சொம்ஸ்கி பார்வையில் மானிட மொழி;புலம்பெயர் தமிழர் புரிந்துகொள்ளவேண்டியவை- ந.மாலதி

54

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி இரண்டு விதமான அறிவியல் ஆய்வுகளில் பெயர்போனவர். அவருடைய MIT பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுகள்,  அவருக்கு “மொழியியலின் ஐன்ஸ்டீன்” என்ற பெயரை கொடுத்திருக்கிறது.

அவருடைய அரசியல் செயற்பாடுகளால் அவருக்கு வேறொரு புகழும் உண்டு. முக்கியமாக ஐ-அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு பயங்கரவாதங்களை வெளிப்படுத்தும் அவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் அவருக்கு “உலகிலே இன்று வாழும் புத்திசீவிகளில் மிக முக்கியமானவர்” என்ற பெயரை கொடுத்திருக்கிறது. இருந்தும் மைநீரோட்ட ஊடகங்களிலோ, பள்ளிக்கூடங்களிலோ இவர் அதிகம் பேசப்படுவதில்லை.

இதிலிருந்து இவரது அரசியல் செயற்பாடுகள் அதிகார மையங்களை எத்துணை பயமுறுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். உலகில் பல மில்லியன் மக்களுக்கு இவர் ஒரு “சுப்பர் ஸ்டார்”.  மையநீரோட்ட ஊடகங்கள் அவரை புறக்கணித்தும் இத்துணை புகழ் இவருக்கு இருந்தும் இவர் எளிமையின் வடிவம். இத்தளத்திலும் “நோம் சொம்ஸ்கி” என்று தேடினால் இதில் பதியப்பட்டுள்ள இவருடைய அரசியல் சார்ந்த கருத்துக்கள் சிலவற்றை படிக்கலாம்.

2019 டிசம்பர் 7ம் திகதி பல்கலைக்கழக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி இவர் தனது 91வது பிறந்த நாளை கொண்டாடினார். இதில் பல விடயங்களை பற்றி பதில் சொன்னார். மானிட மொழி ஆய்வுகள் பற்றி இவர் கூறியவற்றை தொகுத்து தருகிறது இவ்வாக்கம். சமூகத்தில் தாய்மொழி பாவனை இருந்தால் பிள்ளைகள் தாய் மொழியை கற்பது எத்துணை சுலபம் என்பதை இக்கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மாறுநிலை வளர்ச்சி காலம் (Critical development period)

உயிரினங்களிடம் இயற்கையாகவே காணப்படும் எல்லா திறன்களும் மரபணுக்களால் நிர்ணயிக்கப்பட்ட வழிகளில் வளர்ச்சியடைகின்றன. ஒரு உயிரினத்தின் குறிப்பிட்ட திறன்கள் குறிப்பிடட காலகட்டத்தில் வளர்ச்சியடைகின்றன. தவழும் நிலையிலிருந்து நடக்கும் திறனுக்கு மாறுவது, சொற்கள் மட்டுமே பேசும் திறனிலிருந்து வாக்கியங்கள் பேசும் திறனை அடைவது, மேலும் பல திறன்கள் பதின்பருவத்தில் அடைவது யாவுமே மரபணுக்களால் நிரணயிக்கப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு திறனுக்கும் ஒரு மாறுநிலை காலம் உள்ளது. அதாவது இந்த மாறுநிலை காலத்தில் அத்திறனை அடைந்துவிட்டால் தொடர்ந்து மேலதிக திறன்களின் வளர்ச்சி நடக்கும். அப்படி மாறுநிலை காலத்தில் நடக்காவிட்டால் சில திறன்கள் இல்லாமலே போய்வடும்.

உதாரணத்திற்கு பார்வை திறனை எடுத்துக்கொள்வோம். பிறந்த பூனைக்குட்டியின் கண்களை தைத்துவிட்டால் இரண்டு கிழமையில் தையலை கழற்றிவிட்டாலும் அப்பூனைக்குட்டிக்கு கண்பார்வை வராது. இந்த இரண்டு கிழமையே காண்பார்வை திறனுக்கான மாறுநிலை காலம். மனிதருக்கும் பூனைக்கும் கண்பார்வை திறன் ஒன்றே. மொழி திறனுக்கும் இவ்வாறான ஒரு மாறுநிலை வனர்ச்சி காலம் உள்ளதா? மேலும் படியுங்கள்.

அனைத்துமொழி இலக்கணம் (Universal grammar)

பல காலமாக மனிதரின் எல்லா மொழிகளுக்கும் பொதுவான ஒரு அனைத்து மொழி இலக்கணம் இருக்கிறது என்ற சிந்தனை இருந்துள்ளது. இன்று இச்சிந்தனை கைவிடப்பட்டு விட்டது. கடந்த 50 ஆண்டுகளாக அனைத்துமொழி இலக்கணம் என்பதை “உயிரிய-மொழியியல்” (bio-linguistics) என்றே புரிந்துகொள்கிறோம். அதாவது மொழியை மனிதரிடம் உள்ள ஒரு உயிரிய குணமாக ஆய்வுசெய்வது. பிறந்த குழந்தை மொழியை எவ்வாறு இலகுவாக கற்றுக்கொள்கிறது என்பதை மனித குழந்தையின் உயிரிய குணமாக ஆய்வு செய்வது. குழந்தை மொழி படிப்பதை அதன் நடப்பது போன்ற ஏனைய திறன்கள் போலவே பார்ப்பது. அப்படி பார்க்கும் போது அடிப்படையில் எல்லா மானுட மொழிகளுக்கு ஒரு பொதுக்குணம் உண்டு. வித்தியாசங்களாக தெரிவதெல்லாம் மேலோட்டமானவையே அல்லாமல் அடிப்படை வித்தியாசம் அல்ல. இவ்வாறுதான் அனைத்துமொழி இலக்கணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மானிட மொழி

மானிட மொழிகளில் உள்ள பொருட்களை குறிப்பிடும் சொற்கள், அதவது பெயர் சொற்கள், மானுட சிந்தனையில் இயற்கையாக தோன்றுபவைகளாக உள்ளன. இவையே மனிதர்களின் உள்ளார்ந்த சிந்தனைகளில் ஓடி இறுதியாக எமது ஐம்புலன்கள் ஊடாக வெளியிடப்படுகிறது. இவை ஓசை மொழியாகவோ, காட்சி மொழியாகவோ, தொட்டுணரும் மொழியாகவோ வெளிப்படுகிறது.

இந்த உள்ளார்ந்த “மானுட சிந்தனை வடிவம்” எந்த மானிட மொழியாகினும் ஒன்றாகவே இருக்கிறது. இது எனது கருத்து என்பதையும் எல்லா மொழியியலாளர்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

உங்கள் உள்ளார்ந்த சிந்தனைகளை கவனித்தீர்களானால், நீங்கள் தங்குதடையில்லாமல் உள்ளார்ந்து பேசிக்கொள்வது தெரியவரும். இப்படி உள்ளார்ந்து பேசுவதை நிறுத்துவதற்கு பெரும் முயற்சி செய்ய வேண்டும். இந்த உள்ளார்ந்த பேச்சு இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு துண்டுகளாகவே இருக்கும். அவை நீங்கள் பேசும் பொழுது கையாளும் முழுமையான வாக்கியங்களாக இருக்காது. அவை உள்ளார்ந்து ரீங்காரம் செய்த வண்ணமாக இருக்கும்.

உங்களுக்குள் இவ்வாறு வெகு துரிதகதியில் உங்கள் வெளிமனதுக்கு தெரியாமல் ரீங்காரம் செய்வதுதான் “மானிட மொழி”. இதில் சில துளிகளே உங்கள் வெளிமனதுக்கு வருகிறது. இதையே எமக்கு நாமே பேசுவது என்று சொல்கிறோம். ஆனால் தொடரச்சியாக நாம் சிக்கலான வழிகளில் சிந்தித்த வண்ணம் இருக்கிறோம். இதுவரை தெரிந்த மட்டில் இதற்கு நாம் மொழியை பாவிக்கிறோம்.

உள்ளார்ந்த சிந்தனை மொழி மர்மமாகவே உள்ளது. ஏனெனில் இதை ஆய்வு செய்வதில் பிரச்சனைகள் உள்ளன. மொழி என்பது மனிதர்களிடம் மட்டுமே உள்ளது. வேறெந்த உயிரினங்களிடமும் இது போன்ற மொழி கையாளும் திறன் கிடையாது. அதனால் வேறு உயிரினங்களில் பரிசோதனைகள் செய்து மானிட மொழியை பற்றி அறிந்து கொள்ள முடியாது.

உதரணமான மனிதர்களின் கண்பார்வை பற்றி பூனைகள் மேல் பரிசோதனை செய்து விஞ்ஞானிகள் நிறையவே அறிந்துள்ளார்கள். இதற்காக பூனைகளைின் கண்களை மூடி தைத்தும், அதன் மூளையில் இலக்றோடுகளை (electrode) இணைத்தும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்வது சரியோ தவறோ என்பது வேறு விடயம். பூனைக்கும் மனிதருக்கும் கண்பார்வை முறைமை ஒன்றே என்பதால் இதன் மூலம் மனிதரின் கண்பார்வை முறைமையை பற்றி நிறையவே அறிந்துள்ளோம்.

அதுபோல மொழி முறைமை பற்றி ஆய்வு செய்வதற்கு வேறொரு உயிரினம் பூமியில் இல்லை. மனித குழந்தையை கொண்டு பரிசோதனைகள் செய்ய முடியாது. அப்படி செய்ய முடிந்தால் மொழி முறைமையை பற்றி நிறையவே அறிந்து கொள்ளலாம். அது முடியாததால் இது மர்மமாகவே உள்ளது. நேரடியாக முடியாவிட்டாலும் வேறுவழிகளில் ஆய்வுகள் செய்யலாம். அதையும் சவாலாக எடுத்து செய்யலாம்.

வேறுவழிகளில் கிடைக்கும் தரவுகளின்படி மானுட மொழிமுறை வளர்ச்சியில் இரண்டு மாறுநிலை காலங்கள் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒன்று  பதின்ம வயதுடன் ஒத்து வருகிறது. இது மிகவும் முக்கியமான மாறுநிலை காலமாக தெரிகிறது. இம்மாறுநிலை காலம் வரை சிறுவர்கள் மிகவும் துரிதமாக எந்த மொழியையும் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வயதுக்கு முன்னர் வேற்று மொழி இடங்களுக்கு குடியேறிய சிறுவர்கள் ஒரு ஆண்டுக்குள் அவ்விடத்து மொழியை அவ்விடத்தினர் போல பேசுவதற்கு கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் 18 வயதில் குடியேறியவர் அவ்விடத்தினர் போல பேசுவதற்கு முடிவதேயில்லை.

இன்னுமொரு மாறுநிலை காலம் 4-5 வயதில் மாறுகிறது. இவ்வயதில் உள்ள சிறுவர்கள் பல மொழிகளை இலகுவாக பேசுகிறார்கள். தாம் பல மொழிகள் பேசுகிறோம் என்ற அறிவே அவர்களுக்கு இருப்பதில்லை. இன்னாருடன் இவ்வாறு பேச வேண்டும் என்று மட்டுமே புரிந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு மாறுநிலை காலங்கள் இருப்பது மரபணுக்காளால் நிர்ணயிக்கப்பட்ட திறன்களுக்கே உள்ளன. அதனாலும் மனிதரின் மொழி திறனும் மரபணுவால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரமாக இந்த மாறுநிலை காலங்களை எடுத்துக்கொள்ளலாம்.

இதிலிருந்து புலம்பெயர் தமிழருக்கான பாடம் என்ன?

சிறுவயதில் மொழி பேசும் திறனை அடைவதன் சிறப்பை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு வீட்டில் தாய்மொழி பேசுவது போன்ற சிறப்பான வழிமுறை வேறெதுவும் இல்லை. வீட்டில் பிள்ளைகள் தாய்மொழி பேசாமல் கைவிடுவதற்கு பொதுவாக சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து வேற்று மொழியை கற்க எண்ணி தாய்மொழியை கைவிடல்.

வெளியே முன்பள்ளிகளுக்கோ பள்ளிக்கூடத்திற்கோ செல்லும் போது பிள்ளைகள் மொழி தெரியாமல் திணறுவார்கள் என்ற சிந்தனை.

பொதுவாக பிள்ளையின் பேச்சுத் திறன் பின்தங்கியுள்ளதால் பிள்ளை ஒரு மொழி மட்டும் பேசினால் நல்லது என்ற சிந்தனை.

வீட்டில் ஏற்கனவே ஒரு பிள்ளை தாய் மொழியை விட்டுவிட்டால் அப்பிள்ளை பேசும் மொழியையே அடுத்தடுத்த பிள்ளைகளும் பேசுவது நல்லது என்ற சிந்தனை.

இரண்டு மொழியை ஒரே நேரத்தில் பழகும் பிள்ளை சில சமயம் ஒரு மொழி பேசுவதை தற்காலிகமாக நிறுத்தலாம். அதனால் பதற்றம் அடைந்து ஒரு மொழி போதும் என்ற சிந்தனை.

இவ்வாறன சிந்தனைகளால் பதற்றம் அடைந்து தாய்மொழியை கைவிட்டு போகவிடுவது ஒற்றை வழிப்பாதை என்பதை நாம் உணரத் தவறுகிறோம்.

எம் பிள்ளைகளில் சிலர் மொழி பேசும் திறன் இல்லாவிட்டாலும் வாசித்து புரியும் திறனை ஓரளவு அடைந்துள்ளார்கள். இருந்தும் ஒரு வளர்ந்தோருக்கான ஆக்கத்தை வேகமாக படித்து புரியும் திறனை இவர்களால் எட்ட முடிவதில்லை. ஆக இவர்களால் அடுத்த சந்ததிக்கு மொழியை எடுத்து செல்ல முடியாது.