தமிழர் பகுதிகளில் களை கட்டும் பொங்கல் கொண்டாட்டங்கள்!

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்ற பாரம்பரிய பொங்கல் கொண்டட்டமானது இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து கிறிஸ்தவ மக்கள் என அனைவரும் இணைந்து மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் திருக்கேதிஸ்வரம் ஆலயத்தில் தலைமை குருக்கள் தலைமையில் விசேட பூஜைவழிபாடுகள் இடம் பெற்றதுடன் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தேவாலயங்களில் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அதற்கமைவாக மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இன்று காலை 5.30 மணியளவில் இறைவன் அழித்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் பொங்கி விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பேராலய பங்குத்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் திருப்பலி இடம் பெற்றது.

குறித்த பொங்கல் நிகழ்வானது மறைமாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றது. அத்துடன் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியாவிலும் சிறப்பான முறையில் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக இடம்பெறும் தைப்பொங்கல் நாளில் வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பாக பொங்கல் கொண்டாடப்பட்டதுடன் கிறிஸ்தவ மக்களால் இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திலும் பொங்கல் பொங்கப்பட்டது.

அத்துடன் வர்த்தக நிலையங்கள் மற்றும் இந்துக்களின் வீடுகளிலும் சிறப்பான முறையில் பொங்கல் கொண்டாடப்பட்டிருந்தது.