சிறீலங்காவின் நடவடிக்கை கவலை தருகின்றது – இணைக்குழு நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது தமக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கனடா, ஜேர்மனி, பிரித்தானியா, வட மசடோனியா மற்றும் மொன்ரோநீக்ரோ ஆகிய நாடுகள் தலைமையிலான இணைக் குழு நாடுகள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

இனநல்லிணக்கப்பாடு, நீதி விசாரணை போன்றவை தொடர்பில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தை நாம் தொடர்ந்து பின்பற்றவே விரும்புகிறோம்.

இந்த தீர்மானத்தை சிறீலங்கா அரசு பின்பற்றவேண்டும் என்பதுடன், மனித உரிமை ஆணைக்குழுவுடன் தொடர்ந்து பேச்சுக்களை மேற்கொள்ள வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானம், அமைதிய ஏற்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் சிறீலங்காவில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்விசார் சமூகம் என்பன சுதந்திரமாக செயற்படும் நிலை ஏற்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அந்த நிலை மாற்றம் அடைந்து வருகின்றது. அங்கு ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு அச்சுறுத்தல் தோன்றியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இது மேலும் அதிகரிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.