சிறகுகள் ஒடிந்தாலும் சிகரம் தொடுவோம்-மிதயா கானவி

513

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து உயிர் தப்பிப்பிழைத்து ஆனந்தகுமராசாமி இடைத்தங்கல் முகாமிற்கு வந்து விட்டோம் என்ற விதுர்சிகாவின் பெற்றோர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது அந்த வெடிச்சத்தம்!

இராணுவத்தினரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த வந்த குண்டு விதுர்ஷிகாவின் உடலை துளைத்துக் கொண்டு போனதால்… முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் இயக்கம் இழந்தது.

‘மக்களை கட்டுப்படுத்துவதற்காக சுட்டோம்’ எனறனர் படையினர்.

பல நாட்கள்… மாதங்களாகியும் மருத்துவமனையைவிட்டு வரமுடியவில்லை…!! இதனால் சுற்றித்திரியும் பள்ளிப்பருவமும், அவளது தரம் ஒன்றிற்காய் பாடசாலை செல்லவிருந்த முதல் நாள் கனவும் சின்னாபின்னமாகியது!

உடல் வலுவற்று கால்கள் பாரமாகியது!

குதூகலிக்கவேண்டிய குழந்தைப் பருவம் இப்படியாகிவிடுமென்று நினைத்துக் கூட பார்க்கவில்லை…கால்களின் உணர்ச்சி இல்லை என்பதை நம்பமுடியாத நிமிடங்கள் தந்த வலிகள் சொல்லி முடியாது.

எப்படியும் ஒருதடவை நிலத்தில இறங்கி நிற்கவேண்டும் என்றெண்ணி அடிக்கடி தோற்றுப்போன நாட்களை இன்று ஒரு புன்னகையுடன் கடந்து செல்ல இவளாலும் முடியும் என்பதை இவளின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையை காட்டுகின்றது.

எல்லோரும் ஊருக்கு திரும்பியபோது இவர்களும் முள்ளியவளை முதலாம் வட்டாரத்திற்குள் புகுந்தனர்…சொந்த நிலம்   சுடுகாடாய் கிடந்தது!.பாட்டன் வைத்த பலாமரமும் பாதி உயிராய் கிடக்க, தென்னொலையும் தேங்காயும் விற்றே வாழ்ந்திடலாம் என எண்ணி வைத்த தென்னைகள் எல்லாம் தலையற்று கிடந்தன.

எறும்பு,அரிசிக் குறுநல்களை சேர்ப்பது போல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த அத்தனை உடமைகளையும் போர் பறித்து சென்றுவிட்டது மட்டுமன்றி முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட தன் குழந்தையின் வலிகள் மறு பக்கம்…

குடும்ப வருமானங்களை இழந்தவராய் இனிவரும் நாட்களில் வாழ்க்கைச் செலவை எப்படிச் சமாளிப்பது என்ற ஏக்கத்துடன் புகுந்த  தந்தைக்கு ,வீடே இல்லாத நிலையியில் ,பாதிக்கப்பட்ட நிலையியில் எப்படி மகவை பராமரிக்கப் போகிறீர்கள் என வினவியவர்களுக்கு தனது நம்பிக்கையை மட்டுமே அவரால் பதிலாகத் தரமுடிந்தது.

ஆனால் அப்போது  அவர்கள்  அனுபவித்த துயரங்கள் அனைத்தையும் மறந்து போக வைத்திருக்கிறது மகள் விதுர்சிகாவின் பரீட்சை முடிவுகள்.!

கொழும்பு அநுராதபுரம் என்று மாறி மாறி மருத்துவமனைகளிற்குச்  சுமந்து சென்றனர், குழந்தையை எப்படியாவது சுகப்படுத்தி விடவேண்டும் என்று! ஆனாலும், அது நிரந்தரமான பாதிப்பு என்பதை தெரிந்த பெற்றோர் பட்டவலி சொல்லமுடியாத சோகம்! ஆனாலும் சோர்ந்து போகவில்லை தன்னம்பிக்கையை கொடுப்பதற்கு தாய் தந்தை பின் நிற்கவில்லை.

இரண்டாம் வகுப்பின் இரண்டாம் தவனையில் முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் பாடசாலை கல்வியைத் தொடங்கினாள்.

இடப்பெயர்வுகளை சந்தித்த பாடசாலை அவ்வளவு வசதிகளுடன் இருக்காவிட்டாலும், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் அந்தக் குழந்தையின் கல்விக்கு ஊக்கமளித்தனர்  என்பதை நன்றியுடன் கூறிக்கொள்கின்றாள்.

உடற்குறையை வென்று தன்னை மெருகேற்றிக்கொள்வது தான் இவளது ஒற்றை இலக்காகியது. வறுமை, உடல் நலக்குறைவு அவ்வப்போது அவளது  மனதை  கீறீக்கொண்டிருந்தாலும், அந்தக் கீறல்களிற்கு கல்வியால் மருந்திடலாம் என்று உறுதியாக எண்ணிக்கொள்கின்றாள்.

பெற்ற மகளுக்காக தன்னையே உருக்கி உடல் இயாலாமையை புறந்தள்ளி தன் நேரங்களை செலவுசெய்து வருகின்ற தாய்  உதயகுமாரிக்கும்..கூலி வேலை செல்லும் தந்தையின் வலிகளை துடைத்தெறிய தன் இலட்சியங்களை விரிவுபடுத்தினாள் விதுர்சிகா!

சாதுவான பெண்ணாக இருந்தாலும் தன்னம்பிக்கையில் சிகரம் தொடும் குரல்!

பாடசாலையில் மாணவர்கள் விளையாடும் போதெல்லாம் தன் நிலையை எண்ணி வருந்துவதை தவிர்த்து, மாற்று வழி தேடத்தொடங்கினாள்; புத்தங்களை வாசிக்கப் பழக்கப்படுத்தினாள்.சாதனைப்பெண்களின் சரித்திரங்களை அதிகம் விரும்பிப்படிப்பது அவளது பொழுது போக்காகியது.

கிடைக்கவில்லை என்பதை எண்ணி வருந்துவதை விடுத்து கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனக்கு சாதகமானவற்றை தேர்வு செய்வதுதான் அவளது வெற்றிகளிற்கு படிக்கல்லாகியது.!

ஒளியை நோக்கி முகத்தை திருப்பினாள்… நிழல் பின்னுக்குத்தான் செல்ல வேண்டும் என்பது இவள் வாழ்விலும்  உண்மையாகியது.

விஞ்ஞானம்இ கணிதம் ஆகிய பாடங்களை விரும்பிப் படிப்பதாகக் கூறும் விதுர்ஷகாஇ 2019 ஆண்டு நடைபெற்ற கல்வி பொது  சாதாரண தரப் தரப்பரீட்சையில் 6A B2 C பெறுபேற்றை பெற்றிருந்தார்.

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்ற முடியாவிட்டாலும் சக்கர நாற்காலி  ஓட்டப்போட்டிகளில் பங்கு பற்றி வலயத்தில் வெற்றி பெற்று மாகாணம் வரை சென்று வென்றிருக்கின்றாள்.!

பாடசாலை சமூகம் தன் முயற்சிகளிற்கு பக்கபலமாக இருந்ததாகவும்,தங்கள் சிரமங்களைப் பாராமல்  வேறுபாடற்று சக்கரநாற்காலியில் இருக்கும் தன்னையும் கவனித்துக் கொண்டார்கள் என்று கண்கள் பனிக்க நன்றிகளை கூறிக்கொள்கிறாள்.

பாடசாலையை விட்டு வெளியிடங்களில் நடைபெறும் போட்டிநிகழ்வுகளில் தான் கலந்து கொள்வதில்லை என்றும்,அதற்கான போக்குவரத்து வசதி மற்றும் அவசிய தேவைகளை சாமாளிக்க முடியாது என்ற வருத்தம் அவள் உதடோரம் ஒட்டியிருந்தாலும் அந்த வலிகளிற்குள் முடங்கி விடவில்லை.

முன்னர் தனது அண்ணா சக்கரநாற்காலியில் வைத்து தன்னை பாடசாலை தள்ளிப்போனதாகவும்,இப்போ  அவர்  பல்கலைக்கழகம் சென்றபின் அம்மாவுடன் போவதாகவும் நினைவுபடுத்திக் கொண்டாள்!

முள்ளியவளையின் மணல் வீதிகளில்இ சேறு சதிகளில் புதைந்த சக்கரங்களை எடுக்க முடியாது! கடந்த நாட்களையும் மழைநீருடன் சேர்த்து கலந்து போன தாய் உதயகுமாரியின்  கண்ணீரையும் இன்று துடைத்து விட்டிருக்கின்றாள் இந்த மகள்!

தொடர்ந்து சக்கரநாற்காலியில் இருப்பது என்பது சாதாரணவிடயமல்ல காலை ஐந்து மணிக்கு எழும்பிப் படிப்பதற்கு உட்கார்ந்தால் இரவு பதினொரு மணிவரை கடின உழைப்பின் பின் தான் இன்று இந்த பெறுபேற்றைப் பெற்றுஇந்த சமூகத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்கின்றாள்.எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிரில் தெரிவது இலக்கு மட்டுமாகவே இருந்தால் எவராலும் சாதிக்கமுடியும் என்பதில் ஐயம் இல்லை!

2019 ஆம் ஆண்டு கல்விப் பொது  சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி வடமாகாணம் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றது என்ற புள்ளிவிபரம் கவலையைத் தருகின்றது.

மாணவர்கள் யாவரும் குறைந்தவர்கள் அல்ல சரியான அர்ப்பணிப்புடன் ஆசிரியர்களும், மாணவர்களும் பயணித்தால் நிச்சயம் மாற்றம் ஏற்படும். இயலாது என்று ஒன்று மில்லை என்பதை இன்று இப்படியான மாற்றுத்திறனாளி மாணவர்கள்  சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.

சிறகுகள் ஒடிக்கப்பட்டவுடன் சிதைந்து போகாமல் தன் ஒற்றை இலக்கு மட்டுமே கண்ணில் தெரிய சக்கரநாற்காலியில் இருந்தவாறே சாதித்திருக்கின்றாள்.!”நான் ஒரு வைத்தியராக வந்து என்னைப்போன்று பாதிக்கப்பட்டவர்களிற்கு சேவை செய்வதே என்  இலட்சியம்” என்கின்றாள் செல்வி மதியழகன்  விதுர்சிகா..!

முள்ளிவாய்க்கால் தந்த வலிகளில் வாடிப்போகாமல் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்திருக்கும் இந்த சாதனையாளர்களை  நாம் வாழ்த்தாமல் இருக்கமுடியாது.

சாதிக்க நினைப்பவர்களின் முதற்படி தன்னை முழுமையாக நம்புவதுதான்..!இவளும் அப்படித்தான்  அனைத்து நாட்களையும் புதுப்புது நாட்களாகவே கடக்க முயற்சித்துக் கொண்டிக்கிறாள்

கால்கள் நடக்க மறுத்தாலும்,உடல் நரம்புகள் சுள்ளென வலித்தாலும்…  ஒவ்வொரு நாளிலும் ஏதோவொன்றை சந்தோசமாக நினைத்து கொள்கின்றாள்.