தமிழர்களின் தன்னாட்சி உரிமையே அரசியல் தீர்வுக்கு அடிப்படை – பிரித்தானிய நிழல் நிதித்துறை அமைச்சர்!

252
13 Views

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தன்னாட்சி உரிமையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 12.12.2019 அன்று பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற இருக்கும் நிலையில் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்  21.11.2019  அக் கட்சியின் தலைவரும், தமிழ் மக்களுக்காகக் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக ஓயாது குரல் கொடுத்து வருபவருமான ஜெரமி கோர்பின் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதில், தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் ஊடாகவும், பொதுநலவாய அமைப்பு ஊடாகவும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது பற்றித் தனது முகநூல் (Facebook) பக்கம் ஊடாகக் காட்சிப்பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் தொழிற்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரும், நிழல் நிதித்துறை அமைச்சருமான ஜோன் மக்டொனல், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக சிறீலங்காவில் இழைக்கப்படும் கொடூர ஒடுக்குமுறைகளைத் தமிழ் இனத்தை அழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் என்றே தானும், தனது கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் அவர்களும் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இக் கொடூர ஒடுக்குமுறைகள் தமிழர் தாயகத்தை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்துள்ளதன் காரணமாகத் தொடர்வதாகவும், இதற்கு முடிவு கட்டுவதற்குத் தமிழர் தாயகத்தை விட்டு சிறீலங்கா படைகள் வெளியேற வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அமைதிவழியில் அரசியல் தீர்வு கிட்டுவது அவசியம் என்று இக் காட்சிப்பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஜோன் மக்டொனல், அவ் அரசியல் தீர்வு தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அமைவது முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகிக்கப்படுவது, புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றிருப்பது போன்றவை எதிர்காலம் பற்றிய கவலையைத் தோற்றுவித்திருப்பதாக மேலும் குறிப்பிட்டிருக்கும் பிரித்தானிய நிழல் நிதித்துறை அமைச்சர், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஈழத்தீவின் மனித உரிமைச் சூழலைக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

நன்றி: சங்கதி 24

John McDonnell

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here