சிங்கள – பௌத்த முதன்மையை வெளிப்படுத்தும் தெளிவான ஒரு சமிக்ஞை; பாக்கியசோதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை கண்டி தலதாமாளிகையில் பதவியேற்றமை சிங்கள – பௌத்த பெரும்பான்மை இனத்திற்கான முதன்மைத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான சமிக்ஞையே என்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்திருக்கிறார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கடந்த புதன்கிழமை கண்டி தலதா மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

இதுகுறித்து கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மேலும் கூறுகையில்,

“கண்டி தலதா மாளிகை மதம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கும் தலமாகவே காணப்படுகின்றது. எனினும் யாரிடம் தந்த தாது இருக்கின்றதோ அவர்களே நாட்டை ஆளவேண்டும் என்ற அடிப்படையிலான தலதா மாளிகையின் பின்னணிக் கதையையும் நோக்கவேண்டும்.

எவ்வாறெனினும் தலதா மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்றமை சிங்கள – பௌத்த பெரும்பான்மை இனத்திற்கான முதன்மைத் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான சமிக்ஞையேயாகும். தற்போதைய அரசாங்கம் அதன் தேர்தல் பிரசாரசெயற்பாடுகளை தீவிர சிங்கள – பௌத்த வாதத்தை மையப்படுத்தியே மேற்கொண்டது.

அவ்வாறிருக்கையில் தற்போது அரசாங்கம் மிகவும் பாதுகாப்பானதொரு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நிலையில், அதனைப் பயன்படுத்தி அனைவரையும் புறக்கணிக்கும் விதமாக அல்லது நிரந்தரமாகவே இரண்டாம் தரப்பிரஜைகளாக்கும் வகையில் அவர்கள் அதிகாரத்தை விரிவாக்கப் போகின்றார்களா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. எனினும் அவர்கள் அவ்வாறு செயற்பட மாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.