சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன் மீதான துன்புறுத்தல்; ஐ.நா. அறிக்கையாளர்கள் கவலை

28
28 Views

சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐந்து பேர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள், தரிசா பஸ்டியன் தனது எழுத்துக்களுக்காகவும் இலங்கையில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காகவும் இலக்கு வைக்கப்படுகின்றார் எனத் தெரிவித்துள்ளனர்.

தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதும், அவரது கணினி கைப்பற்றப்பட்டு அவரது தொலைபேசி ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படுவதும் அவரது தகவல் மூலங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என ஐ.நா. அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் ஒரு அனுபவமிக்க ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை பாதுகாவலர் ஆவார், அவர் முன்னர் சண்டே ஒப்சேவரின் தலைமை ஆசிரியராகவும், நியூயோர்க் ரைம்ஸின் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். சட்டவிரோத கொலைகள், அரசியல் ஊழல் மற்றும் தண்டனையற்ற பிரச்னைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து அவர் எழுதியுள்ளார்.

2009 ஆம் ஆண்டில் தி சண்டே லீடர் பத்திரிக்கையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிர மதுங்க கொலை மற்றும் 2008-2009 காலப்பகுதியில் இலங்கை கடற்படை ஊழியர்களால் 11 இளைஞர்களை கடத்திக் கொலை செய்தமை பற்றியும் அவர் செய்தி வெளியிட்டார். எனவே இதன் காரணமாக பொதுமக்கள் நலன் மற்றும் மனித உரிமை தொடர்பான விடயங்கள் குறித்து எழுதுவதை ஏனைய ஊடகவியலாளர் கைவிடலாம் எனவும் ஐ.நாவின் அறிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் அவரது பணிக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்திலான தாகயிருக்கலாம் என நாங்கள் கவலையடைந்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தரிசா பஸ்டியன் அரசியல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து செய்தி வெளியிடுவதை, எழுதுவதைத் தடுப்பதற்கான முயற்சியாக இது இருக்கலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் கடத்தல் தொடர்பான விசாரணையில் பஸ்ரியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீதிமன்றத் தேடுதல் உத்தரவு அனுமதிக்கு அமைய, நாரஹேன்பிட்டி வீட்டிலிருந்து சி.ஐ.டி.யினரால் பிரபல ஊடகவியலாளர் தரிஷா பஸ்ரியனின் மடிக் கணினி உட்பட இலத்திரனியல் பொருட்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here