சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா ஏன்  முயல்கின்றது?-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

180

கொரேனா வைரசின் தாக்கம் என்பது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இன்று ஒரு பேசு பொருளாகி விட்டது. பொருளாதார வீழ்ச்சி ஒருபுறம், அரசியல் மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், உலகை மாசுபடுத்தும் வாயுங்கள் குறைந்ததால் உலகம் தூய்மை அடைந்தும் வருகின்றது.

தற்போதைய இந்த நெருக்கடியில் அதிகம் பேசப்படுவது சீனா தொடர்பில் தான். அதற்கான காரணம் கோவிட்-19 என்ற வைரஸ் அங்கு உருவாக்கியது என்று அமெரிக்கா தொடர்ந்து தெரிவித்துவரும் கருத்துக்கள்.

எங்கு உருவாகியது? எப்படி உருவாகியது? என்பது தொடர்பில் தற்போதுவரை யாருக்கும் தெளிவும் இல்லை அதற்கான ஆதாரங்களுமில்லை. ஏனெனில் பிரான்ஸ் இல் டிசம்பர் மாதம் 27 ஆம் நாளுக்கு முன்னர் கூட ஒருவர் கொரோனாவால் இறந்துள்ளது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்கா சீனா மீது தொடர்ந்து குற்றம் சுமத்துவதுடன், சீனாவை பின்தள்ள முயல்வது எதனால்?

ஏனெனில் சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் தற்போது அமெரிக்காவுக்கு மிகப்பெரும் சவாலாக பொருளாதாரத்திலும், படைத்துறையிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ந்து நிற்பது சீனா தான்.

சோவியத்தின் வீழ்ச்சிக்கான பிராதான காரணம் அதன் பொருளாதார வீழ்ச்சியே, அமெரிக்காவின் வல்லாதிக்கத்திற்கு காரணமும் அதன் பொருளாதார வளர்ச்சியே, எனவே தான் சீனா தனது பொருளாதாரத்தை முதலில் வளப்படுத்திக் கொண்டது. இது ஒரு படிப்படியான வளர்ச்சி.

2001 ஆம் ஆண்டு தான் சீனா தன்னை உலக வர்த்தக அமைப்பில் இணைத்துக் கொண்டது. அதன் பின்னர் தன்னை அறிவு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுதியது. உதாரணமாக பிரித்தானியாவின் புகழ் பெற்ற இம்பீரியல் கல்லூரிக்கு சென்று பார்த்தால் அங்கு சீனா மாணவர்களே அதிகம். அவர்கள் கல்வி கற்ற பின்னர் பிரித்தானியாவில் தங்கிவிடுவதில்லை. தமது நாட்டுக்கு சென்று தாம் கற்ற புதிய தொழில்நுட்பங்களுடன் நிறுவனங்களை ஆரம்பித்து விடுகின்றனர்.

அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு சீனா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகியது. சூடான், வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளின் விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் தன்மையை பெற்றது. 2006 ஆம் ஆண்டு அணு ஆயுத பேச்சுக்கு வடகொரியவை சீனாவே கொண்டுவந்தது.

2007 ஆம் ஆண்டு அது தனது படைத்துறையில் கவனம் செலுத்தியது, 18 விகித நிதி அதிகரிப்பை செய்து 45 பில்லியன் டொலர்களை செலவிட்டது. அதே ஆண்டு விண்ணில் இருந்த செயற்கைக் கோளையும் அது சுட்டு வீழ்த்தி தன்னை ஒரு விண்வெளிப் போருக்கு தயார்படுத்தியது. 2019 ஆம் ஆண்டு அதன் செலவீடு 219 பில்லியன் டொலர்கள் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் உள்ளது.

2008 ஆம் ஆண்டு யப்பானை பின்தள்ளி அமெரிக்காவுக்கு அதிக கடன் கொடுக்கும் நாடுகளில் முதன்மை பெற்றது. அதன் அன்றைய கொடுப்பனவு 600 பில்லியன் டொலர்கள்.

2010 ஆம் ஆண்டு மீண்டும் யப்பானை பின்தள்ளி பொருளாதாரத்தில் உலகில் இரண்டாவது நிலையை அடைந்தது. 2027 ஆம் ஆண்டு சீனா அமெரிக்காவையும் பின் தள்ளி உலகில் மிகப்பெரும் பொருளாதார நாடாக மாறும் என கணிப்பிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு தனதுபிடி ஆசியாவில் இழப்பதை அமெரிக்கா உணர்ந்தது, ஆசியா நாடுகளுக்கான உதவிகளை அதிகரித்தது. அவுஸ்திரேலியாவின் பேர்த் பகுதியில் 2500 பேர் கொண்ட கடற்படை ஈருடகப் படையினருக்கான தளத்தை ஒபாமா அரசு நிர்மாணித்தது.

2012 ஆம் ஆண்டு சீனாவின் வளர்ச்சியை தடுப்பதற்கு அமெரிக்கா தயாரானது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யப்பான் ஆகிய நாடுகள் இணைந்து சீனாவின் கனிம வள ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை விதித்தன. சீனாவில் இயங்கிவந்த சில நிறுவனங்களையும் அவை வெளியேற்றின.

அதே ஆண்டு சீனாவில் ஆட்சி மாற்றம் வந்தது, படைத்துறை ஆணையகத்தின் அதிகாரியான சி ஜின்பிங் அரச தலைவரானார்.

2014 ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் இராணுவத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் தமது தகவல்களை திருடியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது, அதற்கு பதிலடியாக அடுத்த ஆண்டு தென்சீனக் கடலில் உள்ள செயற்கைத் தீவில் சீனா தனது ஆயுதங்களை நகர்த்தியது.

2018 ஆம் ஆண்டு டொனால்ட் டிறம் அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் 800 இற்கு மேற்பட்ட பொருட்களுக்கான வரியை அதிகரித்தது. அதன் பெறுமதி 34 பில்லியன் டொலர்கள். அதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவின் 500 இற்கு மேற்பட்ட பொருட்களுக்கு வரியை அதிகரித்தது. அதன் பெறுமதியும் 34 பில்லியன் டொலர்கள்.

அதேசயம், சீனாவின் மிகப்பெரும் தொலைதொடர்பு நிறுவனமான குவாய் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி மெங் வங்சூவை நிதி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தி கனடா அரசின் ஊடாக அமெரிக்க கைது செய்திருந்தது. ஆனால் சீனா விடவில்லை, பதிலடியாக சீனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள் எனக் கூறி இரு கனேடியர்களை கைது செய்தது.

2019 ஆம் ஆண்டும் வர்த்தகப்போர் தொடர்ந்தது. சீனாவின் பொருட்கள் மீது 200 பில்லியன் டொலர்கள் வரியை அமெரிக்கா விதித்தது, சீனாவும் பதிலடியாக 60 பில்லியன் டொலர்கள் வரியை அமெரிக்காவின் பொருட்கள் மீது விதித்தது. குவாயின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு அமெரிக்கா தடை விதித்தது.

சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள கொங்கொங் நாடு தொடர்பில் மனித உரிமை அறிக்கை ஒன்றை அமெரிக்கா கொண்டுவந்தது. அதற்கு பதிலடியாக கொங்கொங் இல் உள்ள அமெரிக்க சார்பு நிறுவனங்கள் மீது சீனா தடை விதித்ததுடன், அமெரிக்க போர்க் கப்பல்களின் வரவுக்கும் தடை விதித்தது.

2020 ஆம் ஆண்டு வர்த்தக உடன்பாட்டின் முதல் கட்டம் கைச்சாத்தானது. ஆனாலும் அது முழுமை பெறவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது கோவிட்-19 இன் பிரச்சனை வெடித்துள்ளது. இந்த பிரச்சனையை முதன்மைப்படுத்தி சீனாவை தனிமைப்படுத்தி அதன் பொருளாதாரத்தை அழித்துவிட அமெரிக்கா கடும்முயற்சி செய்கின்றது. பொருளாதாரத்தில் வீழ்ந்த நாடு அதன் படைபலத்தை தக்கவைக்க முடியாது.

ஆனால் அது எவ்வளவு சாத்தியமானது என்பதே தற்போதைய கேள்விக்குறி? ஏனெனில் ஐ.நா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் உள்ள நாடுகளில் சீனாவும் அடங்கும் எனவே பாதுகாப்புச் சபை ஊடாக எதனையும் நகர்த்த முடியாது.

ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா வரையிலும் சீனாவின் பொருளாதாரத் தொடர்புகள் விரிந்துள்ளன. எனவே உலக நாடுகளை சீனாவுக்கு எதிராக ஒரு அணியில் இணைப்பதும் முடியாத காரியம்.

நுகர்வோர் தொகையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே சீனாவை பகைக்கும் நாடுகள் தமது பொருட்களை விற்பனை செய்யவும் முடியாது. அதாவது சீனாவுக்கு எதிரான அரசியல் முடிவுகளில் முதலாளிகளின் தாக்கம் அதிகம் இருக்கும்.

எனவே தான் இந்த முறை சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அறைகூவலுக்கு அதிக நாடுகள் செவிசாய்க்கவில்லை, ஐரோப்பிய நாடுகள் கூட மௌனம் காக்கின்றன. ஏனெனில் வர்த்தகப் போரிலோ, ஆயுதப் போரிலே இலகுவில் வெல்ல முடியாத சக்தியாக சீனா தன்னை மாற்றிக் கொண்டுவிட்டது. அதனை தகர்ப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும்.