தடை உத்தரவிலும் திலீபனின் நினைவேந்தல் இளைஞர்களினால் முன்னெடுப்பு

11
13 Views

தியாக தீபம் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவு வாரத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் பாதுகாப்பு படைகளின் பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் உணர்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு கிழக்கில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற பொலிஸ் தலைமையகத்தின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றங்கள் ஊடாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்க ஏற்பாடாகியிருந்த பகுதிகளில், நேற்று பொலிஸார் குவிக்கப்பட்டு காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள் அனைத்தும் இரவோடிரவாக அகற்றப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே தடைகளைத் தாண்டி மேற்படி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இன்று காலை யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில்  தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது. சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு முடிவடைந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற கட்டளையைக் காணப்பித்து சிவாஜிலிங்கத்தை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.

பின்னர் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை சுற்றி சிரமாதானப் பணியை முன்னெடுப்பதற்கு இளைஞர் குழுக்கள் அவ்விடத்தில் திடீரென ஒன்று கூடியிருந்தனர். அதை அவதானித்த பொலிஸார் அங்கிருந்த இளைஞர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.

குறித்த பகுதியில் சிரமதானப்பணியை நிறைவு செய்த இளைஞர்கள் நல்லுார் கோவிலுக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வுக்கு சூழலியல் மேம்பாட்டு அமையத்தின் செயலாளர் கருநாகரன் நாவலன் தலைமைதாங்கியிருந்தார். இதில் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் வடக்கின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும் இடம்பெற்றிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here