தமிழகம் மாமல்லபுரத்தில் இந்திய, சீனப் பிரதமர்கள் சந்திப்பு

சென்னை கிழக்குக் கடற்கரை (ECR) சாலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன பிரதமர் ஷி ஜின்-பிங் இடையிலான முறைசாரா உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 மற்றும் 13ஆம் திகதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மத்திய மாநில அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த உச்சி மாநாட்டின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரத்திலுள்ள பல்வேறு இடங்களைப் பார்வையிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருநாட்டு தலைவர்களுக்கிடையேயான முதல் முறைசாரா உச்சி மாநாடு சென்ற ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்த போது ஹூபே மாகாண அருங்காட்சியகத்தை இருவரும் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் என்பது தமிழகத்தின் பெருமை மிக்க மிகப் பழமையான சுற்றுலா மையமாக திகழ்கின்றது. இங்கு இயற்கை வளங்கள் மிகுந்து காணப்படும். கற்சிலைகள், கண்காட்சி மையங்கள் என பலவகையான சிறப்பு பொருந்திய சுற்றுலா மையமாக இது அமைந்துள்ளது.