தமிழர் தேசத்தை பிரதிபலிக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணி : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து !

86
CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான தேர்வுப் போட்டியில் பங்கெடுத்திருக்கும் தமிழீழ உதைபந்தாட்ட அணியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழினம் தன்னை வலிமையுள்ள ஓர் இனமாக மாற்றுவதற்கு தனது அனைத்து துறைசார் வளங்களை, நாடுகடந்த வகையில் ஒருங்கிணைத்து வருகின்றது என்பதற்கு சான்றாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழ்இளையோர்கள் ஈழத்தமிழர் தேசத்தை பிரதிபலிக்கும் வகையில் தமிழீழ உதைபந்தாட்ட அணியாக பங்கெடுத்திருப்பதானது உற்சாகத்தினையும் நம்பிக்கையையும் தருகின்றது என தனது வாழ்த்துச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2013ம் ஆண்டு தோற்றம் பெற்ற CONIFA  Confederation of Independent Football அமைப்பானது அரசுகளற்ற இனங்களுக்கு, உலக சிறுபான்மை மக்களுக்கு, இனக்குழுமங்களுக்கு, இடம்பெயர்ந்த மக்களுக்கு என, உலக எல்லைகளைக் கடந்த வகையில் ஆடுகளத்தினை உருவாக்கி அனைத்துலக கிண்ணத்துக்கான போட்டிகளை நடாத்தி வருகின்றது. இப்போட்டிகளில் தமிழீழ அணியாக புலம்பெயர் தமிழ்இளையோர்கள் பங்கெடுத்திருப்பதானது உற்சாகத்தினையும், நம்பிக்கையினையும் உலகத்தமிழர்களுக்கு தருகின்றது.

ஈழத்தமிழினம் தன்னை வலிமையுள்ள ஓர் இனமாக மாற்றுவதற்கு தனது அனைத்து துறைசார் வளங்களை, நாடுகடந்த வகையில் ஒருங்கிணைத்து வருகின்றது என்பதற்கு சான்றாக புலம்பெயர் தேசங்களில் (பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, இத்தாலி ) இருந்து இளையோர்கள் தமிழீழ உதைபந்தாட்ட அணியாக ஒருங்கிணைந்திருப்பது, ஈழத்தமிழ் தேசத்துக்கான அரசியல் வலுவினை கொடுக்கின்றது.

நடைபெறும் தேர்வுப் போட்டியில் தமிழீழ உதைபந்தாட்ட அணி வெற்றி பெற்று, இறுதிச்சுற்றுவரைச் சென்று வெற்றிக்கிண்ணத்தை ஈழத்தமிழர் தேசத்துக்கு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இருக்கின்றது. இம்முனைப்பில் அரும்பாடுபட்டு வரும் லண்டனை தளமாக கொண்டு இயங்கும் தமிழீழ  உதைபந்தாட்ட அமைப்பையும் பாராட்டுகின்றோம்.

பங்கெடுத்திருக்கும் ஒவ்வொரு இளையோர்களும் பல்வேறு துறைகளில் தமது கல்வியையும் வாழ்வையும் செதுக்கி வரும் வேளையிலும், தமது வேராக இருக்கின்ற ஈழத்தமிழர் தேசத்தினை நெஞ்சினில் ஏந்தியவாறு தமிழீழ உதைபந்தாட்ட அணியாக களமிறங்கும் இப்பிள்ளைகளுக்க நமது உற்சாகத்தையும் ஒத்துழைப்பினையும் உலகத்தமிழர்கள் நாம் அனைவரும் வழங்குவோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்க்பபட்டுள்ளது.