தமிழர் மரபுரிமை மாதம் மனித உரிமைகளையும் நீதியையும் நிலைநாட்ட உதவட்டும்- பற்றிமாகரன்-

78

2016 முதல் கனடா அரசாங்கம் சனவரி மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாகப் பாராளமன்றத்தில் பிரகடனப்படுத்தி கொண்டாடி வருகிறது. இவ்வருடம் முதல் பிரித்தானியத் தமிழர் வர்த்தகச் சேம்பர் சனவரி மாதத்தை இலண்டனில் தமிழர் மரபுரிமை மாதமாகக் கொண்டாடத் தொடங்கி ஐக்கிய அரசையும் சனவரி மாதத்தைத் தமிழர் மரபுரிமை மாதமாகப் பிரகடனம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மரபுரிமை என்பது ஒரு மனிதனால் அல்லது மனித இனத்தால் கடந்த காலத்தில் இருந்து பெற்ற எவற்றால் எல்லாம் இன்றையஅடையாளத்துடன் இருப்பதாகக் கருதப்படுகிறதோ அவற்றைப் பேணவும், நிகழ்காலத்தில் கடைப்பிடிக்கவும், எதிர்காலச் சந்ததிக்கு அவற்றை எவ்வித அழிவுமின்றிப் பாரப்படுத்தவும் உள்ள இயல்பான உரிமை. இந்த மரபுரிமை என்பது பிறப்பால் ஒரு மனிதன் அடைகின்ற அவனது கலாச்சார உரிமையாகவும்,மற்றைய மனித உரிமைகளுக்கு எல்லாம் அடித்தளமானதுமான உரிமையாகவும் உள்ளது. இதனால் கலாச்சார உரிமை என்பதும் மனித உரிமையே ஆகிறது.

ஒரு இனத்தின் கலாச்சாரம் அழிக்கப்பட்டால் அந்த இனமே அழிக்கப்பட்டு விடும் என்பதனால் ஒரு இனத்தின் கலாச்சாரத்தை திட்டமிட்ட முறையில் அழித்தல் கலாச்சார இனஅழிப்பு என்பது ஐக்கியநாடுகள் சபையின் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை அது தொடங்கப்பட்ட நாள் முதல் கலாச்சார உரிமைகளைப் பேணுதல் ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமை என வலியுறுத்தியும் வருகிறது.

இந்த வகையில் தான் 16.11. 1972ம் ஆண்டு பாரிசில் கூடிய ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு உலகின் கலாச்சாரத்தையும் இயற்கை மரபுரிமைகளையும் பாதுகாத்தலுக்கான சாசனத்தை உருவாக்கி, 17.12.1975 முதல் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைக்கு கொண்டுவரச் செய்தது.

2002ம் ஆண்டை மரபுரிமை பேணும் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கவுன்சிலும்(A/HRC/17/38)கலாச்சார உரிமையினை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் உள்ள உரிமை குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி அதனை முன்னெடுக்க உழைத்து வருகிறது. 2017இல் ‘கலாச்சார மரபு உரிமை’ என்பது நிகழ்காலத்தில் முக்கியமானதாக இருப்பதற்குக் காரணம் அது கடந்த காலத்தைக் குறித்த செய்திகளைத் தருவதாகவும் எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கான பாதையாகவும் இருப்பதே ஆகும். அது வெறுமனே அதனைப் பேணுதல் என்பதோடு மட்டும் அமையாது முழுமனிதத்துவப் பரிமாணத்தையும் பேணுவதாகவும் உள்ளது.

இதனால் அனைத்துலகிலும் நடைபெறும் கலாச்சார உரிமைகளைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். கலாச்சார உரிமைகள் மனித உரிமைகள் என்ற வகையில் அணுகப்பட வேண்டும். மக்களின் கலாச்சாரத்தையும் அவர்களின் உரிமைகளையும் பிரித்துப்பார்க்க முடியாது” என ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார உரிமைகளுக்கான சிறப்புப் பதிவாளர் கரிமா பெனவுனி (Karima Bennoune)மிகத் தெளிவாகத் தமது அறிக்கையில் எடுத்துரைத்தார்.

கல்லறைகள்,யுத்த நினைவுச்சின்னங்கள்,சிலைகள் என்பன வெறுமனே சடப்பொருட்கள் அல்ல அவற்றாலேயே மக்களின் இனத்துவம் மொழித்துவம் அடையாளம் பெறுகிறது. எனவே அவைகளை அழிப்பதும் ஆட்களை இனஅழிப்பு செய்வது போன்ற கொலைச்செயலே என ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்திக் கூறப்பட்டது.

எனவே தைப்பொங்கலை மையமாக வைத்து தமிழினத்தின் பண்பாட்டுப் பெருமை பேசுவது தமிழர் மரபு மாதத்தில் எந்த அளவுக்கு முக்கியமோ அதை விடப் பலமடங்கு முக்கியமானதாக ஈழத் தமிழ் மக்கள் மீது 10.01.1974இல் நடாத்தப்பட்ட யாழ்ப்பாண 4வது உலகத் தமிழராய்ச்சி கலாச்சார இனஅழிப்பு முதல் இன்று வரை தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கம் ஈழத்தமிழர்களுக்குச் செய்து வரும் கலாச்சார மரபுரிமை அழிப்புக்களை மனித உரிமைகள் மீறல் இனஅழிப்பு, இனத்துடைப்பு,மனிதாயத்துக்கு எதிரான யுத்தக்குற்றச் செயல்கள்,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் மற்றும் அனைத்துலகச் சட்டங்கள்,மரபுகளுக்கு எதிரான மனித உரிமை வன்முறைகள் என்பதை உலகிற்கும் உலகத் தமிழர்களுக்கும் எடுத்துச் சொல்லி ஈழத்தில் சீராக்கல்களை ஏற்படுத்தவும்,சட்டங்களையும் சட்ட அமுலாக்கங்களையும் ஒழுங்கு படுத்தவும்,அவற்றின் வழி உண்மைகளை நிலைநிறுத்தவும் உழைக்கும் மாதமாக இந்தத் தமிழர் மரபுமாதம் அமையட்டும்.

நிதியைப் பெறுதல் என்பது சீராக்கல்,ஒழுங்குபடுத்தல்,உண்மையை நிலைநாட்டல் வழியான பயன்பாடு என்பதை உலகத் தமிழர்கள் மனதிருத்திச் செயற்பட இந்த மரபுரிமை மாதம் உதவட்டும்.

பிரித்தானியப் பிரதமர், பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்,கனடாவின் பிரதமர், உட்பட உலகத் தலைவர்கள் இந்தத் தமிழர் மரபுரிமை மாதத்தின் மையமான தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் குறித்து அளித்துள்ள வாழ்த்துக்களில் தைப்பொங்கல் அறுவடை நன்றித் திருநாள் என்பதற்கு அப்பால் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அவர்கள் வாழும் நாடுகளின் கல்வி, வர்த்தாக, பொருளாதார, மருத்துவ, துறைகளுக்கு அவற்றின் வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்புக்களையே வியந்து போற்றி தமிழினத்தின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சங்ககாலம் முதலான தமிழின மரபணுத்தன்மையை மீள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மனிதத்துவத்துக்கு முதன்மை கொடுக்கும் பேரிலக்கியங்களின் சொந்தக்காரரான இந்தத் தமிழினத்தின் பிரிக்கப்பட முடியாத அங்கமான ஈழத் தமிழினத்தின் மனிதத்துவத்தை மண்மீது காக்கும் கடமை உலகத் தலைவர்களுக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் உண்டென்பதே மரபுரிமை மாதம் தரு தலையாய செய்தியாக உள்ளது.
மேலும் ஈழத்தில் சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் உட்பட இந்தியத் தலைவர்கள் வரை தைப்பொங்கல் தமிழர் திருநாள் என்பதை மாற்றியமைக்கக் கூடிய வகையில் இந்துக்களின் கொண்டாட்டமாகவே குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தமையைக் காணலாம்.

இன்டர்வெயித் வருடாந்த நாட்காட்டியில் கூட தை 15 மகரசங்கிரதை என்றும் இந்தியாவின் வசந்த காலத் தொடக்க நாள் என்றுமே குறிப்பிட்டுள்ளமை எந்த அளவுக்குத் தைப்பொங்கல் தமிழர் திருநாள் என்ற நிலை மாற்றப்பட்டு,தமிழர்களின் அடையாளங்கள் படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகிறது என்பதற்குச் சிறு உதாரணமாகிறது. இந்நேரத்தில் தமிழரின் மரபுரிமை மாதமான சனவரியை உலகத் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத் தனித்துவத்தை உலகிடை நிறுவும் காலமாகப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகிறது.