தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை

100

இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசியதே அல்லாமல் அவர்களின் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுயலவில்லை என கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தனது இந்திய விஜயத்தின் போது, இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரை பத்திரிகையின் ஆசிரியர் பத்மா ரய் சுந்தர்ஜி நேர்காணல் கண்டிருந்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப் பகிர்வு குறித்தே தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை எனவும் தனது ஆட்சிக் காலத்தில் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக கேட்கப்பட்ட போது,

அது 1987ஆம் ஆண்டிற்குரியது. அப்போது காணப்பட்டது வேறுபட்ட ஓர் யுகம். இருந்தாலும் நரேந்திர மோடி 13ஆவது சட்டத் திருத்தம் பற்றி பேசுகின்றார்.

இந்த திருத்தச் சட்டத்தை இப்போது அப்படியே அமுல்ப்படுத்த முடியாது. அதில் சில பிரிவுகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. இதை தமிழ் அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அதிகாரப் பகிர்வு குறித்தே பேசுகின்றனரே ஒழிய தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தி தொடர்பாக கவனம் செலுத்துவதில்லை.

பெரும்பான்மையான மக்களிடம் ஏதாவது சந்தேகத்திற்குரிய விடயங்களை முன்வைத்தால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. பெரும்பான்மை மக்களின் இணக்கம் இல்லாமல் எந்த ஒரு தீர்வையும் வழங்க முடியாது. அதுவே யதார்த்தம். பெரும்பான்மை மக்களை தெளிவுபடுத்தினால் அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை.

அனைவருக்கும் சமஉரிமை வழங்குவதோடு, அவர்கள் கௌரவமாக வாழ்வதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்குதல் போன்றனவும் அந்த தீர்வுத் திட்டத்தில் அடங்கியுள்ளன.

தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாட தயாராக உள்ளேன்.

தங்களின் இந்திய விஜயத்தின் போது, வைகோ உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது குறித்து தங்களின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு,

அவர்கள் மக்களின் நலன்கள் குறித்து பார்ப்பதில்லை. வீதித் தடைகளை ஏற்படுத்தாமல் எங்களுக்கு உதவி புரிய வேண்டும். யதார்த்தவாதிகளாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.