சிறீலங்காவில் தினமும் 70 பேர் புற்றுநோயால் பாதிப்பு

52

சிறீலங்காவில் தினமும் 60 தொடக்கம் 70 வரையிலானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என உலக புற்றுநோயாளர் தினம் தொடர்பில் இடம்பெற்ற மாநாட்டில் பேசும் போது வைத்தியர் நயனா டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவிலும், உலகிலும் மக்கள் அதிகளவில் இறக்கும் நோய்களில் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகில் மரணிக்கும் ஆறு போரில் ஒருவர் புற்றுநோயினால் இறக்கின்றனர்.

மார்புப் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோய் என்பன சிறீலங்காவில் ஆண்கள் மற்றும் பெண்களை அதிகமாக பாதிக்கின்றது. அவற்றை நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்.

புற்றுநோயை ஏற்படுத்துவதில் ஐந்து காரணிகள் முக்கியமானவை, உணவுப் பழக்கம், அதிக உடல் எடை, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உடகொள்ளாமை, குறைவான உடற்பயிற்சி, மது மற்றும் புகைப்பிடித்தல் என்பனவாகும்.

புற்றுநோயாளிகளில் 22 விகிதமானவர்கள் புகையிலை பயன்படுத்தும் பழக்கத்தை கொண்டவர்கள். 25 விகிதமான நோய் எச்.பி.வி என்னும் வைரசினால் உருவாகின்றது, 29 விகிதமான புற்றுநோய் அசுத்தமான காற்றினால் உருவாக்கிறது.

தினமும் 30 நிமிட உடற்பயிற்சி செய்தால் உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இது சில வகையான புற்றுநோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.