொழிலாளர்களது ஊதியம் தொடர்பான  தொடர்ச்சியான இழுபறி நிலை காணப்படுகின்றது. இதற்கான தீர்வை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

15 இலட்சம் மலையகத் தமிழர்களிலே ஒன்றரை இலட்சம் பேர் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு ஏறக்குறைய 760 ரூபாய் நாளாந்த வேதனமாகக் கிடைக்கின்றது. 1000 ரூபாவாக வேதனம் உயர்த்தப்படுமென்று வாக்குறுதி கொடுத்தவர்கள் இப்போது கொரோனாவைக் காரணம் காட்டி தர மறுக்கின்றார்கள். கொரோனாவுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. கொரோனா தாக்கத்தால் இந்த வேதன அதிகரிப்பின் தேவை அதிகமாக இருக்கின்றது.

கேள்வி: உங்களது எதிர்கால அரசியல் பயணம் எப்படி இருக்கப் போகின்றது?

என்னைப் பொறுத்தவரையில் நான் நம்பிக்கையை எப்போதும் இழப்பதில்லை. என்னுடைய பிரதான சக்தி, தகைமை என நான் கணிப்பது என்னிடம் எரிந்து கொண்டிருக்கும் நம்பிக்கை ஒளியைத் தான். எந்தச் சூறாவளியாலும் இதனை அழித்து விட முடியாது. ஆகவே நல்லது நடக்கும் என்று நம்புகின்றேன். பலம் பலவீனத்தை அடிப்படையாக வைத்து நாம் முன்னகர வேண்டும். எங்களது அரசியல் கட்சி தவிர்க்கப்பட முடியாத தேசிய அரசியல் சக்தியாக விளங்குகின்றதை யாரும் மறுத்து விட முடியாது.

 

Exit mobile version