சிறீலங்காவில் தொடரும் வன்முறை – சிலாபத்தில் ஊரடங்கு அமுல்

சிலாபம் காவல்துறை கட்டுப்பாட்டுப் பகுதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையிலான ஊரடங்குச் சட்டம் நாளை (13) காலை 4.00மணிவரை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவமொன்று நடைபெறப்போவதாக முகநூலில் வந்த செய்தி ஒன்றையடுத்து அதன் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

காவல் நிலையம் அருகே வந்த இளைஞர் குழு இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கடைகள் அனைத்தும் நகரத்தில் மூடப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்களை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைத்த இராணுவம் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது.

முகநூலில் வந்த தகவலை தவறாக மொழிபெயர்த்த காரணத்தால் இந்த காலவரம் ஏற்பட்டதாக சிலாபம் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அதிகமாக சிரித்தால் ஒரு நாள் அழவேண்டிவரும்” என்ற வாசகம் தவறாக “இன்று மட்டும் தான் நீங்கள் சிரிப்பீர்கள், நீங்கள் அழ இன்னும் ஒரு நாள் தான் உள்ளது” என தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

தௌஹீத் ஜமாஅத்தினரின் அலுவலகம், பள்ளிவாசல் மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகரில் எல்லா கடைகளும் மூடப்பட்டு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.