சிறீலங்காஅரசு இனநல்லிணக்கத்தைப் பேணவேண்டும் – இந்தியா

162

புதிதாக பதவிக்கு வந்துள்ள கோத்தபயா ராஜபக்சா தலைமையிலான சிறீலங்கா அரசு இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணவேண்டும், தமிழ் மக்கள் அமைதியாகவும், நீதியுடனும், சமமாகவும் வாழும் சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கோத்தபயாவிடம் தெரிவித்துள்ளதாக இந்திய நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியப் பிரதமரின் சிறப்புத் தூதுவராகவே வெளிவிவகார அமைச்சர் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். பிரதமரின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவுக்கு வருமாறு கோத்தபயாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இதுவே அரச தலைவர் கோத்தபாயவின் முதலாவது வெளிநாட்டுப் பயணமாகும்.

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் அமைதியாக வாழவும், அவர்களுக்கு நீதி கிடைக்கவும், ஏனைய இனங்களைப் போல சமமாக வாழவும் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூத்திசெய்யக்கூடிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஜெய்சங்கர் கோத்தபாயவிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை தான் மேற்கொள்ளவுள்ளதாக கோத்தபயா இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.